கஜகஸ்தான் விமான விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

by adminDev

கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் புதன்கிழமை (25) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கஜகஸ்தானின் அவசர அமைச்சகம் ஒரு டெலிகிராம் அறிக்கையில்,
விமானத்தில் பயணத்தவர்களில் ஐந்து பணியாளர்கள் இருந்ததாகவும், விபத்தில் உயிர் தப்பிய குறைந்தது 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டியிடம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து அவசரகால பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள ரஷ்ய ஊடக நிறுவனமான Interfax, முதற்கட்ட மதிப்பிட்டின் படி நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இரு விமானிகளும் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறியது.

அசர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜே2-8243 என்ற விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது.

இதன்போது, அக்டோவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டனர்.

கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் முதலில் விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்ததாகக் கூறியது, பின்னர் அந்த எண்ணிக்கையை 27, 28, பின்னர் 29 ஆக மாற்றியமைத்தது.

பின்னர் விபத்தில் இருந்து குறைந்தது 32 பேர் உயிர் பிழைத்ததாக அசர்பைஜானில் உள்ள சட்டாம அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

எவ்வாறெனினும், விபத்தினால் எத்தை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் தெளிவாக கூறப்படவில்லை.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தகவலின்படி, 37 பயணிகள் அசர்பைஜான் குடிமக்கள். 16 ரஷ்ய பிரஜைகள், ஆறு கஜகஸ்தானிகள் மற்றும் மூன்று கிர்கிஸ்தானி பிரஜைகளும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்