நியாண்டர்தால் மனிதர்களின் புத்தி கூர்மையை பசை வெளிப்படுத்தியது எப்படி?
- எழுதியவர், மார்க் மியோடோனிக்
- பதவி,
-
பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை.
போன்கள் முதல் விமானங்கள் வரை, கட்டடங்கள் முதல் செருப்புகள் வரை, நம்முடைய உலகமே பசையால் பிணைக்கப்பட்டிருக்கிறது.
சிக்கி முக்கிக் கல் மூலம் நெருப்பை உருவாக்கியதைப் போன்றே, பசைகளை உருவாக்கியதும் நம்முடைய முன்னோர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று.
அதை நாம் பல காலமாக பயன்படுத்தி வருகிறோம்.
“பழங்காலத்தில் கருவிகளை உருவாக்க அவைகள் பயன்படுத்தப்பட்டன. கூர்மையான தகடுகளை கைப்பிடியோடு பொருத்தி கத்திகள் உருவாக்க பயன்படுத்தப்பட்டது” என்கிறார் நெதர்லாந்தின் டெல்ஃப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீஸ்கே லங்கேஜன்ஸ்.
கைப்பிடிகளைக் கொண்டிருக்கும் கருவிகள் துல்லியமாகவும், வேகமாகவும் செயல்படக் கூடியவை.
ஆனால், அதையும் தாண்டி பசைகளால் பல்வேறு விஷயங்கள் செய்ய முடிந்தது.
“ஒரு சில பசைகள் நீரால் பாதிப்படையாதது. கூடைகளில் அதனை பயன்படுத்தி வலுவுடையதாகவும் அதே நேரத்தில் நீர்புகா பொருளாகவும் உருவாக்க இயலும்.”
ஆரம்பகால கலை வடிவங்களிலும் அவை பயன்படுத்தப்பட்டன.
”உங்களிடம் ஒரு நிறமி உள்ளது. அதனை உங்களின் குகையின் சுவர்களில் ஒட்ட வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பிசின் போன்ற ஒன்றை பயன்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார் லங்கேஜன்ஸ்.
எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் விளையாடுவதற்கும் அவை பயன்பட்டன.
“களிமண் போன்று அது கடினமானதாக இருந்திருக்கலாம்”
மிகவும் பழமையான பசையானது 1,90,000 ஆண்டுகள் பழமையானவை என்கிறார் லங்கேஜன்ஸ்.
”நியாண்டர்தால்களால் கற்களால் உருவாக்கப்பட்ட இரண்டு கருவிகளில் இந்த பசை கண்டறியப்பட்டது. அவை இத்தாலியில் கண்டறியப்பட்டது”.
இதன் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, பசைகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்கள் மட்டும் கிடைக்கவில்லை கூடவே அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற தகவல்களும் கிடைத்தன.
நாம் யார் என்பதை உணர்த்தும் பசை!
அந்த கல் இடுக்குகளில் காணப்பட்ட பசை பிர்ச் தார். அது ஒருவகை ஒட்டும் கருப்புநிற புட்டி.
இதை உருவாக்க, மரத்தின் பட்டை மிக அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் லங்கேஜன்ஸ்.
“பிரச்னை என்னவென்றால், கற்கால மனிதர்கள் மத்தியில் தீயால் பாதிப்படையாத பாத்திரங்கள் இல்லை.”
பிறகு நம் முன்னோர்கள் அதை எப்படி உருவாக்கினார்கள்?
“எனது குழுவும் நானும் அது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டோம். பட்டையை மிகப் பெரிய சுருட்டு போல உருட்டி, தரையில் உள்ள ஒரு துளையில் வைத்து, அதை பற்றவைத்து காத்திருந்திருப்பார்கள்.”
அறிவாற்றல் திறன் இருக்கும் பட்சத்தில் தான், பொருட்களை முறையாக பயன்படுத்தி வெப்பத்தின் மூலமாக ஒட்டும் தன்மையை உருவாக்க முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு மொழி ஏதேனும் இருந்திருக்குமா? அல்லது அவர்களுக்கு வெப்பம் குறித்த ஏதேனும் ஒரு யோசனை இருந்திருக்குமா?
“தார் தயாரிப்பது கடினம் என்பதால், நியாண்டர்தால்கள் மிகவும் புத்திசாலிகள் என்று என்னுடைய சகாக்கள் நம்புகின்றனர்.”
