நடிகர் அல்லு அர்ஜுன் இல்லத்தில் தாக்குதல்; 8 பேர் கைது!

by wp_fhdn

ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) பலர் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

நடிகரின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 4 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்னும் தாக்குதல்தாரிகள் இதன்போது கோஷம் எழுப்பினர்.

தாக்குதலின் போது, அல்லு அர்ஜுன் வீட்டில் இருக்கவில்லை.

எவ்வாறெனினும் தாக்குதலின் பின்னர், அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளான அல்லு அர்ஹா, அல்லு அயன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு ஜூப்ளி ஹில்ஸ் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு வீடியோ, குழுவின் உறுப்பினர்கள் அர்ஜுனின் வீட்டில் பூந்தொட்டிகள் மற்றும் பிற பொருட்களை தரையில் வீசுவதைக் காட்டியது.

நெரிசல் தொடர்பாக தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தவறான நடத்தைகளில் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் மக்களை வலியுறுத்தி சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியைக் காண வந்த சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4 அன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 35 வயது பெண் உயிரிழந்திருந்தார்.

ரேவதியின் ஒன்பது வயது மகன் ஸ்ரீ தேஜ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, தெலுங்கானா மேல் நீதிமன்றின் தீப்புக்கு அமைவாக பிணையில் விடுவித்தது.

எனினும், அடுத்த சில நாட்களில் அல்லு அர்ஜுன் மீது முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பொலிஸாரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்