சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி ‘ஷியாம் பெனகல்’

ஷியாம் பெனகல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தி சினிமாவில் அர்த்தமுள்ள படங்களின் முன்னோடியாக ஷியாம் பெனகல் கருதப்பட்டார்.
  • எழுதியவர், யாசிர் உஸ்மான்
  • பதவி, திரைப்பட வரலாற்றாசிரியர், பிபிசிக்காக

1970களில் இந்தி சினிமாவில் பாடல்கள், இசை, காதல் கதைகளுக்காக பெரிதும் அறியப்பட்ட சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் காலகட்டத்திற்கு சவால் விடும் வகையில் கோபமிகுந்த, துடிப்பான இளைஞர் ஒருவர் சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஆனால் அவரது கோபம் யதார்த்தத்திலிருந்து விலகி, திரைப்படங்களின் மீது இருந்தது. விளம்பர உலகில் இருந்து வரும் ஒரு திரைப்பட இயக்குநர், சினிமாவை வெறும் பொழுதுபோக்கிற்கான வழிமுறையாகக் கருத மறுத்தது இன்று விசித்திரமாகத் தோன்றலாம்.

இந்தி திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல், சமூகத்தை பிரதிபலிக்கும் மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் ஒரு ஊடகமாக திரைப்படங்களை பார்த்தார்.

1974 இல் தனது முதல் படமான ‘அன்குர்’ மூலம் ஷியாம் பெனகல், பிரதான மசாலா படங்களுக்கு இணையான ஒரு மாற்று சினிமாவைத் தயாரித்தார்.

‘அன்குர்’ படத்தின் திரைக்கதையை உருவாக்க 13 ஆண்டுகளாக முயற்சி செய்தும் யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தி படங்களில் ஒரு புதிய நம்பிக்கையை, புரட்சிகரமான புதிய அலையை அன்குர் திரைப்படத்தின் மூலம் ஷியாம் பெனகல் ஏற்படுத்தினார். மாற்று சினிமாவின் முன்னோடி ஷியாம் பெனகல்.

கிராமப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ‘அன்குர்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஜமீன்தாரி முறை முடிவுக்கு வந்திருந்தாலும், சமூகத்தில் நிலவும் நிலப்பிரபுத்துவ சிந்தனை, சாதி ஏற்றத்தாழ்வு மற்றும் ஒடுக்குமுறைகளைப் பற்றி இப்படம் பேசுகிறது.

‘அன்குர்’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது. திரைக்கதை மக்களின் மனதைத் தொடும் போது, கருத்துள்ள படங்களுக்கு மக்கள் வருகை தந்து, ஆதரவு தருவார்கள் என்று இப்படத்தின் வெற்றி நிரூபித்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேவால் ஈர்க்கப்பட்ட ஷியாம் பெனகலின் சினிமா அணுகுமுறையும் சமூக அக்கறையும் அமைந்தது.

பெனகல் தனது பல நேர்காணல்களில், சத்யஜித் ரேவை சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய திரைப்படஇயக்குநராகக் கருதுவதாக ஒப்புக்கொண்டார். ஏனெனில் அதற்கு முன் நாட்டில் இல்லாத அளவில் சினிமாவின் தரத்தை சத்யஜித் ரே உயர்த்தியிருந்தார்.

ஷியாம் பெனகல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபல சினிமாவுக்கு முன் ஷியாம் பெனகல் சரணடைந்ததில்லை என்று கூறப்படுகிறது.

மாற்று சினிமாவின் முன்னோடி

அன்குருக்குப் பிறகு வெளியான , ‘நிஷாந்த்’ மற்றும் ‘மந்தன்’ ஆகியன பெனகலின் ‘எழுச்சிமிக்க முப்படங்கள்’ படங்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த மூன்று படங்களுமே கிராமப்புற சூழலையும் அவற்றுள் தழைத்தோங்கிய பெண்ணியத்தின் கிளர்ச்சியையும் பற்றிய கதைகளாக இருந்தன.

நிஷாந்த் (1975) திரைப்படம், சுதந்திரத்திற்கு முந்தைய தெலுங்கானாவில் கிராமப்புற உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் அடக்குமுறை மற்றும் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையாகும்.

