இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

முகமது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தின் இடைக்கால அரசு முகமது யூனுஸ் தலைமையில் இயங்கி வருகிறது

ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு அனுப்புமாறு அந்த நாடு கோரியுள்ளது. திங்களன்று (23-12-2024) பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், ‘ஷேக் ஹசீனாவை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக’ கூறினார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் இருக்கிறார். திங்களன்று (23-12-2024), வங்கதேச உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முகமது ஜஹாங்கிர் ஆலம் செளத்ரி, ‘ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்காக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.

வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், திங்கட்கிழமை அன்று பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “வங்கதேச ஹைகமிஷனிடம் இருந்து நாடு கடத்தல் கோரிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த விவகாரத்தில் கருத்து ஏதும் கூற நாங்கள் விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள ‘ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை, அதன் கடுமையான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான உறவுகளில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை.

வங்கதேசம் இந்தக் கோரிக்கையை வைத்தது ஏன்?

விக்ரம் மிஸ்ரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வங்கதேச பயணத்தின் போது, ​​முகமது யூனுஸை சந்தித்த இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடந்த மாதம் வங்கதேசம் சென்றிருந்தார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிறிது காலமாக நிலவி வரும் பதற்றம் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடப்பதாக தெரியவில்லை.

வங்கதேசத்தின் இந்த கோரிக்கை இந்தியாவுக்கு சங்கடத்தை அளித்துள்ளது. ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பராக கருதப்படுகிறார். அதுமட்டுமல்லாது வங்கதேசத்தின் அரசியலில் ‘ஒரு பழிதீர்க்கும் சூழல்’ நிலவும்போது, அவரை வங்கதேசத்திற்கு அனுப்பும் அபாயத்தை இந்தியா எடுக்காது.

வங்கதேசத்தின் ஜனநாயகத்தின் அடையாளமாக ஷேக் ஹசீனா இருந்ததால் அவரை நாடு கடத்த வங்கதேசம் கோருகிறது என்று முன்னாள் இந்திய தூதர் ராஜீவ் டோக்ரா நம்புகிறார்.

பிடிஐ செய்தி முகமையுடன் பேசிய டோக்ரா, “பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியின் சின்னமாகவும் ஹசீனா இருக்கிறார், ஏனெனில் அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் இந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். இப்போது விஷயங்கள் எதிர் திசையில் செல்வதாகத் தெரிகிறது, வங்கதேசத்தின் புதிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானுடனான நட்புறவை விரும்புகிறார்கள்.”

“வங்கதேசத்தின் தற்போதைய ஆட்சிக்கு எதிரான அடையாளமாக ஷேக் ஹசீனா மாறியுள்ளார். ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி சிறையில் அடைப்பதே வங்கதேச இடைக்கால அரசின் நோக்கம். எனவே அவரை வங்கதேசத்திற்கு அனுப்புவது, ஒரு அப்பாவியை ஆயுதம் ஏந்திய நபர்களிடம் ஒப்படைப்பது போன்றது” என்று கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான கோரிக்கை குறித்து வியூக விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பிராம செல்லனி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வங்கதேசத்தை ஆட்சி செய்வது, வன்முறை கும்பலின் பலத்தை நம்பி இருக்கும் ஒரு அரசாங்கம். இந்த அரசுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்தக் கோருவதற்கு அதற்கு உரிமை இல்லை.” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியா ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமா?

ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவு மிகவும் சிறப்பாக இருந்தது

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்தியா, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடியாது. அரசியல் காரணங்களுக்காக வங்கதேசம், இந்தியாவிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான நாடுகடத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் அரசியல் ரீதியாக ஒருவரை நாடு கடத்துவது குறித்து குறிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவுடனான மோதலை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வங்கதேசத்தின் இந்த நிலைப்பாடு யாரோ சிலரின் தவறான ஆலோசனையின் அடிப்படையில் உள்ளது. வங்கதேச இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்பவில்லை, அங்குள்ள இடைக்கால அரசு அந்த தலைவர்களின் அழுத்தத்தின் கீழ் வேலை செய்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனாவை இந்தியா ஒருபோதும் திருப்பி அனுப்பாது என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவிட்டுள்ள குகல்மேன், “ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எனக்கு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. அத்தகைய கோரிக்கை நிச்சயம் ஒருநாள் வரும் என்பதை இந்தியா அறிந்திருந்தது. இதற்கு இந்தியா சம்மதிக்காது என்பது வங்கதேசத்துக்கும் தெரியும். இது வெறும் சம்பிரதாயமே. இந்த கோரிக்கையானது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனா மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியா விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரக அதிகாரி திலிப் சின்ஹா ​​பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

“ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமராக இருந்தார், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பில் இருந்தார். நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள், காவல்துறையின் அட்டூழியங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் அது போன்ற பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால் இந்த வழக்குகளில் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லையெனும்போது, அவர்களை இதற்கு குற்றம் சொல்ல முடியாது.” என்கிறார்.

