இயல்பான பாலுறவை ஆபாச படங்கள் எப்படி மாற்றுகின்றன? உலகை உலுக்கிய பிரான்ஸ் பாலியல் வழக்கு உணர்த்துவது என்ன?

கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், லூசி சுன்
  • பதவி, முன்னாள் ஆசிரியர், சைகாலஜி இதழ்

* இந்த கட்டுரையில் இடம் பெறும் தகவல்கள், நிகழ்வுகள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்

பெலிகாட்டின் பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனக்கு தெரிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது இந்த வழக்கு.

பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, ஒவ்வொரு நுணுக்கமான தகவல்களையும் நான் அறிந்தேன். நான் என்னுடைய தோழிகள், மகள்கள், உடன் பணிபுரிபவர்கள், உள்ளூர் புத்தக கிளப்பில் உள்ள பெண்கள் என அனைவருடனும் இது குறித்து விவாதித்தேன்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கெசிலின் முன்னாள் கணவர், டோமினிக், அவருக்கு ரகசியமாக மயக்க மருந்துகளை கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் சந்தித்த ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து கெசிலை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

அவருடைய வீட்டிற்கு வந்த ஆண்களின் வயது 20 முதல் 70 வரை. தீயணைப்பு வீரர், பத்திரிக்கையாளர், செவிலியர், சிறை கண்காணிப்பாளர், ராணுவ வீரர் என்று பல பிரிவுகளில் பணியாற்றும் அந்த நபர்கள் டோமினிக்கின் உத்தரவை ஏற்று நடந்துள்ளனர்.

அடிபணியும் பெண்ணோடு பாலுறவு கொள்ள வேண்டும் என்ற அவர்களின் இச்சை காரணமாக, வயதான, மருந்துகளால் மயக்கமடைய வைக்கப்பட்ட ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறல்களை நடத்தியுள்ளனர்.

தெற்கு பிரான்ஸில் உள்ள மசான் என்ற சிறிய நகரத்தில்தான் பெலிகோட் குடும்பத்தினர் வசித்து வந்தனர். வழக்கில், அந்த நகரத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசித்து வந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

“நான் முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து படித்த போது, ஒரு வாரத்திற்காவது நான் எந்த ஆண் அருகிலும் நிற்க விரும்பவில்லை. என்னை திருமணம் செய்து கொள்ள இருப்பவரையும் சேர்த்துதான்” என்று என்னிடம் கூறினார் 30 வயதை கடந்த பெண்மணி ஒருவர்.

70 வயதை நெருங்க உள்ள மற்றொரு பெண், அவரின் கணவர், மகன்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் பற்றி யோசிக்காமல் இருக்கமுடியவில்லை என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

61 வயதான மருத்துவரும், எழுத்தாளரும், மனநல ஆலோசகருமான, ஸ்டெல்லா ட்ஃபி இந்த வழக்கின் தீர்ப்பு வந்த போது தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பின்வருமாறு எழுதினார்.

“நான் அனைத்து ஆண்களும் ஒன்றல்ல என்பதை நம்புகிறேன். நம்ப முயற்சி செய்கிறேன். ஆனால் கிசெலின் கிராமத்தில் வசிக்கும் அம்மாக்களும், மகள்களும், தோழிகளும், மனைவிகளும் அதைத்தான் நினைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது அவர்களுக்கு வித்தியாசம் என்னவென்று தெரிந்திருக்கும். தாங்கள் ஒரு ஆணை பார்க்கும் விதம் மாறியுள்ளது என்பதை என்னுடன் பேசும் ஒவ்வொரு பெண்ணும் கூறுகின்றனர். ஆண்களே ஆண்களைப் பார்க்கும் விதமும் இதனால் மாறியுள்ளது என்பதை நான் நம்புகிறேன்,”

தற்போது வழக்கு முடிந்துவிட்டது. ஆண்களின் இந்த வன்முறையான போக்கு எங்கிருந்து வந்தது என்பதை பார்ப்போம். ஒரு பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை என்று அவர்களுக்கு தோன்றவில்லையா?