பசைகள், நம் முன்னோர்கள் பற்றி நமக்கு அளித்த குறிப்புகள் இவை மட்டுமல்ல.
”பல தொல்லியல் தளங்களில் பசைகள் பயன்படுத்தப்பட்டு இணைக்கப்பட்ட பொருட்களை நாங்கள் கண்டறிந்த போது, அந்த பசைகள் நன்கு மென்றிருப்பதை நாங்கள் கவனித்தோம்” என்கிறார் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஹான்ஸ் ஷ்ரோடர் கூறுகிறார்.
”அவர்கள் ஏன் அதை மென்று சாப்பிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் பல சந்ததியினர் தாண்டி நமக்கு உதவியாக இருக்கிறது. பிர்ச் தார் ஒரு ‘டைம் கேப்சூல்’ போன்றது. அது உண்மையில் டி.என்.ஏவைப் பாதுகாக்கிறது.”
எழுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த தாரிலிருந்து மரபணு மூலக்கூறுகளை பிரித்தெடுத்தார் ஷ்ரோடர்.
“டென்மார்க்கில் உள்ள லோலண்ட் தீவில் உள்ள ஆரம்பகால கற்கால தளத்தில் இருந்து முதல் பொருள் பெறப்பட்டது. சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, யாரோ ஒருவர் தாரை மென்று கடற்கரையில் உள்ள நாணலில் துப்பியிருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அதனை கண்டறிந்துள்ளார்,” என்று கூறுகிறார் ஸ்ரோடர்.
ஆராய்ச்சியாளர்களால் அதில் இருந்து டி.என்.ஏவைப் பெற முடிந்தது. இந்த டி.என்.ஏவை கொண்ட நபருக்கு லோலா என பெயரிட்டு இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்பு எப்போதும் மனித எலும்புகளில் இருந்து மட்டுமே டி.என்.ஏ. எடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் முதன்முறையாக எலும்புகள் அல்லாத மற்றொரு பொருளில் இருந்து டி.என்.ஏ. எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் லோலாவுக்கு கருமையான தோல், அடர் பழுப்பு நிற முடி மற்றும் நீல நிற கண்கள் இருந்ததையும், அவர் ஹேசல்நட் மற்றும் வாத்தை சாப்பிட்டதையும் வெளிப்படுத்தின.
பசைகள் அவற்றைப் பயன்படுத்திய நபர்களைப் பற்றிய தகவல்களின் ஆதாரமாகவும் இருக்கலாம்.
மேலும் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்களில் காணப்படுபவை நாகரிகங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே நம்முடன் இருந்தவை என்பதைக் காட்டுகின்றன.
உண்மையில், லோலா வசித்த குளிர் பிரேதசத்திலும், அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளிலும் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரப்பர் எனும் அதிசயப் பொருள்
மெசோஅமெரிக்காவை ஸ்பெயின் நாட்டினர் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்த வந்த போது அவர்கள் ஒரு பொருளை கண்டறிந்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்திய அந்த பொருளை அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.
அந்த பொருள் மூலம்தான், எலாஸ்டிக் பேண்டுகள் முதல் துள்ளும் பந்துகள் வரை அனைத்தையும் உருவாக்கினார்கள். தங்களின் பாதங்களை பாதுகாக்கும் உறுதியான செருப்புகளையும் அவர்கள் அதில் இருந்துதான் செய்தனர். அந்த பொருட்கள் ரப்பர் மரத்தின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டன.
காலனி ஆதிக்கம் செலுத்திய நாட்டினருக்கு, இப்பொருட்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. ஐரோப்பிய தொழில் நுட்பத்தில் இது எப்படிப் பொருந்தும் என்பதை அறியாமல் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு அதனை எடுத்துச் சென்றனர்.
ஆனால், 17ம் நூற்றாண்டில் அந்த கண்ணோட்டம் மாறத்துவங்கியது. விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஜோசப் ப்ரீஸ்ட்லி காகிதத்தில் பென்சிலால் எழுதிய எழுத்துகளை அழிக்க இந்த பொருள் எவ்வளவு பயனுடையதாக இருக்கிறது என்று அவர் உணர்ந்த தருணம் அது.
