அரிசி தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு on Tuesday, December 24, 2024
தொடரும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இது தொடர்பான முன்மொழிவை அமைச்சர் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் அளவு 67,000 மெற்றிக் தொன்களாகும்.
எவ்வாறாயினும், அரசினால் இறக்குமதி செய்யப்படும் 70,000 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் ஓர்டர் செய்யப்பட்ட 5,200 மெற்றிக் தொன்கள் நாளை (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
மேலும், அரசாங்கத்தால் ஓர்டர் செய்யப்பட்டுள்ள எஞ்சிய தொகை அடுத்த வாரத்துக்குள் கொண்டு வரப்படும் என இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.