நாளை வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இம்முறை பரபரப்புக்களுடன் நடைபெறவுள்ளது.வழமையாக ஏனோ தானோவென பெரும்பாலும் கூடி தேனீரும் சிற்றுண்டிண்டியும் அருந்தி கலையும் கூட்டமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.
ஆனால் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா புண்ணியத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என கூறப்படுகின்றது.கேள்விகளிற்கு பதிலளிக்க ஏதுவாக கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதிகாரிகள் அலுவலகங்களில் தங்கியிருந்து அவசர அவசரமாக பணியாற்றி தயார் செய்கின்ற கூட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாறியுள்ளது.
இம்முறை முக்கிய பேசு பொருhளாக பூநகரி வாடியடி நகரமயமாக்கலிற்கென ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் நிதி ஒரு சதமேனும் செலவு செய்யப்படாமல் திருப்பட்டுள்ளமையே அமைந்துள்ளதாக தெரியவருகின்றது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு செலவு திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வாடியடி நகரமயமாக்கல் பணிகளை முன்னெடுக்க வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் பணி வழங்கப்பட்டிருந்தது.
அமைச்சு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு தலைமையகத்திடம் பணிக்க தொடர் கூட்டங்களை கூட்டிய அதிகாரிகள் ஒரு கட்டத்தில் வடமாகாண அலுவலக அதிகாரிகளை புறந்தள்ளி இழுத்தடித்த பின்னர் அனைத்தையும் கைவிட்டுவிட்டனர்.
இந்நிலையில் தெற்கில் ஒதுக்கீடுகளை செலவு செய்து வேலைகளை வருட இறுதியுனுள் பூரணப்படுத்திய நகர அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு தலைமைய இனவாத நோக்கில் வாடியடி ஒதுக்கீட்டை ஒரு சதம் கூட செலவு செய்யாது திருப்பியுள்ளதாக பூநகரி பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா விமர்சித்த நிலையில் நாளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ஒதுக்கிய நிதியை ஒரு சதமேனும் செலவு செய்யாது திருப்பியமை முக்கிய பேசுபொருளாகுமென தெரியவருகின்றது.
இந்நிலையில் வடமாகாணசபை அதிகாரிகள் முதல் அமைச்சர் மற்றும் ஆளுநரென அனைவரும் ஏன் நிதி திரும்பியதென தேடிக்கொண்டிருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.