மீகொடை துப்பாக்கிச் சூடு ; மேலும் மூவர் கைது! மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி காரில் பயணித்த ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸ் நிலையமும், மேல்மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தன.
அதன்படி, மேல்மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரையும் அதற்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இக்குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்க மற்றும் மீகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் சென்றவர் என்பதுடன் மற்றைய இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தென் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.