கன்னியாகுமரி வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிகள் குறித்த விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்ட 10 விரைவுப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, டிச.31, ஜன.1 தேதிகளில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக புகைப்படங்கள் ஒட்டப்பட்ட 10 விரைவு பேருந்துகளை சென்னை, பல்லவன் சாலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 10 பேருந்துகளும் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு மாநகரத்துக்கு பயணிகள் பேருந்துகளாக இயக்கப்பட்டு, வள்ளுவர் சிலை வெள்ளி விழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, செய்தித் துறைச் செயலாளர் வே. ராஜாராமன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.