பாக்ஸிங் டே டெஸ்ட்: மெல்போர்னில் இந்தியா 10 ஆண்டு வீறுநடையை தொடருமா? ஆடுகளம் யாருக்கு சாதகம்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் நகரில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 5 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. காபா டெஸ்ட் மழையால் டிரா ஆனதால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண எம்ஜிசி மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய தூண்டுகோலாக அமையும்.
இந்திய அணியின் கவலைகள்
இந்திய அணியைப் பொருத்தவரை பாக்ஸிங் டே டெஸ்ட் மிகவும் முக்கியமானது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே பார்டர் கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்க முடியும். அஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால், 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் முன்னேறும்.
அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியமானது.
இந்திய அணியைப் பொருத்தவரை, அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ள மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஒரளவு ஒத்துழைக்கும் நிலையில் அஸ்வின் இல்லாதது உண்மையில் பலவீனம்தான். அஸ்வின் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஒரு வீரரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது.
கடந்த 3 டெஸ்ட்களிலும் டாப்ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக காட்சி தந்தது. ஜெய்ஸ்வால் கடந்த 2 டெஸ்ட்களிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. டாப்ஆர்டரில் வழக்கமாக பேட் செய்யும் ரோஹித் சர்மாவை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கி ராகுலை 3-வது வீரராக இறக்கவும் இந்த டெஸ்டில் முயற்சிக்கலாம்.
சுப்மான் கில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை. அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்படலாம். மெல்போர்ன் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறக்கூடும் என்பதால் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது ஜடேஜாவுடன் சேர்ந்து வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது
நிதிஷ் குமார் ரெட்டி கடந்த 3 டெஸ்ட்களிலுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சுப்மான் கில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் நிதிஷ் ரெட்டி இடம் உறுதியாகும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.
மெல்போர்ன் ஆடுகளத்தில் சதம் அடித்த வகையில் விராட் கோலி மட்டுமே அனுபவமானவர். அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கோலி ஒரு சதம் தவிர இந்தத் தொடரில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
ரோஹித் சர்மா கடந்த 2 டெஸ்ட்களிலும் சரியாக பேட் செய்யவில்லை. இதனால் 4வது டெஸ்டில் அவர் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக் கூடும்.
இவர்கள் தவிர ரிஷப் பந்த், ராகுல் ஆகியோரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மெல்போர்னில் தோற்காமல் பயணித்துவரும் இந்திய அணி அதைத் தக்கவைக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.
ஆஸ்திரேலிய அணி எப்படி?
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக கோன்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர லாபுஷேன், உஸ்மான் கவாஜா இருவருமே கடந்த டெஸ்ட்களில் பெரிதாக ரன் சேர்க்காததும் அந்த அணிக்கு கவலையாக உள்ளது. இந்திய அணியைப் போன்று ஆஸ்திரேலிய அணியிலும் டாப்ஆர்டர் தலைவலியாகவே இருப்பதால், மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
நடு வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் நம்பிக்கையளிக்கிறார்கள். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முதுகெலும்பாக டிராவிஸ் ஹெட் இருந்து வருகிறார்.
இவரை மட்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் அவுட்டாக்கி விட்டால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்துவிடும்.
காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் அடுத்த இரு டெஸ்ட்களிலும் விலகியது அந்த அணிக்கு பின்னடைவுதான். ஹேசல்வுட்டுக்கு பதிலாக போலந்த் அல்லது ஹெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரில் ஒருவர் அணிக்குள் வரலாம். சுழற்பந்துவீச்சில் நேதன் லயன் தவிர வேறு எந்த வீரரையும் ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யாது என்றே தெரிகிறது. கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக ஹெட்டை பயன்படுத்தலாம்.
ஒப்பீட்டளவில், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பலமாகத் தெரிந்தாலும் ஆட்டத்தின் நடுவே காய்களை நகர்த்துவதில் ஆஸ்திரேலிய அணி வேகமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி(உத்தேசம்)
உஸ்மான் கவாஜா, சாம் கோன்டாஸ், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், அலெக்ஸ் கெரே, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்ஷெல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த் அல்லது ஹெய் ரிச்சார்ட்ஸன்
இந்திய அணி (உத்தேசம்)
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது தனுஷ் கோட்டியான், ஆகாஷ் தீப், அல்லது நிதிஷ் குமார் ரெட்டி ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
மெல்போர்ன் மைதானம் எப்படி?
மெல்போர்ன் மைதானம் பாரம்பரியமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் ஏதுவாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சிவப்புநிற கூக்கபுரா பந்துக்கு ஏற்றபடி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது.
இந்த மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதத்திலும், சீமிங் செய்ய ஏதவாகவும், பந்து விரைவாக தேயாமல் இருக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு வரை எம்சிஜி மைதானத்தில் அதிகபட்சமாக 624 ரன் வரை ஆஸ்திரேலிய அணியால் குவிக்க முடிந்தது. ஆனால், ஆடுகளத்தை மாற்றி அமைத்த பின் 400க்கும் அதிகமான ரன்களைக் கடப்பதே கடினமாகிவிட்டது.
டாஸ் யார் வெல்வது? முதலில் யார் பேட் செய்வது? என்ற போட்டி இந்த மைதானத்தில் கடுமையாக இருக்கும். முதலில் பேட்செய்து ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் செய்துவிட்டால் ஆட்டத்தை கையில் எடுத்துவிடலாம் என்பதால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.
பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும், பேட்ஸ்மேனை நோக்கி பந்து வேகமாக வரும் என்பதால் பேட்ஸ்மேன்களை சோதிக்கும் களமாகவே ஆடுகளம் இருக்கும். பேட்ஸ்மேன் நிதானமாக பேட் செய்து நங்கூரமிட்டால் நல்ல ஸ்கோர் செய்யலாம்.
2021-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் 10 மி.மீ வரை புற்களை வளர விட்டிருந்தார்கள். இதனால், வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாக ஆடுகளம் மாறியது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
இந்திய அணிக்கு எதிராக 6 மிமீ அளவுக்கு புற்களை விடவும் ஆடுகள வடிவமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதில் ஒரே ஆறுதல்தரும் அம்சம், மெல்போர்னில் தற்போது 40 டிகிரி வரை வெயில் இருப்பதால், 3 நாட்களுக்குப்பின் ஆடுகளத்தில் விரிசல் ஏற்படலாம், அப்போது பேட்டிங்கிற்கு சாதகமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளம் மாறக்கூடும்.
ஆடுகள வடிவமைப்பாளர் மேட் பேஜ், தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “டெஸ்ட் போட்டியை த்ரில்லாக மாற்றும் விதத்தில் ஆடுகளத்தை மாற்றியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பிட்சை மாற்றியிருக்கிறோம். ஆடுகளத்தில் புற்களின் அளவை மாற்றி அமைத்து நாங்கள் பரிசோதித்து வருகிறோம். புற்களை லேசாக வளர அனுமதித்தால்தான் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள்” எனத் தெரிவித்தார்.
மெல்போர்னில் இதுவரை நடந்த போட்டிகள் எப்படி இருந்தன?
மெல்போர்ன் எம்ஜிசி மைதானத்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் கடைசி 9 ஆட்டங்கள் பாக்ஸிங் டே அன்று நடந்துள்ளன. இந்த 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றிகளையும், ஆஸ்திரேலிய அணி 8 வெற்றிகளையும், 2 ஆட்டங்கள் டிராவிலும் முடிந்துள்ளன.
பாக்ஸிங் டே ஆட்டங்களில் இந்திய அணி 5 தோல்விகளையும், இரு வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 2014ம் ஆண்டுகளுக்குப்பின் 10 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடையாமல் இருந்து வருகிறது.
இந்த மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர்(116), வீரேந்திர சேவாக்(195), விராட் கோலி(169), புஜாரா(106) ரஹானே(147, 112) ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர். இதில் விராட் கோலி மட்டுமே தற்போது இந்திய அணியில் இருக்கிறார்.
1977ம் ஆண்டு நடந்த டெஸ்டில்தான் இந்திய அணி மெல்போர்னில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சுனில் கவாஸ்கரின் சதம், சந்திரசேகரின் 12 விக்கெட் ஆகியவற்றால் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மெல்போர்ன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 449 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் பும்ரா, கும்ப்ளே இருவரும் தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 2014-15ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 465 ரன்கள் குவித்தது.
இந்த மைதானத்தில் கோலி 316 ரன்கள் சேர்த்துள்ளார், பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வீரர்களுக்கு ஊக்கமாகத் திகழ்கிறார்கள்.
பாக்ஸிங் டே டெஸ்ட் வரலாறு
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும் ஆட்டமாகும். இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளும் நடத்துகின்றன.
பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி ஒன்றாம் தேதிதான் நடந்துள்ளன. 1950-51 ஆஷஸ் டெஸ்ட் தொடர்கூட டிசம்பர் 22 முதல் 27வரை நடந்துள்ளது. அந்த டெஸ்டில் 4வது நாள்தான் பாக்ஸிங் டே அன்று நடந்துள்ளது. 1950க்கு முன், 1953 முதல் 1967 வரை பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி அன்று நடத்தப்படவில்லை.
ஆனால் 1974-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற நவீன பாரம்பரியம் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் நடத்துவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முறைப்படுத்தி, அந்த போட்டியை ஒளிபரப்பும் உரிமைகளை விற்பனை செய்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்தியது.
இந்த பாக்ஸிங் டே அன்று ஆஸ்திரேலிய மக்கள் ஏராளமானோர் போட்டியை காண வருவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்து நடத்தத் தொடங்கியது.
2013-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியைக் காண 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
இறுதிப்போட்டியில் இடம் யாருக்கு?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த இரு அணிகள் விளையாடப் போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடிப்பது யார், இரண்டாவது இடத்தைப் பிடிப்பது யார் என்பது சஸ்பென்ஸாகவே தொடர்ந்து வருகிறது. இறுதிப்போட்டியில் மூன்றாவது முறையாக பங்கேற்க இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு இந்திய அணி அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும்.
இரு வெற்றிகள் இருந்தால் இந்திய அணி இறுதிப்போட்டியில் பங்கேற்பது உறுதியாகும். ஒருவேளை ஒரு வெற்றி, ஒரு டிரா இருந்தால் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதிருக்கும்.
ஆஸ்திரேலிய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தீவிரமாக முயன்று வருகிறது. மெல்போர்ன், சிட்னி டெஸ்டில் அந்த அணி கட்டாய வெற்றி பெற்றால் அதற்கான வழி எளிதாகும் என்பதால் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்காக கடினமாகப் போராடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.