பலர் அந்த பொருளை வெவ்வேறு வகையில் பயன்படுத்தினார்கள். ஸ்காட்லாந்து வேதியியலாளர் சார்லஸ் மெக்கிண்டோஷ், துணிகளின் அடுக்குகளுக்கு நடுவே இந்த ரப்பரை வைத்து மெக்கிண்டோஷ் ரெய்ன்கோட்டுகளை உருவாக்கினார்.
ஆனால் ரப்பர் ஆடைகளில் சில குறைபாடுகள் இருந்தன. ஜீரோவுக்கும் குறைவான வெப்ப சூழலில் அவை உடையும் தன்மை கொண்டதாக இருந்தது. வெப்பம் அதிகரிக்கும் போது பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும், நாற்றம் அடிக்கும் பொருளாகவும் ரப்பர் மாறியது.
ஒரு மனிதன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, ரப்பரின் பரந்துபட்ட உபயோகத்திற்கு வழிவகை செய்தார். அவர் தான் சார்லஸ் குட்இயர். வெற்றிக்கான அவரது பாதை நீண்டதாகவும், கடினமானதாகவும் மற்றும் ஆபத்துகளை கொண்டதாகவும் இருந்தது.
நோபல் ஒப்செசன் என்ற புத்தகத்தில் சார்லஸின் பயணம் குறித்து பேசும் ஆசிரியர் சார்லஸ் ஸ்லாக், “பல வருட தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நிறைய இழப்புகளை சந்தித்தும், கடனாளியாக பல ஆண்டுகள் துயரமிக்க வாழ்வை அவர் வாழ்ந்து வந்தார்,” என்று குறிப்பிடுகிறார்.
“அவர் வெவ்வேறு பொருட்களைப் பரிசோதித்தார். நைட்ரிக் அமிலத்தை சுவாசித்தார். அது அவரின் உயிரைக் கூட கொன்றிருக்கும்,”.
ஆனால் ரப்பர் மீது அவர் நடத்திய ஆராய்ச்சி இறுதியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
“1839-ம் ஆண்டு அவர் ரப்பரையும் சல்ஃபரையும் கலந்தார். ஆனால் அது எப்படியோ சூடான அடுப்பில் விழுந்துவிட்டது. அவர் திரும்பி வந்து அதை பார்த்தபோது, ரப்பர் மாறிவிட்டது. அது கடினமாக இருந்தது. அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. குளிர் மற்றும் வெப்பத்தின் விளைவுகளுக்கு ஆளாகாத வகையில் அந்த பொருள் இருந்தது.”
“வெப்பத்தை ஒரு தீர்வாகப் பயன்படுத்துவதை யாரும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்கள், ஏனென்றால் வெப்பம் ரப்பரின் எதிரி. ஆனால் சல்ஃபருடன் இணைந்து ஒரு புதிய பொருளை உருவாக்கியது.”
பண்டைய மெசோஅமெரிக்கர்கள், சல்ஃபரைக் கொண்ட இபோமியா ஆல்பா என்ற உள்ளூர் கொடியின் சாறுடன் ரப்பர் மரப்பாலை கலந்தனர்.
ஐரோப்பியர்கள் ரப்பரை மட்டும் எடுத்துச் சென்றனர். ஆனால் ரகசியங்களை இல்லை. அதனால் தான் அதனை கண்டுபிடிக்க பல நூற்றாண்டுகள் ஆனது.
புதிய கண்டுபிடிப்பின் உதவியுடன் வல்கனைசேஷன் எனப்படும் ரப்பரைச் செயலாக்கும் முறையை உருவாக்கத் தொடங்கினார், குட்இயர்.
ஷாக் அப்சார்பர்கள், ஹெர்மீடிக் முத்திரைகள் மற்றும் நெகிழ்வான குழாய்கள் என்று புதிய தொழில்துறை யுகத்தில், ரப்பர் இன்றியமையாததாகிவிட்டது.
இன்று அது மிகவும் சர்வ சாதாரணமாக ரப்பர் உள்ளது. ஆனால் நாம் அதை சில நேரங்களில் பாராட்ட மறந்துவிடுகிறோம்.
ப்ளைவுட்களின் பங்கு
நாம் இடம் பெயர்வதை முற்றிலுமாக டையர்கள் மாற்றின. ஆனால் பசைகள் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. விமானத்துறையில்.
விமானப் போக்குவரத்து வரலாறு முழுவதும், பசைகள் புதிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது. இதனால் விமானங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகவும், உயரமாகவும், அதிக உயரமாகவும் பறக்க வழிவகை செய்தது.
