மஹிந்தவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்

by wp_fhdn

மஹிந்தவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு பலமுறை அறிக்கை சமர்ப்பித்துள்ள பின்னணியில் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை தவறானதொரு தீர்மானமாகும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கமைய 2024.10.10 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷசவின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்த 13 அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 04 புலனாய்வு பிரிவின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் ட்ரோன் கருவி ஊடான குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அத்துடன் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் திட்டமிட்ட தாக்கதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் குறையேதுமில்லை. ஏனெனில் இராணுவத்தினர் தமது சொந்த ஊருக்கு சவப்பெட்டியில் செல்லும் காலத்தை அவர் தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் மஹிந்த ராஜபக்ஷவை ஒப்பிட முடியாது. ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ தேசியத்தை பாதுகாப்பதற்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்.

ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இன்றும் செயற்படுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்பட வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்