அமெரிக்கா vs சீனா: பனாமா கால்வாயை கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பும் டிரம்ப் – என்ன காரணம்?
அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாயைப் பயன்படுத்த கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என பனாமா அரசை எச்சரித்துள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான பனாமா, அமெரிக்க சரக்கு கப்பல்களுக்கு அதிக கட்டணங்களை வசூலிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை, அரிசோனாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசுகையில், “பனாமா அமெரிக்காவிடம் தன்னிச்சையாக அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றது. நாங்கள் அதை உடனடியாக நிறுத்துவோம்.” என்றார்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவி ஏற்க உள்ளார். `டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற கன்சர்வேடிவ் குழுவில் உரையாற்றிய போது டிரம்ப் இவ்வாறு கூறினார்.
டிரம்பின் இந்த கூற்றுக்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளார்.
“பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் எங்களுடையது, அதைச் சுற்றியுள்ள பகுதியும் எங்களுடையது. பனாமாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது” என்று அதிபர் முனிலோ கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் என்று அமெரிக்க அதிபர் ஒருவர் கூறுவது வரலாற்றில் மிகவும் புதுமையான ஒன்று. இதற்கு முன்னர் இப்படி நடந்தது மிகவும் அரிது.
ஆனால், அதை எப்படி செய்யப் போகிறார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை. ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அவர் தனது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து பல கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
பனாமா கால்வாயின் முக்கியத்துவம் என்ன?
முன்னதாக, பனாமா கால்வாய் அமெரிக்காவிற்கு ‘முக்கியமான தேசிய சொத்தாக’ இருந்ததாக டிரம்ப் கூறியிருந்தார்.
பனாமா அரசு கப்பல் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால், பனாமா கால்வாய் மீதான கட்டுப்பாட்டை திரும்பக் கோருவேன் என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
82 கிலோமீட்டர் நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கிறது.
இது 1900-களின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. 1977-ஆம் ஆண்டு வரை இந்த கால்வாய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதற்குப் பிறகு, பனாமாவும் அமெரிக்காவும் அதன் மீது கூட்டுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன, ஆனால் 1999-இல் பனாமா அதன் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14,000 கப்பல்கள் பனாமா கால்வாய் வழியாக செல்கின்றன.
பனாமா கால்வாய் 1914-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அந்த கால்வாய் திறக்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகின்றன.
பனாமா கால்வாய் திறமையான பொறியியல் செயல்முறையில் உருவானது என்றும், உலக வர்த்தகத்தில் ஒரு புரட்சிகர கட்டமைப்பு என்றும் பார்க்கப்படுகிறது.
பனாமா நகரம் அதன் வானளாவிய கட்டடங்களுக்கு பெயர் பெற்றது. இது லத்தீன் அமெரிக்காவின் துபாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கால்வாய் பனாமா நகரத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட இயந்திரம்.
பனாமா கால்வாய் நிர்வாகம் பனாமா நாட்டின் வசமான பிறகு, ஒவ்வோர் ஆண்டும் இந்த கால்வாயில் இருந்து ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் போக்குவரத்துக் கட்டணமாக அந்நாட்டிற்கு கிடைக்கிறது.
பனாமா கால்வாய் எதிர்கொள்ளும் சவால்கள்
பனாமா கால்வாயைப் போல உலகில் மற்றொரு முக்கிய கால்வாயாக திகழ்வது சூயஸ் கால்வாய் (Suez Canal) தான். சூயஸ் கால்வாய் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையில் நிகரகுவா தனது சொந்த கால்வாயை உருவாக்கி வருகிறது.
பனாமா கால்வாய் திட்டத்திற்கான யோசனை முதன்முதலில் 15 ஆம் நூற்றாண்டில் முன்மொழியப்பட்டது.
ஆரம்பக்கட்டத் தயக்கங்களுக்குப் பிறகு, பிரான்ஸ் 1881இல் இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. ஆனால் நிதி இழப்புகளுடன், நோய் மற்றும் விபத்துகளில் மக்கள் இறந்ததால் அந்த திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இதன் பிறகு, 1904 இல், அமெரிக்கா இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியது மற்றும் வேலையைத் தொடங்கியது. பனாமா கால்வாய் வழியே கப்பல் போக்குவரத்து 1914 இல் தொடங்கியது.
பனாமா கால்வாய் வழியாக அதிகம் பயணிப்பது அமெரிக்கக் கப்பல்கள் தான். பனாமா கால்வாய் ஆணையத்தின் கூற்றுப்படி, சுமார் 75 சதவீத சரக்குகள் பனாமா கால்வாய் வழியாக அமெரிக்காவிற்கு செல்கின்றன அல்லது வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 270 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் இந்தப் பாதை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பனாமா கால்வாயில் நீர் குறைந்துவிட்டிருப்பது, வர்த்தகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017-இல், பனாமா தைவானுடனான ராஜதந்திர உறவுகளை முடித்துக் கொண்டு சீனாவுடன் ராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்தியது. தைவானுடன் ராஜ தந்திர உறவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளுடன் சீனா ராஜ தந்திர உறவுகளைப் பேணுவதில்லை. ஏனெனில் தைவானை சீனா தனது ஒரு பகுதியாகவே பார்க்கிறது. பெரும் முதலீடுகளை செய்ததன் காரணமாக பனாமாவின் முக்கிய நட்பு நாடாக சீனா மாறியுள்ளது.
பனாமா கால்வாயின் இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். இந்த கால்வாய் தவறானவர்களின் கைக்கு சென்றுவிட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் இந்த கால்வாய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை என பனாமா அதிபர் தெரிவித்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு