2 ‘எஸ்.டி.எக்ஸ்.’ செயற்கை கோள்களுடன் டிச.30-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி60

by adminDev2

விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்டிஎக்ஸ்-1 & 2 என்ற இரு சிறிய செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வரும் 30-ம் தேதி இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொலை தொடர்பு, காலநிலை, தொலை உணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக் கோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களையும் வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்த நிலையில், விண்ணில் 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்‌ஷ ஸ்டேஷன்’ என்ற இந்திய விண்வெளி மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஸ்பேடெக்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி (Space Docking) மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ வழிகாட்டுதலுடன் எஸ்டிஎக்ஸ்-1, எஸ்டிஎக்ஸ்-2 என்ற 2 சிறிய செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டன. இவை தலா 220 கிலோ எடை கொண்டவை.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இந்த 2 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இவை இரண்டும் பூமியில் இருந்து 470 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பிறகு ஒருங்கிணைக்கப்படும்.

2 விண்கலன்களை தனித்தனியாக விண்ணில் செலுத்தி, பிறகு அவற்றை ஒருங்கிணைத்தால், இந்த சாதனையை நிகழ்த்திய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். இதை வெற்றிகரமாக செயல்படுத்தினால், அமெரிக்காபோல இந்தியாவாலும் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்க முடியும். அதோடு, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது, ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொன்றுக்கு அவர்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்டின் 4-வது நிலையில் (போயம்-4) 24 ஆய்வு கருவிகள் இடம்பெற்றுள்ளன. அதில் 14 கருவிகள் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டவை. எஞ்சிய 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தவை. விண்வெளியில் ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ளும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்