திமிங்கலம்

பட மூலாதாரம், Natalia Botero-Acosta

படக்குறிப்பு, கொலம்பியாவில் பசிபிக் கடற்கரை அருகே எடுக்கப்பட்ட படம்.
  • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
  • பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்

இதுவரை பதிவான இடம்பெயர்வுகளிலேயே, மிக நீண்ட தொலைவு மற்றும் மிகவும் அசாதாரணமான இடம்பெயர்வை ஹம்பேக் (Humpback) திமிங்கலம் ஒன்று மேற்கொண்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த திமிங்கலம் 2017-ம் ஆண்டில் கொலம்பியாவில் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டது. அதன்பின், சில ஆண்டுகள் கழித்து 13,000 கி.மீ-க்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஸான்ஸிபார் அருகே காணப்பட்டது.

காலநிலை மாற்றம் காரணமாக உணவு இருப்பு குறைவதாலோ அல்லது இணையைக் கண்டடையும் முயற்சியாகவோ, இந்த இடப்பெயர்வை அத்திமிங்கலம் மேற்கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தான்ஸானியா செட்டாசென்ஸ் ப்ரோகிராம் (Tanzania Cetaceans Program) எனும் அமைப்பைச் சேர்ந்த எகாடெரினா கலஷ்னிகோவா கூறுகையில், “இந்த உயிரினம், அதிக தொலைவு இடம்பெயரக் கூடியது தான் என்றாலும், இந்த சாதனை உண்மையில் ஈர்க்கக் கூடியது, அசாதாரணமானது,” என்றார்.

கீழே உள்ள அந்த திமிங்கலத்தின் புகைப்படம், 2022-ல் ஸான்ஸிபார் கடற்கரையில் எடுக்கப்பட்டது.

திமிங்கலம்

பட மூலாதாரம், Ekaterina Kalashnikova

படக்குறிப்பு, 2022-ஆம் ஆண்டில் ஸான்ஸிபார் அருகே எடுக்கப்பட்ட படம்.

இடப்பெயர்வுக்குக் காரணம் என்ன?

இதுவரை ஹம்பேக் (Humpback) திமிங்கலங்களிடையே பதிவான இடப்பெயர்வுகளில் இதுவே மிக அதிக தொலைவு இடப்பெயர்வாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என, கலஷ்னிகோவா தெரிவித்தார்.

ஹம்பேக் திமிங்கலங்கள் உலகம் முழுவதும் அனைத்துக் கடல்களிலும் வாழ்கின்றன. ஆண்டு முழுவதும் நீண்ட தொலைவுக்கு அவை நீந்திச் செல்கின்றன. மிக நீண்ட தூரம் இடம்பெயரும் பாலூட்டிகளில் ஒன்றாக இவை உள்ளன. அந்த திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் வெப்பமண்டல பகுதிகளில் இருந்து, உணவு ஆதாரம் இருக்கக்கூடிய கடலின் குளிர்ச்சியான இடங்களுக்கு நீந்தக் கூடியவை.

ஆனால், இந்த ஆண் திமிங்கலத்தின் இடப்பெயர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியதாக உள்ளது. இத்திமிங்கலம் இரண்டு இனப்பெருக்க பிராந்தியங்களுக்கு இடையே இடம்பெயர்ந்துள்ளது.

இத்தகைய ஹம்பேக் திமிங்கலங்கள் உண்ணக் கூடிய சிறிய க்ரில் எனப்படும் கடல்வாழ் உயிரினங்கள் மிகுதியாக கிடைப்பது காலநிலை மாற்றத்தால் மாறிவருவதால், உணவுக்காக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.

மற்றொருபுறம், உலகளவில் இத்தகைய திமிங்கலங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவை இனப்பெருக்கம் செய்வதற்காக புதிய பகுதிகளை நோக்கிப் பயணம் மேற்கொள்வதாகவும் ஒரு கருத்து உள்ளது.

“உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனினும், காலநிலை, தீவிர சூழலியல் நிகழ்வுகள் (தற்போது மிகவும் அடிக்கடி ஏற்படுகின்றன) உட்பட உலகளவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்த உயிரினங்களின் பரிணாம மாற்றங்கள் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்,” என கலஷ்னிகோவா கூறுகிறார்.

ஐந்தே ஆண்டுகளில் 13,000 கி.மீ. பயணம்

அந்த திமிங்கலம், கடந்த 2013-ம் ஆண்டு கொலம்பியாவில் பசிபிக் கடற்கரையில் ஆய்வுக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட ஹம்பேக் திமிங்கலங்கள் குழுவிலிருந்த ஓர் ஆண் திமிங்கலமாகும்.

இந்த திமிங்கலம் அதே பகுதியில் 2017-ம் ஆண்டிலும், ஸான்ஸிபார் அருகே 2022-ம் ஆண்டிலும் தென்பட்டது.

திமிங்கலம்

பட மூலாதாரம், BBC/Victoria Gill

படக்குறிப்பு, இந்த திமிங்கலம் கொலம்பிய பகுதியில் 2017-ம் ஆண்டிலும், ஸான்ஸிபார் அருகே 2022-ம் ஆண்டிலும் தென்பட்டது.

இரு பகுதிகளுக்கும் இடையே 13,046 கிமீ கிரேட் சர்க்கிள் டிஸ்டன்ஸ் (Great-circle distance) தூரம் உள்ளது. அந்த திமிங்கலம் ஐந்தே ஆண்டுகளில் இவ்வளவு தூரம் கடலில் இடம் பெயர்ந்துள்ளது. எனினும், அந்த திமிங்கலம் பயணித்திருக்கும் தூரம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பூமி கோள வடிவிலானது என்பதால், கோளத்தின் மேற்பரப்பில் உள்ள எந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே உள்ள மிகக் குறுகிய தூரம், கிரேட் சர்க்கிள் டிஸ்டன்ஸ் எனப்படுகின்றது. இது, ஒரு கோளத்தில் இரண்டு புள்ளிகளை இணைக்கும் ஒரு வளைவுக்கு சமமான தூரமாகும்.

இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவுகள், ஆராய்ச்சியாளர்கள் புகைப்படங்கள், திமிங்கலங்களை கண்காணிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர், happywhale.com எனும் குடிமக்கள் அறிவியல் இணையதளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான படங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஆய்வு, ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் எனும் இதழில் வெளியாகியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.