அக்கதையில், பள்ளி ஆசிரியர் ஒருவரின் மனைவி, கிராமத்தின் நான்கு சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார். வறுமை, காமம், பொறாமை, நிலப்பிரபுத்துவ அடக்குமுறை ஆகியவற்றை யதார்த்தமான அணுகுமுறையுடன் திரையில் சித்தரித்து, அர்த்தமுள்ள கதைகளுக்கு பெனகல் உயிர் கொடுத்தார்.

மூன்றாவது படம் ‘மந்தன்’ (1976) இந்தியாவின் பால் புரட்சியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

ஐந்து லட்சம் விவசாயிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டதால் ‘மந்தன்’ தனித்துவம் பெற்றது. பல விவசாயிகள் தலா இரண்டு ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை சாத்தியமாக்கினர்.

இத்திரைப்படம் சினிமாவின் சக்தியை அடையாளப்படுத்தியது மட்டுமின்றி, கலை எவ்வாறு சமூகத்துடன் ஆழமாக இணைகிறது என்பதையும் காட்டியது. இந்த மூன்று படங்களுமே சினிமாவில் பொதுவாகக் காணப்படாத கிராமப்புறச் சூழலைப் பற்றிய கதைகளாக இருந்தன.

2009-ஆம் ஆண்டு, பிபிசிக்கு பெனகல் அளித்த பேட்டியில், “நான் எனது முதல் திரைப்படத்தை எடுத்த போது, ​​திரைப்படத் தயாரிப்பின் அனைத்து அம்சங்களையும் நான் அறிந்திருந்தேன்” என்று கூறினார்.

அன்குர் படத்திற்குப் பிறகு, “நீங்கள் எப்படி படத்தை உருவாக்கினீர்கள்? இதுவரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என வி.சாந்தாராம் என்னை அழைத்துக் கேட்டதற்குக் காரணம் இதுதான், என்று குறிப்பிட்டார். அதன் பிறகு, நான் ராஜ் கபூரைச் சந்தித்தேன், அவர் என்னிடம், ‘நீங்கள் முன்பு எப்போதும் படம் உருவாக்கவில்லை, ஆனாலும் இவ்வளவு சிறந்த படத்தை உருவாக்கியுள்ளீர்கள் . இதை எப்படி செய்தீர்கள்?'” என்று கேட்டதாகவும் தெரிவித்தார்.

நசிருதீன் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷியாம் பெனகலின் படங்களில் நசிருதீன் ஷா பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்

பிரபல இயக்குநர் சுதிர் மிஸ்ரா, பெனகலை நினைவுகூர்ந்து, தனது எக்ஸ்(முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் பதிவிடும் போது ,”ஷ்யாம் பெனகல் பற்றி சிறப்பாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால், அது சாதாரண மக்களையும் சாதாரண வாழ்க்கையையும் கவிதையாக அவர் வெளிப்படுத்திய விதம்” என்று குறிப்பிட்டார்.

‘மந்தன்’ திரைப்படம் வெளியாகி 48 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு (2024) புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர்.

இதுவே அவரது வெற்றியாக பார்க்கப்படுகிறது. இன்றும் விவசாயிகள் உரிமைக்காக போராடுவது போல, ‘மந்தன்’ திரைப்படத்தில் அன்றைய கிராம மக்கள் குறைந்த விலைக்கு பாலை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஷியாம் பெனகலின் படங்கள் இன்றைய சூழலுக்கும் அப்படியே பொருந்தி இருப்பதற்கு இதுவே சான்று.

ஷியாம் பெனகலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இயக்குநர் ஷேகர் கபூர் எக்ஸ் பக்கத்தில் (முந்தைய ட்விட்டரில்) வெளியிட்ட பதிவில், “அவர் சினிமாவின் ‘புதிய அலை’க்கு அடித்தளம் அமைத்தவர். ஷியாம் பெனகல் எப்போதும் ‘அன்குர்’, ‘மந்தன்’ மற்றும் எண்ணற்ற பிற படங்களுடன் இந்திய சினிமாவின் திசையை மாற்றிய மனிதராக நினைவுகூறப்படுவார். அவர் ஷபானா ஆஸ்மி மற்றும் ஸ்மிதா பட்டில் போன்ற சிறந்த நடிகைகளை நட்சத்திரங்களாக மாற்றினார். எனது நண்பர் மற்றும் வழிகாட்டிக்கு குட்பை” என்று பதிவிட்டுள்ளார்.

1934 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த ஷியாம் பெனகலின் குழந்தைப் பருவம் இலக்கிய மற்றும் கலாசாரச் சூழலில் கழிந்தது. இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் குரு தத்தின் உறவினர் ஆவார்.

