தாலிபன் அமைப்பில் விரிசலா? தலைமையை விமர்சிக்கும் இந்த மூத்த அமைச்சர் யார்?

தாலிபன், சிராஜுதீன் ஹக்கானி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சிராஜுதீன் ஹக்கானி தாலிபன்களின் உயர்மட்டத் தலைமையை கடுமையாக விமர்சிப்பவர்.

இந்த மாதம், காபூலில் உள்ள ஒரு மதரஸாவில் நடந்த நிகழ்ச்சியில், தாலிபன் அமைச்சரவையின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் மறைமுகமாக ஒருவரை ஒருவர் விமர்சித்தனர். இந்த சம்பவம் தாலிபன் அரசாங்கத்தில் விரிசல் இருப்பதை வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில், ஹக்கானி குழு தலைவர் மற்றும் ஆப்கன் உள்துறை அமைச்சரான சிராஜுதின் ஹக்கானி, உயர் கல்வி அமைச்சர் நிடா முகம்மது நதீமுக்கு ‘குறுகிய மனப்பான்மை’ என்று குற்றம் சாட்டினார்.

நதீம், தாலிபன் தலைவரான ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகிறார்.

ஹக்கானி கந்தஹாரில் தாலிபன் தலைவருடன் “தோல்வியில்”முடிந்த சந்திப்புக்கு பிறகு காபூலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்று பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நிடா முகமது நதீம், தாலிபன் எதிர்ப்பாளர்களை மிகக் கடுமையான தொனியில் விமர்சித்திருந்தார். இவர்களை ‘அல்லாவுக்கும் இஸ்லாமிய அமைப்புக்கும் எதிரிகள், சமய நம்பிக்கையற்றவர்களின் அடிமைகள், மத மாற்றம் செய்தவர்கள் மற்றும் சமய நம்பிக்கையற்றவர்கள்’ என்று குறிப்பிட்டார். ‘முல்லாக்களும் மத குருக்களும் மட்டுமே இந்த மக்களை எதிர்த்துப் போராட முடியும்’ என்றும் நதீம் கூறினார்.

சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜலாலுதீன் ஹக்கானிக்கு தாலிபன் தலைமையிடத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த டிசம்பர் 11ம் தேதி, சிராஜுதீனின் மாமாவும், தாலிபன் அரசின் அகதிகள் விவகார அமைச்சருமான கலீலுர் ரஹ்மான் ஹக்கானி காபூலில் ‘தற்கொலை’ தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலீல் ஹக்கானி இறப்பதற்கு முன் மதரஸாவில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

நதீமுக்குப் பின் பேசிய சிராஜுதீன் ஹக்கானி தனது உரையில், “மக்களைப் பற்றி கடுமையாக பேசவோ, ஊழல்வாதிகள் என்று ஒதுக்கவோ கூடாது. ஊழல் செய்பவர்களை சீர்திருத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. மக்கள் ஊழல்வாதிகளாகவும், சமய நம்பிக்கையற்றவர்களாகவும் மாறுகிறார்கள், இதற்கு காரணம் நமது குறுகிய மனப்பான்மையும் பலவீனமும்தான்”என்று கூறினார்.

காந்தஹாரில் பிறந்த நிடா முகமது நதீம், போரில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கவில்லை என்றாலும் தாலிபன்களில் செல்வாக்கு மிகுந்த நபராகக் கருதப்படுகிறார்.

ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதாவின் பிரதிநிதியாக காபூலில் அவர் இருப்பதாக நம்பப்படுகிறது. பெண் கல்விக்குத் தடை விதிக்கும் தாலிபன் தலைவரின் முடிவை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த நபராகவும் அவர் கருதப்படுகிறார்.

மறுபுறம், மார்ச் 2022 இல் முதல் முறையாக பொதுவில் தோன்றிய சிராஜுதீன் ஹக்கானி, வெளிப்படையாக தனது கருத்துகளை வெளிப்படுத்தும் தாலிபன் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

காலப்போக்கில் அவனது தொனி கடுமையாகியது. அவர் தாலிபன் தலைமையையும், ‘கந்தஹார் வட்டத்’தையும் குறிவைத்துள்ளார்.

