24.12.2024
கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள் “மாமனிதர்” என மதிப்பளிப்பு.
தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர்
ஒருவரை எமது தேசம் இழந்துவிட்டது. தமிழீழ விடுதலைக்காக உழைத்த கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள், 15.12.2024 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களையும் எம்மையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவர், 1974ம் ஆண்டு உயர்கல்வி கற்பதற்காகத் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவை வந்தடைந்தார். அதன் பின்னர் 80களிலே தமிழீழத் தாயகம் நோக்கிய விடுதலைச் செயற்பாடுகளை பிரித்தானியக்கிளையுடனும் அதன் துணை அமைப்புகளுடனும் இணைந்து முன்னெடுத்திருந்தார். கடல்கள் தாண்டி கண்டங்கள் கடந்து தனது தாயகத்திற்கு வெளியே தூர தேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தேசவிடுதலைக்கு ஆற்றியமுடியுமோ அதனை இவர் பிரித்தானியா மண்ணில் இருந்தவாறு புரிந்தார்.
கலாநிதி மகேஸ்வரன் அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குமான தொடர்பு என்பது மிகவும் ஆழமானது. அவருடைய விடுதலைச் செயற்பாடுகளுக்கான மூலோபாயங்கள் தமிழீழத் தேசம் விடுதலையடையும்வரை பாதுகாக்கப்பட வேண்டியவை. 90களிலே, தமிழீழ விடுதலைப்புலிகளின், அனைத்துலகச்செயலகப் பொறுப்பாளராக இருந்த மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களோடு அருகிலிருந்து தமிழீழத் தாயகம் நோக்கிய அரசியல், இராசதந்திரம், நுண்ணாய்வு, பொருண்மியம், படையியற்தொழில்நுட்பம் எனத் தேசநிர்மாணத்திற்குத் தேவையான பலதரப்பட்ட வளங்களை ஒருங்கிணைத்து, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் கையளித்திருந்தார். அவையெல்லாம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில், துறைசார்ந்த போராளிகளின் பேராற்றலுடன் இணைந்து செயல்வடிவம் பெற்று, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்துப் பெருவெற்றிகளை ஈட்டித்தந்தது.
தமிழீழ விடுதலைப்போராட்டம் வீச்சுப் பெற்றிருந்த காலத்திலும் 2009 இற்குப் பின்னரான நெருக்கடியான காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைக்காகத் துணிச்சலோடு செயற்பட்டதோடு, பிரித்தானியாவிலே தமிழீழ விடுதலைக்கான செயற்பாடுகள் இடையறாது தொடர்வதற்கு வழிகாட்டியாகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பிரித்தானியக் கிளைப்பொறுப்பாளராகவும் செயற்பட்டது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்த மாவீரர்களது குடும்பங்கள், முன்னைநாள் போராளிகளது வாழ்வியலிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவராவார்.
புலம்பெயர் தமிழர் வரலாற்றில், பிரித்தானியா நாட்டில் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய விடுதலைச் செயற்பாடுகள், தமிழீழ வரலாற்றில் இடம்பெறும் என்பது திண்ணம். இன்றும் தாயக விடுதலைப் பணிகளுக்கு இவரின் செயற்பாடுகள் ஒரு எடுத்துக்காட்டாகவே உள்ளன. தமிழீழ விடுதலைக்கனவோடு செயற்பட்ட மகத்தான மனிதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் துயரிலும் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று, எம் தேசத்துக்கு அவர் ஆற்றிய உயரிய பணிகளுக்கும் மதிப்பளித்து, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையின் வழிகாட்டுதலில் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.