2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் குழுக்கள் செவ்வாய்க்கிழமை (24) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக, ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும்.
தொடர் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி கராச்சியில் தொடங்கும், இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் நடைபெறும்.
ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயிலும் விளையாடப்படும்.
பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு பாகிஸ்தான் மைதானமும் தலா மூன்று குழு ஆட்டங்களைக் கொண்டிருக்கும்.
லாகூர் இரண்டாவது அரையிறு போட்டியை நடத்துகிறது.
இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறாவிட்டால் லாகூரில் மார்ச் 9 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும்.
இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டம் டுபாயில் ஆடப்படும்.
இரு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா பங்கேற்கும் மூன்று குழு நிலைப் போட்டிகளும், முதல் அரையிறுதிப் போட்டியும் டுபாயில் நடைபெறும்.
பெப்ரவரி 19 அன்று கராச்சியில் நடக்கும் குழு ஏ போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
அடுத்த நாள் டுபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா பங்களாதேஷை எதிர்கொள்ளும்.
2023 ஆம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் புள்ளிகள் அடிப்படையில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றன.
போட்டியின் ஏ குழுவில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி வைத்திருப்பவர்களும் போட்டியின் நடத்துனர்களுமான பாகிஸ்தானும் அடங்கும்.
குழு B பிரிவில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் 2023 ஒருநாள் உலகக் கிண்ண வெற்றியாளர்களான அவுஸ்திரேலியாவும் அடங்கும்.