மற்றொரும் ஒரு முக்கியமான பொருள் ப்ளைவுட்.
இது மிகவும் மெல்லிய மரத் துண்டுகளுக்கு நடுவே பசையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது பண்டைய எகிப்தியர்களின் காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.
இது மர வேலையில் ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. ஈரமான காலங்களில் மரங்கள் விரியும் தன்மையை கொண்டது. ஆனால் பசைகள் மரப்பலகைகளை நிலையாக இருக்க வைக்க உதவியது.
இந்த தொழில் நுட்பம் பல நூற்றாண்டுகளாக செயல்பாட்டில் இருந்தது. ஆனால் 20ஆம் நூற்றாண்டில் தான் ப்ளைவுட்டின் பயன்பாடு உண்மையாகவே துவங்கியது.
இலகுவாகவும், நகர்த்துவதற்கு எளிதாகவும் இருப்பதால், விமானங்களில் ப்ளைவுட்டை பயன்படுத்துவதற்கான யோசனைகள் பலருக்கு இருந்தது.
குறிப்பாக முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, விமான வடிவமைப்பில் ப்ளைவுட் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1930-களில், அமெலியா ஏர்ஹார்ட் போன்ற விமான நிறுவனங்கள் ப்ளைவுட் விமானங்களால் சாதனை படைத்தனர்.
இந்த விமானங்கள் மகத்தான வெற்றியை பதிவு செய்தாலும் கூட அது அதிக நாள் நீடிக்கவில்லை.
கலாசார காரணங்களுக்காக மரம் கைவிடப்பட்டது. குறிப்பாக ராணுவ ஒப்பந்தக்காரர்களால் போர் காலத்தில் மரம் கைவிடப்பட்டது. அது காலாவதியான பொருளாகக் கருதப்பட்டது. விமானம் தான் எதிர்காலத்தின் தேவை என்பதை உணர்ந்தனர். மேலும் உலோகத்தால் விமானங்களை செய்ய விரும்பினர்.
இரண்டாம் உலகப் போரில்தான் உலோகத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
லண்டனில், ஜெஃப்ரி டி ஹாவிலாண்ட் (Geoffrey de Havilland) என்ற பொறியாளர், போருக்கு தேவையான விமானங்களை மிக விரைவாகவும், குறைந்த விலையிலும் உருவாக்கித் தர முன்வந்தார்.
ஹாவிலாண்ட் அன்றைய சூழலில் ஜெர்மன் போர் விமானத்தையும் விட வேகமாக பறக்கக்கூடிய ஒரு வேகமான விமானத்தை உருவாக்கினார். இதற்கு மொஸ்கிட்டோ என்று பெயர் இடப்பட்டது.
இது விமான வடிவமைப்பின் வெற்றியாக கருதப்பட்டது. ஒரு போர், உளவு மற்றும் குண்டுவீச்சு விமானமாக இது செயல்பட்டது. மிகவும் வேகமாக செயல்பட்ட காரணத்தால், தற்காப்பு இயந்திர துப்பாக்கிகள் கூட அதற்கு தேவைப்படவில்லை.
ப்ளைவுட், மரத்திற்கான ஒரு தரக்குறைவான மாற்றாகக் அறியப்படவில்லை. பல வடிவமைப்பாளர்கள் 1940கள் மற்றும் 1950களின் மிகவும் பிரபலமான ஃபர்னிச்சர்களை உருவாக்கினார்கள்.
இந்த நாட்களில் நீங்கள் சமையலறைகள் முதல் ஸ்கேட்போர்டுகள் வரை எல்லா இடங்களிலும் ப்ளைவுட்கள் பயன்பட்டதை காணலாம்.
இருப்பினும் விமானத்துறையில் மரங்களுக்கு பதிலாக அலுமினிய கலவைகளே பயன்படுத்தப்பட்டன. அவை வலுவான, கடினமான மற்றும் அரிப்பை எதிர்க்கும். ஆனால் அதிக எரிபொருள் திறன் கொண்ட விமானத்தை உருவாக்குவதில் அவை கைகொடுக்கவில்லை.
எனவே ஒரு புதிய வகை இலகுரக பொருட்கள் வெளிவரத் தொடங்கியபோது, விண்வெளி பொறியாளர்கள் உற்சாகமடைந்தனர்.
