தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தொழில் முயற்சியாளர் மன்றம், தேசிய தொழில் முயற்சி அதிகாரசபை , கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் வழங்கும் நிறுவன பிரதிநிதிகளுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளல், தரச்சான்றிதழ் பெறுதல், அனுமதிச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் உள்ள தாமதம், இயந்திர உபகரணங்கள் தேவை, சந்தை வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வங்கி முகாமையாளர்கள், யாழ் வணிகர் கழக தலைவர், பனை அபிவிருத்தி சபை , சுற்றுச்சூழல் அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம் , வர்த்தக தொழிற்துறை மன்றம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஆகியவற்றின் பிரதிநிதிகளும், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) மாவட்ட இணைப்பாளர் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.