தேர்தல் நடத்தை விதிகளில் திடீர் திருத்தம் செய்த அரசு – மக்களால் இனி இதை பார்க்க முடியாதா?

ராஜீவ் குமார்

படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்
  • எழுதியவர், அன்ஷுல் சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் இணையத்தில் வெளியிடக்கூடிய காட்சிகள் (Webcasting footage) போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடுவதை தடுக்கும் வகையில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது .

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்ததன் மூலம், தேர்தல் ஆவணங்களின் ஒரு பகுதியை பொது மக்கள் அணுகுவதை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சிலரை பிபிசி தொடர்பு கொண்டாலும், அவர்கள் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில், “தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மோதி அரசு முன்னெடுக்கும் இந்த முயற்சிகள் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், வேட்பு மனுக்கள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்தல் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும்

பட மூலாதாரம், Getty Images

முந்தைய விதி என்ன?

தேர்தல் நடத்தை விதிகள், 1961, விதி 93 (2) (a)இல் திருத்தம் செய்யப்படுவதற்கு முன், ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருத்தத்திற்குப் பிறகு அதில், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், வேட்பு மனுக்கள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்தல் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும்.

படிவம் 17-சி போன்ற ஆவணங்கள் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் ஆனால் தேர்தல் தொடர்பான மின்னணு பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் பொதுவில் கிடைக்காது.

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேசியுள்ளனர்.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் பேசியுள்ள தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், “வாக்குச் சாவடிக்குள் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் தனியுரிமை என்பது முக்கியம். வாக்காளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.”

” விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேர்தல் ஆவணங்கள் பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

படிவம் 17-சி போன்ற ஆவணங்கள் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் ஆனால் தேர்தல் தொடர்பான மின்னணு பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் பொதுவில் கிடைக்காது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, படிவம் 17-சி போன்ற ஆவணங்கள் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் ஆனால் தேர்தல் தொடர்பான மின்னணு பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் பொதுவில் கிடைக்காது

திருத்தத்திற்கு முன் வெளியான உயர்நீதிமன்ற உத்தரவு

இந்த சட்டத்திருத்தத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம், ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான தேவையான ஆவணங்களை வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சா என்பவரிடம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டிசம்பர் 9-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான வீடியோ, சிசிடிவி காட்சிகள் மற்றும் படிவம் 17-சியின் நகல்களை வழங்குமாறு மஹ்மூத் பிரச்சா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்பாளர் அல்லது வேறு யாரேனும் விண்ணப்பித்தால் அதுபோன்ற வீடியோ பதிவுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்ட கையேட்டில் விதிமுறை உள்ளது என அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை எதிர்த்து வாதாடிய தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், “பிரச்சா ஹரியாணாவில் வசிப்பவர் அல்ல. அவர் எந்த சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடவில்லை, இவ்வாறான நிலையில் அவரது கோரிக்கை சரியானதல்ல” என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“தேர்தல் நடத்தை விதிகள், 1961இன் படி, வேட்பாளருக்கும் மற்றொரு நபருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், வேட்பாளருக்கு ஆவணங்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும், ஆனால் வேறு ஒருவர் என்றால் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்த வேண்டும்” என்று பிரச்சா சார்பில் கூறப்பட்டது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நீதிபதி வினோத் எஸ். பரத்வாஜ், “தேவையான ஆவணங்களை 6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சா, இந்த வழக்கின் அடுத்த கட்டத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தத் திருத்தம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மற்றொரு கேள்வியை எழுப்புகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வினோத் சர்மா.

“உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு உரிய தரவுகளை வழங்க உத்தரவிட்டது, இந்த உத்தரவுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த திருத்தம் செய்யப்பட்டது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த திருத்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் தேர்தல் ஆணையத்தின் விதிகள் மற்றும் முடிவுகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இத்தகை திருத்தம் வந்துள்ளது.” என்று கூறினார்.

2024 மக்களவைத் தேர்தலின் போதும், குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக தேர்தல் ஆணையம் இருந்தது.

அப்போது வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தாமதம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. வாக்கு சதவீதம் தொடர்பாகவும் விவாதங்கள் எழுந்தன. மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு பதிலாக வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர், “தேர்தல் நடைமுறைகள் முன்கூட்டியே முடிவு செய்யப்படுபவை. தேர்தலின் நடுவில் அதை மாற்ற முடியாது.” என்று தெரிவித்திருந்தார்.

இது தவிர, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தபால் வாக்குகள் தொடர்பான கேள்விகளும் எழுகின்றன.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஷரத் குப்தா, “இந்தத் திருத்தத்திற்கு உறுதியான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் பல்வேறு சிக்கல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது கேள்விகள் எழுப்பப்படும் சமயத்தில், இதைத் தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.

தேர்தல் நடைமுறைகள் முன்கூட்டியே முடிவு செய்யப்படுபவை. தேர்தலின் நடுவில் அதை மாற்ற முடியாது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2024 மக்களவைத் தேர்தலின் போதும், குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக தேர்தல் ஆணையம் இருந்தது.

இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையை பாதிக்குமா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த வினோத் சர்மா, “தேர்தல் ஆணையர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பணியாற்ற வேண்டும், ஆனால் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அவர் அவ்வாறு பணியாற்றவில்லை. பல சமயங்களில் எதிர்க்கட்சிகளுக்கு அவர் நேரம் ஒதுக்குவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தேர்தலை நடத்தும் ஒரு மிகப்பெரிய அமைப்பில் இப்படிப்பட்ட ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதை நீங்கள் என்னவென்று விவரிப்பீர்கள்?” என்கிறார்.

“சிசிடிவி காட்சிகள் இருக்கும் போது, ​​அதை வெளியிடாமல் இருந்தால், மக்கள் மனதில் சந்தேகம் எழுவது இயல்புதான். காட்சிகளை வெளியிடவில்லை என்றால், வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை மக்கள் எழுப்புவார்கள்” என்கிறார் சரத் குப்தா.

எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?

ஆணையத்தின் இந்த திருத்தத்திற்கு எதிராக விரைவில் சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆணையத்தின் இந்த திருத்தத்திற்கு எதிராக விரைவில் சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சமூக வலைதளமான எக்ஸ்-இல் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்துவதற்கும், வேரறுப்பதற்கும் வெளிப்படைத்தன்மை மிகவும் உதவியாக இருக்கும். வெளிப்படையான தகவல் அரசின் செயல்பாட்டின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டுதான், அனைத்து தகவல்களையும் பகிர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. பொதுமக்களுடன் அவ்வாறு பகிர்வது சட்டப்பூர்வமாக அவசியமான ஒன்று.”

“ஆனால், அந்த முடிவுக்கு இணங்குவதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக சட்டத்தில் திருத்தம் செய்து, பகிரக்கூடிய பட்டியலை சுருக்கி விட்டது. வெளிப்படைத்தன்மைக்கு தேர்தல் ஆணையம் ஏன் பயப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணையத்தின் இந்த திருத்தத்திற்கு எதிராக விரைவில் சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

“தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால், மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை பாஜக அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோதி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு பணிந்திருப்பதும், நேர்மையான நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.”

“நம் நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதில் ஏதோ மிகப்பெரிய தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.