இந்தியாவுக்குள் ஒரு ‘பாகிஸ்தான்’ – எங்கே உள்ளது? அதனால் மக்களுக்கு என்ன பிரச்னை?
இந்தியாவுக்குள் ஒரு ‘பாகிஸ்தான்’ – எங்கே உள்ளது? அதனால் மக்களுக்கு என்ன பிரச்னை?
கடந்த 1971-ல் பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும், அதாவது இப்போதுள்ள வங்கதேசத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த வங்கதேச மக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.
போர் சமயத்தில் வங்கதேச அகதிகள் சிலர் விஜயவாடாவில் அடைக்கலம் புகுந்தனர் என்றும் அவர்களுக்காக இப்பகுதி உருவாக்கப்பட்டது என்று இப்பகுதியின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பாபு தெரிவித்தார்.
அதனால் இந்த பகுதிக்கு பாகிஸ்தான் காலனி என்ற பெயர் உருவானது.
ஆனால், அந்த சமயத்தில் இங்கு தஞ்சம் புகுந்த வங்கதேச அகதிகளில் யாரும் இப்பகுதியில் தற்போது வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவர்கள் இங்கிருந்து வெளியேறி விட்டதாக தெரிவிக்கின்றனர்.
“விசாவுக்காக தூதரகங்களில் அதிகாரிகள் எங்கள் முகவரியை பார்க்கும்போது, நாங்கள் பாகிஸ்தான் காலனியில் வசிப்பதால், அதை திரும்பத் திரும்ப சோதிக்கின்றனர். எங்களின் முகவரி குறித்து விசாரிப்பார்கள். ஒருமுறை நான் மும்பையில் விசா நேர்காணலுக்காக சென்றபோது, பாகிஸ்தான் காலனி என ஒன்று உள்ளதா என அதிகாரிகள் கேட்டனர். இந்த பகுதியில் இளைஞர்கள் பலர் படித்துவிட்டு, வெளிநாடு செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். அதற்கான ஆவணங்கள், சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பட்டா உள்ளிட்டவற்றில் பாகிஸ்தான் காலனி என்றுதான் உள்ளது. ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் அதிகாரிகள் திரும்பத் திரும்ப எங்கள் பகுதி குறித்து விசாரிப்பார்கள்.” என்று பிபிசியிடம் ராணிமேகலா சதீஷ் கூறினார்.
இந்த பிரச்னைகள் காரணமாக இப்பகுதியின் பெயரை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த கட்கா சீதாரமய்யா இப்பகுதியின் பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். தற்போதைக்கு பாகிரதா (Bhagiradha ) காலனி என பெயர் வைக்க அப்பகுதி மக்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அப்பகுதி பெயரை மாற்ற வேண்டும் என மக்கள் விரும்பினால், அதுதொடர்பாக உள்ளூர் தலைவர்கள் வாயிலாக அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என, விஜயவாடா மேயர் ராயனா பாக்யா லஷ்மி பிபிசியிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் காலனி என ஒன்று இருப்பதை அறிந்திருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள், அதுகுறித்து தாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்கின்றனர்.
விஜயவாடா வடக்குப் பகுதியின் தாசில்தார் எம். சூர்யா ராவ், சர்வே எண்கள் மற்றும் அந்த வருவாய் கோட்டத்தின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார், மேலும், அப்பகுதியின் பெயரை மாற்றுவது தொடர்பாக தங்களால் ஏதும் செய்ய முடியாது என்றும், விஜயவாடா மாநகராட்சிதான் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூர்யா ராவ் கூறினார்.
முழு விவரம் காணொளியில்…
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு