மேல்மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய தடை மேல்மாகாண ஆசிரியர்கள் தங்களின் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில், பாடசாலை நேரத்துக்கு பின்னர் அல்லது வார இறுதி நாட்களில் மற்றும் அரச விடுமுறை தினங்களில் பணம் சேகரித்து மேலதிக வகுப்பு நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பான சுற்று நிருபம் மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.டி.ஆர். நிஷா்ந்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்று நிருபம் மேல்மாகாண கல்வி பணிப்பாளர், வலய பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் சில ஆசிரியர்கள் தங்களின் பாடசாலை மாணவர்களுக்கு வெளி பிரதேசங்களில் பணம் அறவிட்டுக்கொண்டு மேலதிக வகுப்பு நடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தனியார் மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்யும் தீர்மானம் தொடர்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி, அவர்கள் அதுதொடர்பில் அறிந்திருப்பதாக உறுதிப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலாேசனைகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆசிரியர்கள் தங்கள் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை இதற்கு முன்னர் சப்ரகமுவ மாகாணத்தில் தடை செய்திருந்தது. அதன் பின்னர் மத்திய மாகாணமும் அந்த தடையை செயற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.