ஒப்பீட்டளவில் மிகச்சிறிய பகுதியில் வாழும் ஆண்கள் பலரும் ஒரு பெண்ணின் மீது அதீத ஆதிக்கம் செலுத்தும் இந்த எண்ணத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த செயல் ஆண்களின் ஆசைகள் பற்றி கூறுவது என்ன? என்ற மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது.

கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஏவிக்னான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நபர்களில் சிலர்

திசை மாற்றிய இணையம்

இணையம் இல்லாமல் கிசெல் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்களின் அளவை கற்பனை செய்வது கடினம்.

டோமினிக் இந்த ஆண்களை, கண்காணிப்புக்கு உட்படுத்தாத பிரெஞ்ச் இணைய தளம் ஒன்றில் சந்தித்துள்ளார். அங்கிருந்து தான் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த இணையம், ஒரே மாதிரியான பாலியல் சார் இச்சைகளை கொண்ட மனிதர்களை இணைப்பதை எளிமையாக்கியுள்ளது. (தற்போது அது முடக்கப்பட்டுள்ளது).

கிசெலின் வழக்கறிஞர்களில் ஒருவர் இந்த இணைய தளத்தை ஒரு கொலை ஆயுதம் என்று கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில், இது இல்லாமல் இந்த வழக்கு இத்தகைய இடத்தை அடைந்திருக்காது என்றும் வாதாடினார்.

பாலுறவுகளில் ஒப்புதல் பெறுவது, தீங்கிழைக்காத போக்கு ஆகிய அணுகுமுறையை மாற்றுவதில் இணையம் தன்னுடைய பங்கையாற்றியுள்ளது. முன்பு மிகவும் தீவிரமான ஒன்றாக கருதப்பட்டவை தற்போது மிகவும் இயல்பாக்கப்பட்டுவிட்டது.

கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிசெல், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையை நிராகரித்து வழக்கை எதிர்கொண்டார்

ஆபாசப் படங்களைக் கொண்ட மாத இதழ்கள், இருண்ட கடைகளில் வாங்கப்படும் நீலப்படங்கள் துவங்கி இன்று பார்ன்ஹப் போன்ற இணையங்கள் என்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 11.4 பில்லியன் முறை இந்த இணையத்தை மொபைல் மூலம் அணுகியுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. ஆபாச படங்களின் எல்லை பரந்துபட்டுவிட்டது.

மிகவும் தீவிரமான உள்ளடக்கத்தை அதில் சேர்க்கும் போது அது மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இது போன்ற செயல்பாடுகளால் இயல்பான பாலுறவு சாதாரணமான ஒன்றாக மாறக் கூடும்.

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனில், ஆன்லைன் பயனாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, 25 முதல் 49 வயது வரை உள்ள பத்தில் ஒரு நபர் தினமும் ஆபாசப் படங்களை பார்ப்பதாக கூறியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் ஆண்கள்.

24 வயதான, டெய்ஸி, அவர் உட்பட அவருக்கு தெரிந்த பலரும் ஆபாசபடம் பார்ப்பதாக கூறுகிறார். அவர் பெண்ணிய சித்தாந்தங்களோடு இயங்கும் ஆபாச வலைதளங்களில் படங்கள் பார்ப்பதாக கூறுகிறார். அதில் தான் ‘passionate’, ‘sensual’ மற்றும் ‘rough’ போன்று தேவையான உள்ளடக்கத்தை தேர்வு செய்துகொள்ளும் வசதிகள் இருப்பதாக கூறுகிறார்.

அவருடைய ஆண் நண்பர்கள் பலரும், தற்போது ஆபாச படங்கள் பார்ப்பது இல்லை என்று கூறுவதாக தெரிவிக்கிறார். “அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போதே அதிகமாக ஆபாச படங்களை பார்த்ததால், பாலுறவில் இயல்பாக ஈடுபட இயலவில்லை,” என்று கூறியதாகவும் தெரிவிக்கிறார்.

