இந்தியாவிலேயே சென்னை விமான நிலையத்தில்தான் அரிய வனவிலங்குகள் அதிகமாக கடத்தப்படுகிறதா?

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Custom

படக்குறிப்பு, சிறிய வகை குரங்கினங்கள், பச்சை மற்றும் நீல நிற நெடுவாலிகள் (இக்வானா), பாம்புகள், பறவைகள் போன்றவை கடத்தி வரப்படுகின்றன
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று சென்னை சுங்க அதிகாரிகள் 5193 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை (Red-eared slider turtles), சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். ரமேஷ், தமீம் அன்சாரி என்ற இரண்டு பயணிகள் மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது இந்த ஆமைகளை கடத்தி வந்துள்ளனர்.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அந்த 5193 ஆமைகளும் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதில் ஈடுபட்ட ரமேஷ், தமீம், மேலும் இரண்டு நபர்கள் சுங்க சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இது எப்போதாவது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடக்கும் ஒன்றல்ல. செப்டம்பர் 27ம் தேதி அன்று இதே வகையைச் சேர்ந்த 4968 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏப்ரல் மாதத்திலும் 5000 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்த ஆமைகள் மட்டுமே சென்னை விமான நிலையம் வழியாக கடத்தி வரப்படுவதில்லை. சிறிய வகை குரங்கினங்கள், பச்சை மற்றும் நீல நிற நெடுவாலிகள் (இக்வானா), பாம்புகள், பறவைகள் போன்றவையும் இவ்வாறு கடத்தி வரப்படுகின்றன. 2019ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து சிறுத்தைப் புலியின் குட்டி ஒன்று கடத்தி வரப்பட்டது.

பல நாடுகளை பூர்வீகமாக கொண்ட விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்களை செல்லப் பிராணிகளாக இந்தியாவில் வளர்க்கும் போக்கு அதிகரித்து வருகின்ற காரணத்தால் இந்த வனவிலங்குகளை கடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது என்று கூறுகின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

இந்தியாவில் சென்னை விமான நிலையம் வழியாக இந்த வனவிலங்குகள் அதிகளவில் கடத்தி வரப்படுகிறதா? இந்த விலங்குகளுக்கு உள்ளூர் சந்தையில் உள்ள மதிப்பு என்ன? வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Customs

படக்குறிப்பு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குரங்கு

சென்னையில் அதிகரிக்கும் வனவிலங்கு கடத்தல் நிகழ்வுகள்

உலகிலேயே அதிக வன உயிரினங்களை விமானம் மூலமாக கடத்தும் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று கூறுகிறது ஐ.நாவின் சுற்றுச்சூழலுக்கான திட்டம் (UNEP).

2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹை ஃப்ளையிங் இன்சைட் இன்டூ வைல்ட்லைஃப் டிராஃபிக்கிங் த்ரூ இந்தியாஸ் ஏர்போர்ட்ஸ் (High Flying – Insight Into Wildlife Trafficking Through India’s Airports) ஆய்வு அறிக்கையின் தரவுகள் படி, 2011 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 70 ஆயிரம் வனவிலங்குகள், விலங்குகளின் உடல் பாகங்கள் இந்தியாவில் உள்ள 18 விமான நிலையங்களில் மீட்கப்பட்டது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தமிழகத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தில் மட்டும் 36.1% வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் (மும்பை, மகாராஷ்டிரா) 14.8% வழக்குகளும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 11.3% வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகள், சென்னை வழியாக அதிக அளவு வனவிலங்குகள் கடத்தப்படுகிறது என்பதை உறுதி செய்கிறது.

சென்னை மண்டல சுங்கத்துறை அளித்த தரவுகளின் படி, 2023ம் ஆண்டு வனவிலங்குகள் கடத்தல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வெளி நாட்டு உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பல திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Customs

படக்குறிப்பு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆமை

சென்னையில் ஏன் இவை அதிக அளவில் நடக்கின்றன?

சென்னை மண்டல சுங்கத் துறை முதன்மை ஆணையர் ஆர். ஶ்ரீனிவாச நாய்க் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும் போது, “சென்னையில் அதிகமாக இந்த கடத்தல்கள் நடப்பதற்கு காரணம் அதன் அமைவிடமே. தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விலங்குகளை கடத்தி வர வேண்டும் என்றால் சென்னைதான் அருகில் இருக்கும் இடம். உயிரினங்களின் இறப்பு விகிதங்களை குறைக்க இந்த விமான நிலையமே சாதகமானதாக இருக்கும் என்பதால் இங்கே கொண்டுவரப்படுகிறது, ” என்று கூறினார்.

