இந்திய பிரதமரை கோரியதன் மூலம் ஜனாதிபதி நாட்டை இழிவுபடுத்தியுள்ளார் இலங்கைக்கு பிரிக்ஸ் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள தலையிடுமாறு இந்திய பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி இலங்கையை இழிவுபடுத்தியுள்ளார் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் எத்த பத்திரிகையின் 60ஆவது வருட நிகழ்வு சனிக்கிழமை (21) கட்சி தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் நாடுகளின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள தலையிடுமாறு இந்திய
பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார். ஜனாதிபதி இதனை அவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் கூட்டு பிரகடனம் ஒன்றின்போது இவ்வாறான கோரிக்கை ஒன்றை வெளியிடும்போது இழிவுபடுத்தப்படுவது, ஜனாதிபதி அல்ல, நாட்டு மக்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செப்டம்பர் 23ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்தார். பிரிக்ஸ் அரச தலைவர்களின் மாநாடு ரஷ்யாவில் ஜனாதிபதி புடின் தலைமையில் ஒக்டோபர் 22,23,24ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எழுத்து மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பிரிக்ஸ் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டுள்ளன. அதில் அந்த நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்களே கலந்துகொண்டுள்ளனர். ஆனால் எமது நாட்டில் இருந்து மாத்திரமே வெளிவிவகார செயலாளர் ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். ஜனாதிபதி
புடினின் பரிந்துரையில் நாங்கள் பிரிக்ஸ் மாநாட்டின் பங்காளி உறுப்புரிமைக்கு உள்வாங்கி இருந்தோம்.13நாடுகள் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தன. அரசாங்கம் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஜனாதிபதிக்கு வேலைப்பளு என்றால் பிரதமரை அல்லது வெளிவிவகார அமைச்சரை அந்த மாநாட்டில் கலந்துகொள்ளச்செய்திருக்கலாம். அல்லது மாநாட்டுக்கு வரமுடியாத காரணத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்திருக்காலாம். ஆனால் அரசாங்கம் எதனையும் செய்யாமல் எமக்குரிய சந்தர்ப்பத்தை இழந்துகொண்டுள்ளது.
தற்போது இந்திய பிரதமரை தலையிட்டு பிரிக்ஸ் மாநாட்டின் உறுப்புரிமையை பெற்றுத்தருமாறு பகிரங்கமாக கோருவது எமது நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும் என்றார்.