2009ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஷியாம் பெனகல், “நான் குழந்தையாக இருந்த போது, ​​இது நிஜாமின் ஹைதராபாத்தாக இருந்தது. நான் வளர்ந்த பிறகு, இது இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. பல வரலாற்று மாற்றங்களைக் கண்டேன். ஹைதராபாத்தில் அப்போது நிலப்பிரபுத்துவ ஆட்சி இருந்தது. ஆனால் நாங்கள் ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தோம். அப்பகுதியின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. ஹைதராபாத்தின் முதல் ஆங்கிலப் பள்ளியான மெஹபூப் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். என் தந்தை புகைப்படக் கலைஞராக இருந்தார். உண்மையில், அவர் ஒரு கலைஞராக இருந்தாலும், வாழ்க்கைக்காக ஒரு ஸ்டூடியோ நடத்தினார்.”என்று தெரிவித்தார்.

அவர் தனது தந்தையிடமிருந்து படைப்பாற்றலைப் பெற்றார். எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பெனகல், முதல் பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களை இயக்கினார். ஆனால் ஒருவரை சிந்திக்கச் செய்யும் வகையில் அவர் யதார்த்தமான திரைப்படங்களை உருவாக்க விரும்பினார்.

தனது படங்களின் மூலம், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வலிகள் மற்றும் போராட்டங்களுக்கு குரல் கொடுப்பதுடன், அவர்களின் சுயமரியாதையையும் மனித மாண்பையும் பேணுவது ஆகிய இரண்டையும் பெனகல் செய்தார்.

மாற்று சினிமாவின் மற்ற தூண்களுடன் சேர்ந்து, அவர் ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம், சத்யஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் மற்றும் கோவிந்த் நிஹலானி போன்ற இயக்குநர்களுடன் இணைந்து இந்திய சினிமாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார்.

ஷியாம் பாபு என்று அழைக்கப்படும் பெனகல் வித்தியாசமான பாணியைக் கொண்டிருந்தார். வணிக சினிமாவுக்கு அதன் சொந்த பெரிய நட்சத்திரங்கள் தேவையாக இருந்தன. ஷியாம் பெனகல் அதற்கு இணையான இணையான குழுவை அமைத்தார். ‘அன்குர்’படத்தின் மூலம் இந்தி சினிமாவின் ஒப்பற்ற கதாநாயகி ஷபானா ஆஸ்மி, மேக்கப் இல்லாமல் படங்களில் அறிமுகமானார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் மூலம் பல புதிய நடிகர்களுக்கு வலுவான அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அவர்களில் முக்கியமானவர்கள் நசிருதீன் ஷா, ஓம் பூரி, ஸ்மிதா பாட்டீல், குல்பூஷன் கர்பண்டா மற்றும் அம்ரிஷ் பூரி போன்ற சிறந்த நடிகர்கள் ஆவர்.

தனது பிற்கால படங்களில் கமர்ஷியல் திரைப்பட நடிகர்களுக்கும் மறக்க முடியாத பாத்திரங்களை வழங்கினார். சஷி கபூர் (ஜூனூன்), ரேகா (கல்யுக்) அல்லது கரிஷ்மா கபூர் (சுபைதா) போன்ற நடிகர்களை உதாரணமாகக் கூறலாம்.

நீரா பெனகல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷியாம் பெனகல் தனது மனைவி நீரா பெனகலுடன்

விதிகளை கேள்விக்குள்ளாக்கிய படங்கள்

கிராமப்புற ஒடுக்குமுறை பற்றிய அவரது முதல் மூன்று புரட்சிகரமான படங்கள் பல தேசிய விருதுகளை வென்றன மற்றும் சர்வதேச தளங்களில் இப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு பெனகல் திரைப்படத் துறையில் தனது பார்வையை முன்வைக்க தொடங்கினார்.

அடுத்த படம், ‘பூமிகா’ (1977), 1940களின் புகழ் பெற்ற மராத்தி நடிகையான ஹன்சா வட்கரின் வாழ்க்கையைப் பேசியது. ஒரு திரைப்பட நடிகையின் கதையில் கூட பெனகலின் கவனம் தெளிவாக இருந்தது.