2023ம் ஆண்டு பிரிட்டனின் குழந்தைகளுக்கான ஆணையம் நடத்திய கருத்துக் கணிப்பின் போது, 16 முதல் 21 வயது இளைஞர்களில் கால்வாசி நபர்கள் ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் போதே இணையத்தில் முதல்முறையாக ஆபாச படங்கள் பார்த்திருக்கின்றனர் என்பதை கண்டறிந்தார்.

“பெற்றோர்கள், அவர்கள் இளம் வயதில் இருக்கும் போது அணுகிய பாலியல்சார் உள்ளடக்கங்கள், இன்றைய ஆன்லைன் ஆபாச பட உலகுடன் ஒப்பிடும்போது விசித்திரமாக இருந்திருக்கும்,” என்று கூறினார் அந்த ஆணையத்தின் கமிஷனர் டேம் ரேச்சல் டி சோசா.

ஆபாச படங்கள் போக்கை மாற்றுகின்றதா?

20ம் நூற்றாண்டில் ‘ப்ளேபாய்’ இதழ்கள் பார்த்து வளர்ந்தவர்களோடு ஒப்பிடுகையில், மொபைல் போன்களில் ஆபாச படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள் வேறுபட்ட பாலியல் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள்.

நேரடியாக எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றாலும் கூட, ஆபாசப் படங்களை பார்ப்பது, தீங்கு விளைவிக்கும் பாலியல் நடவடிக்கைகள் மற்றும் பெண்களை அவர்கள் அணுகும் விதம் ஆகியவை இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன.

கொரோனா தொற்றுக்கு முன்பு பிரிட்டன் அரசால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், “ஆபாச படங்களை பார்ப்பதற்கும், அதில் நடைபெறும் பாலியல் செயல்முறைகளில் ஈடுபட விரும்புவதற்கான வாய்ப்புகளுக்கும், அதே போன்ற செயல்பாடுகளை பெண்களும் விரும்புகிறார்கள் என்று நம்பப்படுவதற்குமான வாய்ப்புகளுக்கும் தொடர்பு உள்ளது” என்று உறுதிப்படுத்தியுள்ளது.

கழுத்தை நெரிப்பது, அறைவது, எச்சில் துப்புவது போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் இதில் அடங்கும்.

டெய்ஸி இது குறித்து பேசும் போது, “கழுத்தை நெரிப்பது கழுத்தில் முத்தமிடுவது போன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு முன்பு ஒருவருடன் உறவில் இருந்த போது எனக்கு அதில் விருப்பமில்லை என்று கூறினேன். அவர் அதற்கு சரி என்று கூறிவிட்டார்,” என்றார்.

அனைத்து பெண்களும் இது குறித்து வெளிப்படையாக பேசமாட்டார்கள் என்று நம்பும் டெய்ஸி, “என்னுடைய அனுபவத்தில் பெரும்பாலான ஆண்கள், கட்டிலில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்புவதில்லை. அங்கே முழுமையான கட்டுப்பாட்டையும் ஆண்கள் எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்,” என்று கூறினார்.

டெய்ஸியை விட நாற்பது வயது மூத்தவரான சூசன் நோபல், செக்ஸ் அட்வைஸ் ஃபார் சீனியர்ஸ் என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தன்னுடைய பாலியல் ஆசைகள் குறித்து எழுதிய அவர் தற்போது இணையம் ஒன்றை நடத்தியும் வருகிறார்.

“பாலியல் வன்புணர்வு இச்சையை (rape fantasies) கொண்ட ஆபாச படங்கள், வன்முறையோடு தொடர்புடைய அத்தகைய செயலை இயல்பாக்கியுள்ளது. மேலும் பாலியல் வன்புணர்வை பெண்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒன்று என்ற பிம்பத்தை அது உருவாக்குகிறது,” என்று கூறினார் சூசன்.

கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

பட மூலாதாரம், Reuters

ஆசைகள் தொடர்பாக எழும் கேள்விகள்

பெலிகாட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்கள் தங்களை குற்றவாளிகளாக காண சிரமப்படுகின்றனர். சிலர் கிசெல், அந்த பாலுறவுக்கு ஒத்திசைவு கொடுத்தார் என்று வாதிடுகின்றனர். அல்லது அவர்கள் பாலியல்சார் விளையாட்டுகளில் பங்கேற்றதாக கருதுகின்றனர். ஆனால் பலரும் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்ட நபர் ஏவிக்னான் நீதிமன்றத்திற்கு வருகை தந்த காட்சி

எதிர்பாலீன ஈர்ப்பு கொண்ட ஒரு ஆணின் ஆசையின் அடிப்படை வடிவத்திற்கு ஒரு இருண்ட எல்லை உள்ளது. இது ஒரு குழு மனப்பான்மையாக மாறி எல்லையை தள்ளும் சூழலை உருவாக்கக் கூடும். பெண்களின் அனுபவத்திற்கு கவனமோ அக்கறையோ அது செலுத்தாது.

ஒன்லிஃபேன்ஸ் என்ற தளத்தில் செயல்படும் லில்லி பிலிப்ஸ் என்பவருடன் பாலுறவு கொள்ள, ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் ஆண்கள் வரிசையில் நின்றதன் காரணத்தை இது விளக்குகிறது.

பெண்களை இச்சைக்குரிய பொருட்களாக நினைக்கும் போக்கு, சில நேரங்களில் பெண்களின் ஆசைப் பற்றிய முழுமையான கேள்வியையும் புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும்.

வெளிப்படையாக ஆண்களின் ஆசைகள் பல நிலைகளை அடைகிறது. அது முற்றிலும் இயற்கையான நிகழ்வு. ஆனால் அது பாரம்பரியமாக, கலாசார வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அந்த வரம்புகள் மாறிவிட்டன.

பெலிகாட் வழக்கு விவகாரம் வெளிவந்த பிறகு பல்வேறு உரையாடல்களை காண இயலுகிறது. குறிப்பாக விருப்பத்துடனான பாலுறவுக்கும், விருப்பத்திற்கு மாறான பாலுறவுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை அறிவதற்காக அது நிகழ்கிறது. மேலும் அதனை சட்டத்தில் வரையறுக்க இயலுமா என்பது தொடர்பாகவும் பேசப்படுகிறது. பிரச்னை என்னவென்றால் ‘விருப்பத்துடனான’ என்பதற்கான வரையறை எது என்பதே குழப்பமான கேள்வியாக உள்ளது.

டெய்ஸி, அவர் வயதுப் பெண்கள் சிலர் தங்களின் சொந்த விருப்பங்களை புறக்கணித்துவிட்டு ஆண்களின் விருப்பங்களோடு ஒத்திசைகின்றனர் என்கிறார்.

“அவர்களுடன் இருக்கும் ஆண்கள் ஒரு விசயம் ‘ஹாட்டாக’ இருக்கிறது என்று நினைத்தால், இந்த பெண்களும் அவ்வாறே கருதுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

தங்களின் பாலியல்சார் தேவைகள் தொடர்பான அம்சங்களை ஆண்கள் ஆபாச படங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், ஆண்களின் விருப்பங்களை அது எப்படி மாற்றுகின்றது என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஒரு ஆணுடன் ஒரு பெண் தனித்து இருக்க வேண்டியதற்கான விலையாக அவரின் விருப்பங்களுக்கு ஏற்ப அப்பெண் ஒத்திசைகிறார் என்றால், ‘ஒப்புதல்’ என்பது வெறும் கறுப்புவெள்ளை விவகாரம் அல்ல.

இறுதியில், பெலிகாட் வழக்கு முடிந்துவிட்டது மற்றும் நீதி கிடைத்துவிட்டது என்று பரவலான நிம்மதி அனைவர் மத்தியிலும் இருக்கலாம். ஆனால் அது இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு அற்புதமான வலுவான பிரெஞ்சு பெண்ணின் உணர்வால் அந்த கேள்விகள் எழுந்துள்ளன. அது வெளிப்படையாக விவாதிக்கப்படுவது நல்லது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.