தெற்காசிய நாடுகளை வான்வழியாகவும் கடல்வழியாவும் இணைக்கும் முக்கிய மையமாக சென்னை செயல்படுவதால் இங்கு இத்தகைய கடத்தல்கள் மிகவும் அதிகம் என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத வனத்துறை அதிகாரி.

“சென்னையின் பல்லாவரம் மற்றும் மூர் சந்தைகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக மிக எளிதில் வெளிநாட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் ஒருவரால் வாங்கவும் விற்கவும் முடியும். கடந்த சில பத்தாண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்ட பலரும் செல்வ செழிப்புடன் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வெளிநாட்டு உயிரினங்களை வாங்கி விற்பனை செய்வதற்கான வசதிகளை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். பலகாலமாக முக்கிய மையாக சென்னை செயல்பட்டதால் தான் இங்கே கடத்தல்கள் அதிகமாக நடைபெறுகின்றன,” என்று அந்த அதிகாரி கூறினார்.

சென்னையின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டதால் தான் இங்கே வனவிலங்குகளை கண்டறியும் சோதனைகளும் அதிக அளவில் உள்ளன. அதற்கு ஏற்றார் போல் அதிக அளவு விலங்குகள் இங்கே பிடிக்கப்படுகின்றன என்றும் அவர் விவரித்தார்.

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Customs

படக்குறிப்பு, பால் பைத்தான் போன்ற சிறிய ரக மலைப்பாம்புகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர் சென்னையில் இது போன்ற விலங்குகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்

கைப்பற்ற விலங்குகள் என்னவாகும்?

“வனவிலங்குகள் இருப்பதை உறுதி செய்தால் உடனடியாக அந்த தகவலை வனத்துறையினருக்கு தெரிவிப்போம். அவர்கள் அந்த உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளா என்பதை அடையாளம் காண்பார்கள். அது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அடுத்த விமானத்தில், அந்த விலங்குகள் கொண்டு வரப்பட்ட நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படும்,” என்றார் நாய்க்.

ஆனால் அந்த விலங்குகள் தங்களின் பூர்வீக இடங்களுக்கு கொண்டு செல்லப்படுமா அல்லது காடுகளில் விடப்படுமா என்பது அந்த விலங்குகளின் தன்மையைப் பொறுத்தது என்று கூறுகிறார் பவன் ஷர்மா.

மகாராஷ்டிர அரசால் கௌரவ வனப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருக்கும் பவன் ஷர்மா, வனத்துறை சார்ந்த வழக்குகளில் வாதாடுகிறார்.

2022ம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972 -ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்பு வரை, இவ்வாறாக கைப்பற்றப்படும் விலங்குகள், எந்த நாட்டு விமானத்தில் இருந்து வந்ததோ அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டு வந்தன என்று கூறுகிறார் பவன்.

ஆனால் தற்போது வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2022 படி, அட்டவணை 4-ல் உள்ள உட்பிரிவு 1-ல் இடம் பெற்றுள்ள விலங்குகளை அதன் பூர்வீக நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

படக்குறிப்பு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிக அளவில் கைப்பற்றப்பட்ட விலங்குகள்

“இதில் பல விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில விலங்குகள் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். சில விலங்குகளை பண்ணைகளில் வைத்து வளர்த்து, அதன் பிறகு கடத்தியிருக்கலாம். விலங்குகளின் தன்மைகளைப் பொறுத்து அது திருப்பி அனுப்பப்படலாம். ஆனால் அவை காடுகளை சென்றடையும் என்பதை உறுதியாக கூற முடியாது,” என்கிறார் பவன்.

வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022, அட்டவணை 4ல், CITES ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள், தாவரவகைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தில் பட்டியலிடப்பட்ட இனங்கள் பாதுகாக்கப்பட்ட இனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தகைக விலங்குகளை முறையாக அனுமதி பெறாமல் இந்தியாவுக்குள் கொண்டுவருவது சட்டப்படி குற்றமாகும்.

ஏற்கனவே இத்தகைய விலங்குகளை வைத்திருப்பவர்கள் முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். வன உயிரினங்களை செல்லப் பிராணிகளாக விற்பனை செய்யும் நபர்களும், பண்ணைகள் வைத்திருக்கும் நபர்களும் முறையான அனுமதியை அரசிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

எவ்வளவு உயிரினங்கள் தப்பிப் பிழைக்கும்?

