கஜகஸ்தான்: விமானம் பறவை மோதியதால் விபத்தில் சிக்கியதா? பயணிகள் என்ன ஆனார்கள்?
கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் சென்ற விமானம் ஒன்று புதன்கிழமையன்று (25-12-2024) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம் அக்டாவ் நகருக்கு அருகே தீப்பிடித்தது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் இந்த விமானம், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு சென்று கொண்டிருந்தது. பனிமூட்டம் காரணமாக அது பாதை மாறியிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் லாண்டிங் கியர் கீழே உள்ளபடி அதிவேகமாக தரை இறங்க முயன்றதை காண முடிகிறது. ரஷ்ய செய்தி ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை சரிபார்த்து உறுதி செய்துள்ளது.
தரையிறங்க முயற்சிப்பது போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது.
அவசர கால சேவைகள் துறையினர் தீயை அணைப்பது மற்றும் விமான இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பது ஆகியவை அடங்கிய, உறுதிப்படுத்தப்படாத வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த எம்ப்ரேயர்-190 ரக விமானத்தில் 62 பயணிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக அஜர்பைஜான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள். ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில பயணிகளும் அதில் இருந்தனர்.
பறவை மோதியதால் விமானம் விபத்தில் சிக்கியதா?
அக்டாவ் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றதாக அஜர்பைஜான் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து புதன் கிழமை இந்திய நேரப்படி காலை 9,25 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் காலை 11.58 மணியளவில் (இந்திய நேரம்) விபத்துக்குள்ளானதாக விமான சேவைகளை பின்தொடரும் Flightradar24 தளம் காட்டுகிறது.
அந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக பறவைக் கூட்டத்தின் மீது மோதியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்துக்கான காரணத்தை அறிய கஜகஸ்தான், அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளுமே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
“விபத்து குறித்து அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உதவ எல்லா வகையிலும் தயாராக இருந்ததாக” எம்ப்ரேயர் விமான தயாரிப்பு நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்தது.
விமான சேவை வழங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொள்ள முயன்று வருகிறது.
இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.