மேலும், “இதனால்தான், ‘நாடுகடத்தல்’ ஒப்பந்தங்களில் அரசியல் காரணங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அரசியல் சார்ந்த பணிகள் குற்றமாக கருதப்படுவதில்லை. ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேசத்தில் நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது மற்றொரு கேள்வி. அங்கு அவருக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்ற காரணமே, இது நியாயமான கோரிக்கை அல்ல என்று மக்கள் நம்புவதற்கு போதுமானதாக இருக்கும்” என்கிறார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் தூதரக அதிகாரி திலீப் சின்ஹா, “ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, தலைமை நீதிபதி மற்றும் பிற 5 நீதிபதிகள் வன்முறை கும்பலால் பதவி விலக நேரிட்டது. அதன் அர்த்தம் அவர்கள் பயத்தில் பதவி விலகினார்கள் என்பதே, இதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

“அங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை, நீதித்துறை தாக்கப்பட்டது, பாதி போலீசார் காவல்துறையை விட்டு வெளியேறிவிட்டனர். பெரும்பாலான காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வங்கதேச அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்கும்போது, இதையெல்லாம் இந்திய அரசு மனதில் கொள்ள வேண்டும்.” என்கிறார் அவர்.

இருநாடுகளிடையே அதிகரித்து வரும் பதற்றம்

முகமது யூனுஸின் ஆலோசகர் மஹ்ஃபூஸ் ஆலமின் (இடது) முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது யூனுஸின் ஆலோசகர் மஹ்ஃபூஸ் ஆலமின் (இடது) முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸின் ஆலோசகர் மஹ்ஃபூஸ் ஆலமின் முகநூல் பதிவு தொடர்பாக கடந்த வாரம் தான் சர்ச்சை எழுந்தது.

மஹ்ஃபூஸ் ஆலமின் முகநூல் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டில் வங்கதேசத்தின் ஒரு வரைபடம் இருந்தது. திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மூன்று இந்திய மாநிலங்களும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன. சர்ச்சை அதிகரித்ததையடுத்து, ஆலம் அந்தப் பதிவை நீக்கினார்.

மஹ்ஃபூஸ் ஆலமின் முகநூல் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள பிராம செல்லனி, ​​”அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் முன்னிலையில், இதே மஹ்ஃபூஸ் ஆலத்தை தான் ‘ஷேக் ஹசீனா அரசை கவிழ்ப்பதற்கு மூளையாக செயல்பட்டவர்’ என முகமது யூனுஸ் விவரித்தார்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இப்போது இந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பின் தலைவர் அகண்ட வங்கதேசத்தை விரும்புகிறார், அது இந்தியாவின் ஒரு பகுதியையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. முகமது யூனுஸ் அரசில் அமைச்சர் பதவிக்கு நிகரான அந்தஸ்து பெற்றவர் ஆலம்.” என்று செல்லனி தெரிவித்துள்ளார்.

மஹ்ஃபூஸ் ஆலமின் பதிவு குறித்து கடந்த வாரம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகம், “எங்களுக்குத் தெரிந்தவரை, அந்த முகநூல் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கிறோம்” என்று கூறியிருந்தது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்வது இது முதல் முறையல்ல. முன்னதாக 1975இல், அவர் இந்தியாவில் சிறிது காலம் இருந்தார். அது அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்ட சமயம். அந்தக் காலகட்டம் ஹசீனாவுக்கும் சோகங்கள் நிறைந்ததாக இருந்தது.

அந்த சமயத்திலும், வங்கதேச ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து வருவதாக பேசப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஹசீனாவுக்கு அங்குள்ள அமைப்பை நம்புவது எளிதாக இருக்கவில்லை. ஷேக் முஜிபுர் ரஹ்மான் உருவாக்கிய அவாமி லீக் இந்தியாவுடன் எப்போதும் நெருக்கமாகவே இருந்தது.

ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருக்கத்தால் இரு நாடுகளும் பலனடைந்து வருகின்றன. 1996இல் ஹசீனா முதல்முறையாக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, இந்தியாவுடன் ’30 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் தண்ணீர் தொடர்பான ஒரு ஒப்பந்தம்’ கையெழுத்தானது.

வங்கதேசம் நதிகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலான ஆறுகள் இந்தியா வழியாகவே வங்கதேசத்தை அடைகின்றன. இந்த நதிகளின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

1996ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கையெழுத்தான நீர் ஒப்பந்தம் தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை எனக் கூற முடியாது. வங்கதேசத்தின் மக்கள் பலர் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பினர். ஆனாலும், ஹசீனா ஆட்சியில் இருந்தபோதெல்லாம், இந்தியாவுடனான உறவுகள் நிலையானதாகவே இருந்தன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.