ஹக்கானியின் பேச்சு ஊடகங்களில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது உரையில், தாலிபன் அரசாங்கம் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது என்று ஹக்கானி எச்சரித்தார். மேலும் தனது உரையில், அவர்கள் ‘இஸ்லாமை தனியுரிமைப்படுத்தி அவமதிக்கின்றனர்’ என்றும் ஹக்கானி குற்றம் சாட்டினார்.

சிராஜுதின் ஹக்கானி கூறியதாவது, “நாம் அதிகாரத்தில் இருப்பதால், மக்கள் நமது ஒவ்வொரு வார்த்தையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை நாம் பின்பற்றக்கூடாது, இல்லையெனில் வானமும் பூமியும் ஒன்றாகிவிடும். மதத்தின் சார்பாக சர்வாதிகாரமாக நடந்து கொள்ள கூடாது. மதத்தின் பிரதிநிதிகள் என்று நம்மை நாமே சுய பிரகடனம் செய்துகொள்ள கூடாது. மதத்தை பாதுகாக்க பல ஆண்டுகளாக ஆப்கானியர்கள் தியாகங்களைச் செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

பெண் கல்விக்கு தடை பற்றிய மாறுபட்ட கருத்து

தாலிபன் நிர்வாகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிபன் நிர்வாகம் பெண் கல்விக்கு தடை விதித்துள்ளது.

சுகாதாரத் துறையில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, தாலிபன் அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் காந்தஹாரில் நடைபெற்றது. இதில் தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதாவும் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிராஜுதீன் ஹக்கானி காந்தஹாரில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும், தாலிபன் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் இரு தரப்புக்கும் இடையே ‘உடன்பாடு’ எட்டப்படவில்லை என்றும் பிபிசியிடம் ஆதாரங்கள் தெரிவித்தன.

காபூலின் தலைவராக அறியப்படும் ஹக்கானி, ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதாவின் மதவாதங்களை எதிர்கொண்டு அவரை விமர்சிக்க முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே, காபூலுக்குத் திரும்பிய பிறகு, பொதுக் கூட்டங்கள் மற்றும் உரைகளில் தனது விமர்சனத்தையும் அதிருப்தியையும் ஹக்கானி வெளிப்படுத்தத் தொடங்கினார்.

காபூலில் அங்குந்த்ஸாதாவால் நியமிக்கப்பட்ட நபர்களுக்கும் ஹக்கானிக்கு நெருக்கமானவர்களுக்கும் இடையே ‘நம்பிக்கையின்மை’ நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்வது அல்லது பாதுகாப்புப் படைகளை அவருக்கு அடிபணியச் செய்வது போன்ற பல விஷயங்களில் அங்குந்த்ஸாதா ஒருதலைப்பட்சமாக அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு மாதத்திற்கு முன்பு, உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தாலிபன் புலனாய்வு மையம் ஆகியவற்றிலிருந்து ராணுவ உபகரணங்களை விநியோகம் செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கான அனைத்து உரிமைகளையும் பறித்தார், அங்குந்த்ஸாதா.

காபூல் மற்றும் கந்தஹாரில் உள்ள தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெண் கல்வி விவகாரம் மற்றும் ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதாவின் ஒருதலைப்பட்சமான அதிகாரப் பிடியில் ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக பல்வேறு ஆதாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

தாலிபன் அரசில் ஹக்கானியைத் தவிர, பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் முஜாஹித், வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி, துணைப் பிரதமர் அப்துல் கானி பரதர், துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆகியோர் தாலிபன் தலைவரின் ‘கடுமையான நடத்தையால்’ தாலிபன் அரசுக்கு ‘பலவீனம் அல்லது சரிவு’ ஏற்பட்டுவிடும் என கவலைப்படுவதாக இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களைத் தவிர, அதிருப்தியில் உள்ள மற்ற தாலிபன் உறுப்பினர்கள் பயத்தின் காரணமாக அங்குந்த்ஸாதாவை நேரடியாக விமர்சிக்கவில்லை என்றும், ‘அமீருக்கு கீழ்ப்படியாமை’ என்று தாங்கள் குற்றம் சாட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்றும், இது அவர்களுக்கு ‘ஆபத்தான’ விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை ‘குறைவாக இல்லை’.

இதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படலாம், கந்தஹாருக்கு அழைக்கப்படலாம் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படலாம்.

தாலிபன் தலைவரை விமர்சிப்பவர்கள்

ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காந்தஹாரில் இருந்து அதிகாரத்தை தக்கவைக்க தாலிபன் உயர்மட்ட தலைவர் ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதா முயற்சித்து வருகிறார்.

தாலிபன் அமீரை சிராஜுதீன் ஹக்கானி விமர்சிப்பது புதிதல்ல, ஆனால் மற்றவர்கள் அமீரை கடுமையான தொனியில் விமர்சிப்பதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர் என்று தாலிபன் விவகார ஆய்வாளர் அந்தோணி ஜஸ்டுசி கூறுகிறார்.

“2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதா , மூத்த தாலிபன் அதிகாரிகளால் பரவலாக விமர்சிக்கப்பட்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்டது போல் தோன்றிய அமீர், இதை அறிந்ததும், நடவடிக்கை எடுத்தார். முக்கிய நபர்களை அவரே நியமித்தார். தாலிபன் அரசாங்கத்தை வழிநடத்திய சபையில் இருந்த சதிகாரர்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அவர் இந்த முயற்சிகளை முறியடித்தார்”என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ” தன்னை விமர்சிப்பது குறித்து அவர் எச்சரித்தார். முல்லா யாகூப் போன்றவர்கள் அவரது எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் மற்றும் பொதுவான மன்றங்களில் அதன்பிறகு இதுபோன்ற எதையும் கூறவில்லை” என்றும் ஜஸ்டுசி தெரிவித்தார்.

ஆனால் ஜஸ்டுசியின் கருத்துப்படி, சிராஜுதீன் ஹக்கானி இதற்கு விதிவிலக்கானவர்.

தாலிபன்களின் அடிப்படையில் இல்லாமல் முஸ்லிம் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஹக்கானியின் கருத்தியல் பின்னணி அமைந்துள்ளது. பல்கலைக் கழகத்தில் படித்த, கல்வியறிவு பெற்றவர்களை மட்டுமே அரசாங்க பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று ஹக்கானி வாதிடுகிறார்.

“இது தவிர, சிராஜுதீனுக்கும் அமீருக்கும் இடையே வேறு சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன. ஹக்கானி பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறார்”என்றும் ஜஸ்டுசி குறிப்பிடுகின்றார்.

ஹக்கானியை பிடித்தால் 10 மில்லியன் டாலர் பரிசு

அவருக்கு வளைகுடா நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின்  ஆதரவும் உள்ளது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் சிராஜுதீன் ஹக்கானியின் முக்கியப் பகுதிகளாகும்.

மேற்கத்திய சக்திகளுடன் நெருங்கிய உறவுக்கான தனது விருப்பத்தை ஹக்கானி ஒருபோதும் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், மேற்கத்திய அதிகாரிகளுடன் நடந்த பல சந்திப்புகளின் மூலம் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு வளைகுடா நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவும் உள்ளது.

“அமீருக்கு நெருக்கமானவர்கள் அமெரிக்க ராஜ தந்திரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக நம்பப்படுகிறது”என்று ஜஸ்டுசி கூறுகிறார்.

ஹக்கானியை பிடிக்க அமெரிக்க உளவுத்துறை முயற்சி செய்து,அவரைப் பிடிப்பவர்களுக்கு பத்து மில்லியன் டாலர்கள் வெகுமதி அறிவித்திருக்கும் நேரத்தில் இவை அனைத்தும் நடந்துவருகின்றன.

சிராஜுதீன் ஹக்கானி பற்றிய சமீபத்திய கட்டுரையில், “ஆப்கானிஸ்தானுக்காக குரல் கொடுக்கும் தலைவர், மாற்றத்திற்கான புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளாரா?” என்று தி நியூயார்க் டைம்ஸ் கேள்வி எழுப்பியது.

