மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை

by guasw2

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை வேலணை – வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் “பி” தரத்திற்கு அவசர அவசரமாக தரமுயர்த்தப்பட்டது.

ஆனாலும், குறித்த தரத்திக்கு ஏற்ப ஆளணி வளங்களை நிவர்த்திக்கும் எந்தவிதமான பொறிமுறையையும் குறித்த அமைச்சர் ஏற்படுத்தவில்லை. அதன் பின்னரும் அமைக்கப்பட்ட அரசாங்கங்களில் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய தர்ப்பினரது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அது கண்டு கொள்ளப்படாத நிலையில் இருந்து வந்தது.

இருந்த குறைந்தளவான ஆளணி வளங்களை கொண்டு அந்த வைத்தியசாலையின் தரத்துக்கு ஏற்ப 24 மணி நேரமும் குறைந்த ஆளணியுடன் சேவை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இரு வைத்தியர்களே இவ்வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இரவு பகலாக ஓய்வின்றி, தமக்கான விடுப்புகள் இன்றி சேவை செய்யும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர்.

இதேபோன்று தாதியர் பற்றாக்குறையும் இவ்வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதுவும் துறைசார் அதிகாரிகள் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதும் அவ்விடயமும் அலட்சியப் போக்காக பார்க்கப்பட்டு கைவிடப்பட்டது.

ஆனாலும், குறித்த வைத்தியசாலையில் மாதாந்தம் 2500 இற்கும் அதிகமான நோயளர்களும் வருடாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்களும் சிகிச்சை பெற்று வந்ததற்கான ஆதாரங்களும் வைத்தியசாலையின் ஒட்டப்பட்டுள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தொடர்புடைய செய்திகள்