நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும்! இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லை எனில், நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும் என வடக்கு கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (22) காலை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கில் உள்வாரி பட்டதாரிகள் 2,500 மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நியமனம் அரசினால் வழங்கப்பட்டது. அரசினால் நியமனம் வழங்கப்பட்ட பொழுதிலும் 2014 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்ளுக்கு அதாவது 2020 / 2021 பட்டமளிப்பு பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கவில்லை. யாழ். பல்கலைக்கழகம் மாணவர்களை வேலை வாய்ப்பில் உள்ளீர்க்க வேண்டிய தேவை குறித்து தெளிவுபடுத்தி கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தது. கொரோனா, குண்டு வெடிப்பு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க போராட்டம் என்பன எமக்கு பட்டத்தினை பெறுவதில் தாமதம் ஏற்பட காரணமாக அமைந்தன இருந்த பொழுதிலும் எமது அணியினை சேர்ந்த வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த அரசாங்கத்துடன் நாம் பல்கலைக்கழகம் எமக்கு தந்த நியாயபூர்வமான கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடலை மேற்கொண்ட பொழுதிலும் அரசாங்கம் மாறிவிட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடந்த ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி விரைவு தபாலை அனுப்பினோம், நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பிரதமர் ஹரிணிக்கு விரைவு தபால் அனுப்பிய பொழுதும் எமக்கு எந்த பதிலும் வழங்கபடவில்லை. அரசுக்கு சார்பானவர்கள் ஜனாதிபதி தேர்தல் முடிய பேசலாம் பாராளுமன்ற தேர்தல் முடிய பேசலாம் என தெரிவித்தனர்.
இரு தேர்தல் முடிந்தும் எந்த பலனும் இல்லை. தேசிய கல்வியியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் எம்மை விட குறைந்தளவான z புள்ளிகளுடன் உள்ளீர்கப்பட்டு பின்னர் நியமனத்துடன் வெளியேறுகின்றார்கள். பின்னர் நாம் படித்து முடிக்க முதல் அடுத்த பட்டத்தினையும் தொடர்கின்றார்கள். கூடுலான புள்ளிகளை பெற்ற நாம் பெயின்டிங், கூலி, சந்தை வியாபாரிகளாக உள்ளோம்.