“ஆயிரத்தில் ஒன்றே உயிர்பிழைக்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பதால் இயற்கையாகவே பல ஆமைகள் இறந்துவிடும். கடுமையான புற சூழலுக்கு ஆளாக்கப்பட்ட பிறகு கொண்டுவரப்படும் ஆமைகள் அதிக அளவில் உயிரிழக்கக்கூடும்.

அதுமட்டுமின்றி ஒரே பெட்டியில் பலவிதமான உயிரினங்களை கொண்டுவருவது பலவகையான நோய் தொற்றுகளுக்கு வழிவகை செய்யும். இதன் காரணமாகவும் பல விலங்குகள் உயிரிழந்துவிடும்,” என்று கூறுகிறார் பவன்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உயிரினங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உயிர்பிழைக்கும் விலங்குகளை பண்ணைகளில் வைத்து இனப்பெருக்கம் செய்து, அடுத்த தலைமுறை விலங்குகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகிறார் ராஜா* (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

சில ஆண்டுகளுக்கு முன்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் விலங்குகளை இவர் தன்னுடைய கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். கடத்தப்படும் வனவிலங்குகளின் மதிப்புகளை அறிந்துக்கொள்ள மட்டுமே அவரின் கருத்து பெறப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Customs

படக்குறிப்பு, தெற்காசிய நாடுகளில் மருத்துவ தேவைகளுக்காகவும், செல்லப் பிராணிகளாகவும் ஆயிரக் கணக்கில் உயிரினங்கள் கடத்தப்படுகின்றன

உள்ளூர் சந்தையில் இந்த விலங்குகளின் மதிப்பு

சென்னையில் அதிக அளவில் இவ்வகை உயிரினங்கள் கடத்தப்படுகின்றன என்பதற்காக , தமிழகத்தில் மட்டுமே இந்த விலங்குகளுக்கு அதிக அளவு ‘டிமாண்ட்’ இருப்பதாக நினைக்க வேண்டாம் என்று கூறுகிறார் ராஜா.

கைக்குரங்குகளுக்கு தான் இந்தியாவில் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கிறார் ராஜா. “கைக்குரங்குகளில் நிறைய வகைகள் உள்ளன. அதில் தங்க நிற கைக்குரங்கு தான் அதிக அளவுக்கு இங்கே விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையில் ஒரு குரங்கு விற்பனை செய்யப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

“இவை இல்லாமல், காட்டன் டாப் மர்மோசெட் கைக்குரங்குகள் ரூ. 3.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார். “பஞ்சவர்ணக் கிளிகளில் ஒன்றாக கருதப்படும், தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பஞ்சவர்ண கிளி (Scarlet Macaw), பறவைகளில் அதிக டிமாண்ட் உள்ள பறவை. ரூ. 4 லட்சம் வரை ஒரு பறவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.”

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

படக்குறிப்பு, மர்மோசெட் குரங்கினங்களுக்கு உள்ளூரில் அதிக மதிப்பு உள்ளது

”பால் பைத்தான் (Python Regius) எனப்படும் மலைப்பாம்பு வகைகளும் மக்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற ஒன்றாக இருக்கிறது. இதன் விலை ரூ. 20 முதல் ரூ. 30 ஆயிரம் வரை உள்ளது. இவையின்றி கார்ன் பாம்புகளுக்கும் (corn snakes (Pantherophis guttatus)) அதிக வரவேற்பு உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

இதன் விலை ரூ. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை உள்ளது. ஆமைகளில் சஹாரா பாலைவனங்களில் காணப்படும் சல்கட்டா வகை ஆமைகளின் விலையானது ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் ஆகும்.

அவை மட்டுமின்றி, ”ரெட் ஃபூட் ஆமைகள், செர்ரி ஹெட் ஆமைகளுக்கும் இங்கே வரவேற்பு அதிகமாக உள்ளது. குட்டிகளாக இருக்கும் போது இதன் விலையானது ரூ. 20 முதல் ரூ. 30 ஆயிரம் வரை மட்டுமே. நான்கு வயது ஆன ஆமைகளுக்கு இங்கே விலையானது ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை. அல்தாப்ரா ஆமைகளின் விலை ரூ. 1.75 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை செல்கிறது,” என்று அவர் தெரிவிக்கிறார்.

