அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோகிராம் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபாய் இறக்குமதி வரியை குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய கால தீர்வாக அரசாங்கம் இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்ததுடன், அரிசி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த வரையறையை இரத்துச் செய்யப்பட்டதுடன், தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய கடந்த 10 ஆம் திகதி முதல் 20 (டிசெம்பர்) திகதி வரையான காலப்பகுதியில் தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 38,500 மெற்றிக் தொன் நாடு அரிசியும், 28,500 பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோகிராம் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபாய் வரியை குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றனர். வரியை குறைத்தால் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விநியோகிக்க முடியும் என்று இறக்குமதியாளர்கள் வர்த்தகம் ,உணவு பாதுகாப்பு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அரிசி இறக்குமதிக்காக தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட காலவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், அரிசி இறக்குமதி ஊடான வரி வருமானமாக 4.3 பில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.