மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளரால் நாட்டில் நிதி நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது

by wamdiness

மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளரால் நாட்டில் நிதி நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது மத்திய வங்கி ஆளுநரும், திறைசேரி செயலாளரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பாதையிலேயே இவர்களை அழைத்துச் செல்கின்றனர். ஜனாதிபதி அநுர நடுவில் அமர்ந்திருப்பதும் இவர்கள் இருவரும் ஆட்சியைக் கொண்டு செல்வதும் மிகத் தெளிவாகத் தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆட்சிக்கு வந்தவுடன் நாணய நிதிய ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகக் கூறியவர்களுக்கு இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டில் ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனரும், திறைசேரி செயலாளருமே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பாதையிலேயே இவர்களை அழைத்துச் செல்கின்றனர். ஜனாதிபதி அநுர நடுவில் அமர்ந்திருப்பதும் இவர்கள்இருவரும் ஆட்சியைக் கொண்டு செல்வதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், இந்திய விஜயத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிவிப்பில் சம்பூர் வேலைத்திட்டத்துக்கு முழுமையாக இணங்கியுள்ளனர். மக்கள் ஆணையைப் பெற்றமைக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளுக்கு முரணாகவே இவர்கள் தற்போது செயற்படுகின்றனர். 76 ஆண்டுகள் இலங்கை சாபத்தை அனுபவித்ததாக இவர்கள் கூறினால், சந்திரிகா அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகித்தவர்கள் அடிப்படையில் ஜே.வி.பி.யினதும் அதன் பங்குதாரர்களே.

ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மறந்து போன வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே தற்போது நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அதனை விடுத்து அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதியுதவி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டால் அது மக்களுக்கு பாரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாமும் இதுகுறித்த தகவல்களைக் கோரியிருக்கின்றோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்