கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு ! on Wednesday, December 25, 2024
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு
(பாறுக் ஷிஹான்)
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கல்முனை, பெரியநீலாவணை, சவளக்கடை, சம்மாந்துறை, காரைதீவு ,திருக்கோவில், அக்கரைப்பற்று,பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள தேவாலயங்களுக்கு இவ்வாறு பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அம்பாறை மாவட்ட பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்மஸ் தினத்தன்று நாடளாவிய ரீதியிலுள்ள 2000 க்கும் மேற்பட்ட ஆலயங்களில் விசேட திருப்பலி ஆராதனைகள் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த பொலிஸ் பிரிவுகளிலுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்இ அதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், தேவைப்பட்டால் இராணுவத்தினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியும் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களின் இடம்பெற்ற அசம்பாவிதங்களை போல இனிவரும் காலங்களில் நடைபெறாமலிருக்க இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்புத் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.