பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று காலிஸ்தானி பிரிவினைவாதிகள், உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் திங்கட்கிழமை (23) அதிகாலை நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட குர்விந்தர் சிங் (25), வீரேந்திர சிங் என்ற ரவி (23), மற்றும் ஜஸ்பிரீத் சிங் என்ற பிரதாப் சிங் (18) ஆகியோரே இவ்வாறு பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச பொலிஸார் இணைந்து நடத்திய என்கவுண்டரில் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, பிரிவினைவாதிகளிடமிருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு க்ளோக் பிஸ்டல்கள் மற்றும் பல வகை துப்பாக்கி ரவைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
முன்னதாக, சனிக்கிழமையன்று (21) குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கலனூர் சப்-டிவிஷனில் கைவிடப்பட்ட பொலிஸ் நிலையத்தில் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும் பலத்த பொலிஸ் கண்காணிப்புக்கு மத்தியில் நடந்த இந்த தாக்குதலில் உயிர் மற்றும் உடைமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.