இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வெளியிடப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வை எட்டுவதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
சந்திப்பின் பின்னராக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவார்களோ என்ற கவலை வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு மீனவ தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
“ஜனாதிபதி விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அனுகுவோம் என்ற வகையிலான கருத்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அங்கு என்ன பேசப்பட்டது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை என்பது குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே நாம் என்ன நினைக்கிறோம் என்றால், மனிதாபிமான காரணங்கள் எனக் கூறி அவர்கள் மீண்டும் எங்கள் கடலுக்கு வருவார்களோ என்ற கவலை எமக்கு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மீனவர்கள் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவுடன் கூட்டாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.