நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் மெரினாவில் மறியல் போராட்டம் நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து மெரினா லூப் சாலையில் பொதுமக்கள், மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கும் நீலக்கொடி அந்தஸ்து பெறுவதற்காக, மெரினா கடற்கரையில் கட்டுமானங்களை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. நீலக்கொடி கடற்கரைகள் திட்டப்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடற்கரையில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரியத் தாவரங்கள் குறித்த ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நீலக்கொடி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மெரினா லூப் சாலையில் பொதுமக்கள், மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மயிலை நொச்சிக்குப்பம் மீனவர் கிராம சபையின் முன்னாள் துணைத் தலைவர் கு.பாரதி கூறியதாவது:
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரை நீலக்கொடி திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில் 3 இடங்களில் மட்டுமே கடற்கரைக்கு செல்வதற்கு வழி அமைக்கப்படும். இதனால், பாரம்பரியமாக அங்கு மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மேலும், இத்திட்டம் செயல்பாட்டு வந்தால், கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். கலங்கரை விளக்கம்-நொச்சிக்குப்பம் வரையிலான பகுதியை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இதற்கு எதிர்மாறாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மெரினா லூப் சாலையில் பெண்கள் ஏற்கெனவே மீன் வியாபாரம் செய்த இடத்தில் அவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு பாரதி கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.