சிராஜுதீன் ஹக்கானி மூன்று வருடங்களில் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை தன்னுடன் நேரத்தை செலவிட அனுமதித்தது இதுவே முதல் முறையாகும். தனது அன்றாட வழக்கத்தை மட்டும் காட்டாமல் நாற்பது ஆண்டு கால அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

ஹக்கானியின் தொடர்புகள், செல்வாக்கு மற்றும் சட்டபூர்வமான சவால்கள்

கர்லானி பஷ்டூன்களின் ஜர்தான் குலத்திலிருந்து வந்தவர்,ஹக்கானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிராஜுதீன் ஹக்கானியின் தந்தை ஜலாலுதீன் ஹக்கானி ஒரு மத ஆளுமை.

சிராஜுதீன் ஹக்கானியின் முக்கிய கோட்டைகள் கோஸ்ட், பாக்டியா மற்றும் லோகார் ஆகிய தென்கிழக்கு மாகாணங்கள் ஆகும். கில்சாய் மற்றும் கர்லானி பஷ்டூன்கள் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.

கர்லானி பஷ்டூன்களின் ஜர்தான் பிரிவில் இருந்து வந்தவர் ஹக்கானி .

சில மேற்கத்திய நிபுணர்கள், அவரை துர்ரானி பஷ்தூன்களுடன் ஒப்பிடும் போது கில்சாய் பஷ்தூன்களின் பிரதிநிதியாகக் கருதுகின்றனர். இதற்குப் பின்னால் அதிகாரம் மற்றும் ஆதிக்கம் பற்றிய வரலாற்று பின்னணி உள்ளது.

தாலிபன் தலைவர் ஹிப்துல்லா அங்குந்த்ஸாதா , காந்தஹார், ஹெல்மண்ட் மற்றும் ஃபரா மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ள துரானி பஷ்டூன்களின் நூர்சாய் பிரிவைச் சேர்ந்தவர்.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹக்கானி தாலிபன்களுக்குள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மத ரீதியான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இது அவருக்கு தாலிபன் அரசாங்கத்தில் ஒரு ஸ்திரமான நிலையை வழங்குகிறது. தாலிபன் அமைப்பிற்குள் மதத்தை முக்கியத்துவத்திற்கு சவால் விடுப்பது அவருக்கு எளிதான காரியமல்ல. இருப்பினும், அவரது தந்தை ஜலாலுதீன் ஹக்கானிக்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருந்தது.

“தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹிபத்துல்லா அங்குந்த்ஸாதாவின் செல்வாக்கு உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் சிராஜுதீன் ஹக்கானிக்கு உள்ள ஆதரவை மதிப்பிடுவது கடினம்.” என்று அந்தோணி ஜஸ்டுசி குறிப்பிடுகின்றார்.

“தென்கிழக்கு மாகாணங்களில் உள்ள பலரும் பொதுவான பிரச்னைகளில் அவருடன் உடன்படுகிறார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை நம்பவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

ஒரு போர்க் கால தாலிபன் தலைவராக இருந்த ஹக்கானியின் கடந்த காலம், அவர்களை இன்னும் அச்சமூட்டுகின்றது.

“அநேக மக்கள், குறிப்பாக பெண்கள் அமீரை விமர்சிக்கிறார்கள். அதற்காக அவர்கள் சிராஜுதீனை ஆதரிப்பார்கள் என்று அர்த்தம் இல்லை” என்றும் ஜஸ்டுசி விளக்குகின்றார்.

கடந்த இருபது ஆண்டுகளில், குறிப்பாக காபூலில் நடந்த சில பயங்கரமான தாக்குதல்களின் பின்னணியில் சிராஜுதீன் ஹக்கானி இருந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால் சில மேற்கத்திய ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அவர் இப்போது ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் ‘தேக்க நிலை’யில் மாற்றத்திற்கான ‘நம்பிக்கை’யாக உருவெடுத்துள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.