“சில நேரங்களில் பண்டமாற்றும் முறைகளில் இந்த விலங்குகள் கடத்தப்படுகின்றன. இங்கே சில ஆயிரங்களுக்கு விற்பனையாகும் நட்சத்திர மீன்கள் மற்றும் முதலை குட்டிகளுக்கு சர்வதேச அரங்கில் நல்ல மதிப்பு உள்ளது. இங்கிருந்து இத்தகைய விலங்குகளை அங்கே ஏற்றுமதி செய்யும் அவர்கள், அந்த நாட்டில் உள்ள விலங்குகளை இங்கே இறக்குமதி செய்கின்றனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Customs

படக்குறிப்பு, ஆரம்பத்தில் தந்தங்கள், புலித்தோல், காண்டாமிருகத்தின் கொம்புகள் என்று பல வன உயிர் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன.

உள்ளூர் சுற்றுச்சூழலில் இது ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?

“ஆரம்பத்தில் தந்தங்கள், புலித்தோல், காண்டாமிருகத்தின் கொம்புகள் என்று பல வன உயிர் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. சமூக அந்தஸ்த்தின் அங்கமாக அவை பார்க்கப்பட்டு வந்தன.

தற்போது இத்தகைய வனப் பொருட்களின் கடத்தல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும், தெற்காசிய நாடுகளில் மருத்துவ தேவைகளுக்காகவும், செல்லப் பிராணிகளாகவும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் கடத்தப்படுகின்றன.

இந்த இந்த விலங்குகளுக்கு மட்டும் தான் இங்கே வரவேற்பு உள்ளது என்று கூறிவிட இயலாது. நத்தை முதல், எறும்புதிண்ணி, ஹார்ன்பில்கள் வரை அனைத்திற்கும் திறந்த சந்தையாக இருக்கிறது,” என்கிறார் பவன்.

சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனிதர்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார் பவன்.

“விலங்குகள் மூலம் பரவும் தொற்றுக்கு கோவிட்-19 ஒரு சிறந்த உதாரணம். நம் சுற்றுச்சூழலுக்கு பழகாத விலங்குகளை இந்த மண்ணில் அறிமுகம் செய்யும் போது அது ஆபத்துகளையும் சேர்த்தே அறிமுகம் செய்கிறது,” என்றார் பவன்.

”சில நேரங்களில், கூண்டுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் விலங்குகளுக்கு விடுதலை அளிக்கின்றோம் என்ற பெயரில் அந்த விலங்குகளை காட்டுச் சூழலுக்குள் விடும் முயற்சிகளும் நடக்கின்றன. இது அந்த விலங்குகளின் எண்ணிக்கை உயர்வை அதிகரிக்கக் கூடும் அல்லது இறப்பை சந்திக்க நேரிடும்” என்கிறார் பவன்.

“மும்பையின் பொவாய் ஏரியில் இவ்வாறாக பல வெளிநாட்டு உயிரினங்களை நாங்கள் மீட்டெடுத்திருக்கின்றோம். நன்னீர் ஆமைகளை கடற்கரைகளில் இருந்து நாங்கள் மீட்ட கதைகளும் உண்டு.”

“உள்ளூர் மக்கள் இந்த நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கங்களை கொண்டவர்கள். தொடர்ச்சியாக பல உயிரினங்கள் இந்த சூழலுக்கு அறிமுகம் செய்யும் போது எது உண்ணத்தகுந்தது, எது தகுதியற்றது என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் போதும் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன,” என்று தெரிவிக்கிறார் பவன்.

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Customs

படக்குறிப்பு, நம் சுற்றுச்சூழலுக்கு பழகாத விலங்குகளை இந்த மண்ணில் அறிமுகம் செய்யும் போது அது ஆபத்துகளையும் சேர்த்தே அறிமுகம் செய்கிறது

நடவடிக்கைகள் என்ன?

“பொதுமக்கள் மத்தியில் இந்த சட்டங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ச்சியாக தொழில்நுட்பம் மற்றும் உளவு சார் தகவல்கள் பரிமாறப்படுவதால் இங்கே (சென்னை விமான நிலையத்தில்) கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்பு சிறுத்தைப் புலிகளின் குட்டிகள் உட்பட பல விலங்கினங்கள் கடத்தப்பட்டன. தற்போது அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று கூறுகிறார் நாய்க்.

கைது செய்யப்படும் நபர்கள் மீது தீவிர சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருங்காலத்தில் கடத்தல் தொழில் மீதான ஆர்வம் குறையும் என்று நம்புவதாக நாய்க் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.