அவுஸ்திரேலியர்களுக்கு 2 மணிநேர அவகாசம்!

by guasw2

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பு வீடு திரும்பவும் தங்கள் பொருட்களை சேகரிக்கவும் செவ்வாய்க்கிழமை (24) இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது.

கிறிஸ்மஸ் நாள் அன்றும் காலை 10 மணி முதல் நண்பகல் வரை விக்டோரியாவின் கிராம்பியன்ஸ் சாலை மற்றும் அரரத்-ஹால்ஸ் கேப் சாலை இடையேயான சந்திப்பில் பொலிஸ் வீதித் தடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த அவசரகால பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயினால் ஏற்கனவே கடந்த வாரத்தில் 41,000 ஹெக்டேர் (101,000 ஏக்கர்) நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இருப்பினும் உயிரிழப்பு அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

புதன்கிழமை, கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மாநிலம் முழுவதும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கும், வியாழன் அன்று 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளும் வியாழன் முதல் வெள்ளி வரை காட்டுத்தீயை எதிர்கொள்ளக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று 24 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை அழித்த 2019-2020 பேரழிவுத் தீக்குப் பின்னர் அவுஸ்திரேலியா காட்டுத் தீ தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.

அவுஸ்திரேலியா வெள்ளம், கடுமையான வெப்பம் உட்பட தீவிரமான பேரழிவுகளை அடிக்கடி சந்தித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்