கப்பம் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது ! on Monday, December 23, 2024
தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய சம்பவத்தில் இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வியாபாரி ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, இந்தக் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (22) காலை கிரிபத்கொடை பகுதியிலும், பேலியகொடை பகுதிலும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.