எபோக்சி ரெசின்கள் எனப்படும் புதிய பசையை உயர் செயல்திறன் கொண்ட இழைகளுடன் இணைத்து, அதிக திறன் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கினார்கள்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு விமானங்ளை உருவாக்குவதற்கான சவாலை எதிர்கொண்டுள்ளதால், பசைகள் முன்னேற்றத்தின் மையத்தில் தொடர்ந்து இருக்கும்.
போர் காயங்கள்
சில மணிநேரங்களில் பறந்து உலகின் மறுபக்கத்தை அடையும் சக்தியை பசைகள் நமக்கு வழங்கியுள்ளன.
மேலும் உயிர்களைக் காப்பாற்றும் சக்தியும் கூட இந்த பசைகளில் உள்ளன.
லாக்டைட் என்று அழைக்கப்படும் சயனோஅக்ரிலேட் சூப்பர் பசை ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு. வேதியியலாளர் ஹாரி வெஸ்லி கூவர் ஜூனியரின் செய்த பிழையால் உருவானது இது. அவர் 1942ம் ஆண்டு ரசாயன முறையில் உருவாக்கப்பட்ட ஃப்லிம்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ஒரு விலையுயர்ந்த ஆப்டிகல் கருவி அவர் சோதித்த பொருளால் பாழடைந்தது. அதனைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, அதன் அற்புதமான ஒட்டும் திறனைக் கவனித்தார் அவர்.
அதன் ஒட்டும் வேகமும் ஆச்சரியம் அளித்தது. ஏன் என்றால் பசைகள் காய அதிக நேரம் தேவைப்படும்.
இந்த புதிய சேர்மங்கள் கிட்டத்தட்ட உடனடியாக செயல்படக்கூடியவை. மேலும் விரைவில் ஒட்டக் கூடியவை.
இது சாத்தியமான மருத்துவ பயன்பாடுகளை கொண்டிருந்தது. ஆனால் எரிச்சல் மற்றும் நச்சுத்தன்மை காரணமாக ஆரம்ப காலங்களில் இது சாத்தியமாகவில்லை.
இருப்பினும், ஒரு புதிய செய்முறை காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தது என்பதை நிரூபித்தது. அமெரிக்க ராணுவம் அதில் தீவிர ஆர்வம் செலுத்தியது.
அவர் வியட்நாம் போருக்கு சயனோஅக்ரிலேட் ஸ்ப்ரேக்களை அனுப்பினார். மிகவும் கடுமையான காயங்களை பெற்ற வீரர்களுக்கு அதனை பயன்படுத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.
காயம் அடைந்து ரத்தம் வந்து கொண்டிருக்கும் உறுப்புகளில் நேரடியாக இதனை பயன்படுத்த முன்வந்தனர்.
போர் காலங்களில் இது சாத்தியமான வெற்றிகளை பெற்றுத் தந்தாலும், வழக்கமான மருத்துவ சிகிச்சையில் இதனை பயன்படுத்த முடியுமா என்பது தெளிவாக இல்லை. மேலும் இது புற்றுநோயை உருவாக்கும் என்ற கவலையும் இருந்தது.
ஆனால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, காயங்களை மூட இது பாதுகாப்பானவை என்று உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சவால்கள்
நவீன பசைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. மிகவும் பலமானவை. ஆனால் அவற்றை உரிப்பது கடினம்.
எலெக்ட்ரானிக் பொருட்களில் அதிக அளவில் பசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே இடத்தில் வைப்பதற்கு மட்டுமின்றி நீண்ட நாட்கள் உழைக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த பசைகள்தான் எலெக்ட்ரானிக் பொருட்களை சரி செய்யவும், மறு சுழற்சிக்கு உட்படுத்தவும் சவால்களை உருவாக்குகிறது. பல நேரங்களில் இந்த பொருட்கள் குப்பைகளில் போய் சேருகின்றன.
நவீனகால செருப்புகளை மறுசுழற்சி செய்வதையும் இது கடினமாக்கியுள்ளது. இறுதியில் அதிக ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகரிக்க காரணமாகின்றன.
அதனால்தான் பசையின் தன்மையை உடனடியாக நீக்கக் கூடிய ரிவெர்சிபிள் அதேஸிவ்கள் பற்றிய ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.
இது நிலைத்தன்மையை உருவாக்க பல பயன்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாயாஜாலம் போல் இருக்கலாம். ஆனால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண பசைகளை நாம் கண்டறிந்தோம். பதிலுக்கு பசைகள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.