இது ஒரு பெண்ணின் சுய அடையாளத்தை கண்டுபிடிக்கும் பயணத்தைக் குறித்த கதையாகும். அதன் பாத்திரம் இறுதியில் பெண்ணியத்தின் அடையாளமாகவும் சுய மரியாதைக்கான போராட்டமாகவும் மாறுகிறது. பெனகல் மற்றும் ஸ்மிதா பாட்டீல் இருவரும் திரையில் பரவியிருந்த சினிமா மாயையின் அடுக்குகளை மீண்டும் தோலுரித்தனர்.

1980 வாக்கில், பிரபல பாலிவுட் நடிகர் சஷி கபூர் மசாலா படங்களால் ஏமாற்றமடைந்தார். அர்த்தமுள்ள திரைப்படங்களை உருவாக்க விரும்பினார். பெனகலின் முதல் நான்கு படங்களால் கவரப்பட்ட சஷி கபூர் பெனகலுடன் இணைந்தார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. ஷியாம் பெனகல் இயக்கிய ஜூனூன் (1978), மற்றும் சஷி கபூர் நடித்த கலியுக் (1981) ஆகியவை மறக்க முடியாத படங்களாக அமைந்தன.

ஜூனூன் 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கு மத்தியில் அமைந்த இரு சாதியினக்கு இடையிலான காதல் கதையாகும்.

கலியுக் (1981) மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன கதையாகும்.

இரண்டு படங்களும் ஃபிலிம்பேர் சிறந்த திரைப்பட விருதையும் தேசிய விருதுகளையும் பெற்றன. துரதிர்ஷ்டவசமாக, சஷி கபூரின் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஷியாம் பெனகலுடனான அவரது கூட்டணி, திரைப்படங்களால் ஏற்பட்ட பெரும் நிதி இழப்புக்குப் பிறகு முறிந்தது.

அதன் பிறகான காலகட்டத்தில், பாலிவுட் வன்முறைப் படங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியது. ஆனால், ஷ்யாம் பாபு அந்த சமூக கதைகளை முற்றிலும் கைவிடவில்லை.

மண்டி (1983) திரைப்படத்தின் மூலம் பாலியல் தொழில் மற்றும் அரசியல் குறித்து ஆழமாக நையாண்டி செய்தார்.

திரிகால் (1985) திரைப்படத்தின் மூலம், 60களில் கோவாவில் இருந்த போர்த்துகீசிய ஆட்சியின் கடைசி நாட்களின் கதையைச் சொன்னார்.

திரைப்படங்களில் பணம் சம்பாதிப்பது சற்று கடினமாக இருந்தபோது, ​​​​தொலைக்காட்சியின் பக்கம் திரும்பி, இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தின் மிக விரிவான சினிமா படைப்பாகக் கருதப்படும் ‘பாரத் ஏக் கோஜ்’ (‘Bharat Ek Khoj’) என்ற ஒரு சிறந்த தொடரை உருவாக்கினார்.

அவரது வழிகாட்டியும் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளருமான சத்யஜித் ரேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்தார்.

1990களில், அவர் இலக்கியத்தின் பக்கம் திரும்பினார் மற்றும் தரம்வீர் பாரதியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘சூரஜ் கா சத்வான் கோடா’ (‘Sooraj Ka Satvaan Ghoda’) படத்தை இயக்கினார்.

அதன் பிறகு அவர் மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய மறக்க முடியாத திரைப்படங்களையும் இயக்கினார்.

தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் தான் அவரது கடைசி படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘வெல்கம் டு சஜ்ஜன்பூர்’ மற்றும் ‘வெல் டன் அப்பா’ ஆகிய படங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியான 2023 முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் தான் அவரது கடைசி படம்.

சமர் (1999)மூலம் இந்திய சாதிய அமைப்பைக் கண்டித்தார். இந்த படங்களுக்கெல்லாம் விருதுகள் குவிந்து கொண்டே இருந்தன. பாலிவுட் முன்னோக்கி நகர்ந்தது. ஷியாம் பாபு தனது பணியை தொடர்ந்து பொறுப்புடன் செய்து வந்தார். அர்த்தமுள்ள வேலையைச் செய்ய விரும்பும் திரைப்படத் தயாரிப்பாளர்களை தொடந்து ஊக்கப்படுத்தினார்.

