முதலில் கொலையாளிகளை தண்டிக்கட்டும்:தமிழரசு ஊடகப்பேச்சாளர்!

by wamdiness

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தலைமையிலான அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தி கருத்து சுதந்திரத்திற்காக போராடியதற்காக கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் கோரியுள்ளார்.

கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் உள்ளதோடு மட்டுமல்லாமல், கௌரவர்களாக உலாவி வருகின்றனர். அவர்களில் பலர் அதிகார சக்திகளால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றனர். சட்டவாட்சி வலுப்பெற்றால், அத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதியாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு, சிவநேசன் ஆகிய தலைவர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

மேலும், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான ரவீந்திரநாத் தலைநகரில் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. சிரேஸ்ட விரிவுரையாளர் தம்பையா அவரது வீட்டில் இருக்கும் போது பகலில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் திருமலை விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். சிவராம், நடேசன், லசந்த விக்கிரமதுங்க, எக்னலிகொட, நிமலராஜன் போன்ற 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 2006 தொடக்கம் 2015 இற்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர்.

அதனால் நாட்டின் மனிதவுரிமைகள் சட்டவாட்சி ஜனநாயகம் போன்ற விடயங்கள் கேவலப்படுத்தப்பட்டன. இவற்றுக்கெல்லாம் உரிய பரிகாரம் தேவையென்றால், சட்டவாட்சி பலப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

நாட்டின் கௌரவத்தை மீண்டும். கட்டியெழுப்ப ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் முயற்சித்தால்வரவேற்புக் கிடைக்கும். இல்லையேல் முந்திய அரசாங்கங்கள் போன்றதாக இந்த அரசாங்கமும் அமைந்து விடும்.” எனவும்  சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்