இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு!

by wp_fhdn

பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வீதி விபத்துகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை பண்டிகை காலம் முடியும் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில், பொது பயணிகள் பஸ்களை ஆய்வு செய்வதில் முதன்மை கவனம் செலுத்தப்படும்.

சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை இயக்குகிறார்களா அல்லது பிற போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளாரா என்பதை அதிகாரிகள் குறிப்பாகச் பரிசோதிப்பார்கள்.

மேலும், கவனக் குறைாவக அதிக வேகமாக வாகனம் செலுத்துதல், சாலை விதிகளை மீறுதல், பொருத்தமற்ற டயர்கள் அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகளுடன் இயக்கப்படும் பஸ்கள் மற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கையில் ஏனைய வகை வாகனங்களின் சோதனைகளும் அடங்கும்.

இந்த நடவடிக்கையின் போது 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுமக்கள் 119 மற்றும் 1997 என்ற துரித எண்கள் மூலம் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விதிமீறல்கள் உட்பட பாதுகாப்பற்ற அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் குறித்து முறைப்பாடு அளிக்கலாம்.

அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையம் அல்லது தங்கள் பிராந்தியங்களில் நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து அதிகாரிகளின் மொபைல் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்