அவரை நினைவு கூர்ந்த ஹன்சல் மேத்தா, “குட்பை ஷியாம் பாபு. என்னைப் போன்ற பலரை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. சினிமாவுக்கு நன்றி. கடினமான கதைகளையும் தவறுகளையும் கொண்ட கதாபாத்திரங்களையும் அதிசயத்திற்குரிய கண்ணியத்துடன் வழங்கியதற்கு நன்றி. நிச்சயமாக அவர் எங்களின் இறுதியான ஆளுமைகளில் ஒருவர்” என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் காலித் முகமது – மம்மோ, சர்தாரி பேகம் மற்றும் ஜுபைதாவின் கதைகளை அடிப்படையாகக் கொண்ட அவரது பிரபலமான மூன்று படங்கள் அவரது முந்தைய திரைப்பட பயணத்திலிருந்து வேறுபட்டவை.

இந்த மூன்று கதைகளும், நாட்டின் பிரிவினைக்கு முன்னும் பின்னும் அமைந்தவை.

அப்படங்கள், நடுத்தர வர்க்க இஸ்லாமிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் தைரியத்தை அடிப்படையாகக் கொண்டவை. குடும்பத்துடனும் சமூகத்துடனும் தங்கள் லட்சியங்களுக்காக மோதும் அத்தகைய பெண்களின் கதைகளைக் குறிப்பிட்டவை.

‘வெல்கம் டு சஜ்ஜன்பூர்’ மற்றும் ‘வெல் டன் அப்பா’ ஆகிய படங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியான 2023 முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் என்பதே அவரது கடைசி படம்.

பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் தவிர ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ள ஷியாம் பாபு, 2005 இல் இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றார்.

அவரை நினைவுகூரும் வகையில், பிரபல பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் வருண் க்ரோவர், எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டரில்), “அவர் நேரு-காந்தியின் மதிப்புகள் உள்ளத்தில் இருந்தாலும், அம்பேத்கர்-பகத் சிங் ஆகியோரின் கோபத்தை உடலில் கொண்டிருந்தார். நல்ல இயக்குநர்கள் பத்து-பதினைந்து ஆண்டுகளில் தங்களது சமூகப் பார்வையை இழந்துவிடுவர் அல்லது வெற்றியின் பொய்யான மாயையால் தங்களது குணங்களை இழந்துவிடும் நாட்டில், அவர் தனது குணங்களை தொடர்ந்து பாதுகாத்து வந்தவராக விளங்கினார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஷ்யாம் பாபு முப்பது ஆண்டுகளாக விழிப்புடன் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு உணர்ச்சியையும் அச்சமின்றி, தனது கதைகளின் மூலம் சொல்லிக் கொண்டே இருந்தார். அவரது வாழ்க்கையும், அவரது உள்ளொளியும் அவரை சினிமாவை நோக்கி அழைத்துச் சென்றது எங்கள் அதிர்ஷ்டம். தலை வணங்குகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபல நடிகை ரேகா மற்றும் குரு தத் பற்றிய எனது புத்தகத்தை எழுதும் போது, ​​ஷியாம் பாபுவை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ரேகாவை வைத்து அவர் கலியுக் படத்தைத் தயாரித்திருந்தார்.

ரேகா தனது 16 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த போது, ​​ஷியாம் பெனகல் அவரை வைத்து கோல்ட் ஸ்பாட் என்ற குளிர்பான விளம்பரங்களைத் தயாரித்ததாக அவர் என்னிடம் கூறினார்.

“அந்த விளம்பரங்களின் நகலை எனக்காக அவர் சேமித்து வைத்திருந்தார். அவரது எளிமை ஆச்சரியமாக இருந்தது. அவருடைய படங்களில் அவருக்குப் பிடித்தது எது என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில்- என்னுடைய முந்தைய படங்கள் அனைத்திலும் இப்போது குறைகள் தெரிகிறது. அடுத்த படத்தில் தவறுகளை குறைக்க முயற்சிப்பேன். இதுவே அவருடைய மகத்துவமாக இருந்தது” என்றார்.

அவருடன் சக காலத்தில் பயணத்தை தொடங்கிய திரைப்பட இயக்குநர்கள் தங்களது சிறப்பை இழந்த நிலையில், ஷியாம் பெனகல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தனது கனவுகளுக்கு திரையில் உயிர் கொடுத்தார்.

காதல் முதல் ஆக்ஷன் வரை, பச்சன் முதல் கான்கள் வரை திரையுலகின் ஹீரோக்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் ஷியாம் பாபுவின் சமூக ஈடுபாடு மாறவே இல்லை.

அவர் சினிமாத் துறையில் ஒரு இயக்கம், ஒரு உத்வேகம், ஒரு முழு சகாப்தம். அவருக்கு எங்களின் வணக்கம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.