கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன் கருதி விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் மேற்பார்வை அதிகாரி இந்திக்க சந்திமால் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் மக்களுக்காக, மத்திய பேருந்து நிலையம் மற்றும் கொட்டாவையில் ( Kottawa ) உள்ள மகும்புர மல்டிமோடல் மையத்திலிருந்து ( Makumbura Multimodal Centre ) அனைத்து தூர பிரதேசங்களுக்குமான விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தென் மாகாணத்திற்கு செல்வோரின் நலன் கருதி மகும்புர மல்டிமோடல் சென்டரில் இருந்து போதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் பகல் மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நகருக்கு வெளியே உள்ள டிப்போக்களில் இருந்து மக்களை கொழும்பிற்கு ஏற்றிச் செல்வதற்காக மேலதிகமாக 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.