அரசியலை ஆட்டிப் படைக்கும் பட்டங்கள்! மோடி சொன்னாராம்! அநுர கேட்டாராம்! பனங்காட்டான்

by admin


பாம்பைச் சாகடித்தால் அதனை எரித்து சாம்பரை நிலத்தில் புதைக்க வேண்டும். இல்லையேல் கொஞ்சம் காற்றுப்பட்டாலும் அது உயிர்பெற்று எழும்பி விடும். தமிழரசாருக்கான ஆலோசனை இது. 

13ம் திருத்தம் தொடர்பில் இந்தியாவுடன் பேச எதுவுமில்லை. எல்லை நிர்ணயம் நிறைவுபெற்ற பின்னரே மாகாண சபைத் தேர்தல் பற்றி தீர்மானிக்கப்படும். இந்தியாவுக்கான இலங்கையின் பதில் இது.  

இலங்கை அரசியல்வாதிகளின் கல்வித் தகைமைகளும் பட்டங்களும், நீதிமன்றங்களில்; படியேறும் தமிழரசுக் கட்சியினரின் அலங்கோலங்கள், ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்கவின் இ;ந்திய விஜயம் என்பவை நிகழ்கால முக்கிய சமாசாரங்கள். 

இவைகளை அலசுவதே இந்த வாரப் பத்தியாக அமைகின்றது. இதன்போது பல பின்னணித் தகவல்களையும் இவைகளின் போக்கு பற்றியும் தெரியக்கூடியதாக இருக்கும். 

அநுர குமாரவின் புதிய அரசாங்கத்தின் சபாநாயகராகப் பதவியேற்ற அசோக ரன்வெல அந்தப் பதவியில் அமர்ந்த வேகத்தைவிட அதிலிருந்து வெளியேற்றப்பட்ட வேகம் றொக்கற் போன்றது. கல்விப் பெறுபேறுகள் ஊடாக பெறமுடியாது போன பட்டத்தை தமது பெயருக்கு முன்னால் சூட்டிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இப்பதவி நீக்கம் என்று சொல்லப்படுகிறது. 

தமது கட்சியின் தலைவரான அநுர குமாரவின் உத்தரவின் பேரில் இவர் சபாநாயகர் பதவியைத் துறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இவருக்கு ஷநல்ல பிள்ளை| என்ற பெயர் கிடைத்துள்ளது. அதேசமயம் வேறு சில அரசதரப்பு எம்.பிக்களும் அமைச்சர்களும் தமது பெயர்களுக்கு முன்னால் தேர்தல் காலத்தில் செருகிய கலாநிதி (டாக்டர்), பேராசிரியர் (புரொபசர்) போன்ற பட்டங்களை மெதுவாக இணையத் தளங்களிலிருந்து நீக்கி விட்டதாக கிசுகிசு பாணியில் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. 

இவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கலாநிதி பட்டங்களை கல்லாநிதிப் பட்டங்கள் என்று பொதுவாக பலரும் கிண்டலடிப்பதுண்டு. அதாவது கல்வி கற்காது காசு கொடுத்து பெறப்பட்ட பட்டங்கள் என்பது இதன் அர்த்தம். கடதாசிப் பட்டங்கள் என்றும் இதனை அழைப்பதுண்டு. அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகளில் இயங்கும் சில அமைப்புகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தக் கடதாசிப் பட்டங்களை தபாலில் அனுப்பி வைக்கும் பழக்கம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையிலிருந்து வருகிறது. 

அமெரிக்க டாலரில் சுமார் 300 வரை பெற்று இந்தக் கடதாசிப் பட்டங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பட்டம் வழங்கும் அமைப்புக்கு அங்கத்துவப் பணம் என இது சொல்லப்படுகிறது. கனடா, பிரிட்டன் உட்பட பல நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் மட்டுமன்றி பத்திரிகை – வானொலி – சஞ்சிகையாளர்களும் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களும் பல இந்துமத குருமார்களும் இந்தக் கடதாசிப் பட்டங்களை பிரேம் போட்டு வீடுகளிலும் தங்கள் அலுவலகங்களிலும் தமக்குத் தாமே தலைப்பாகி கட்டி வந்துள்ளனர். தங்கள் லெட்டர் ஹெட்டில் கல்லாநிதிப் பட்டத்தை தடித்த எழுத்தில் போட்டு பெரும் மகிழ்வுமடைகின்றனர். 

அநுர குமார அரசிலுள்ளவர்களின் கடதாசிப் பட்டங்கள் அம்பலமானதால் உலகெங்கும் வாழும் இவ்வகைப் பட்டம் பெற்றவர்கள் இன்று திக்குமுக்காடுகின்றனர். தமிழ்நாட்டில் இவ்வாறு கடதாசிக் கலாநிதிப் பட்டம் பெற்ற அரசியல்வாதி ஒருவர் தமது வீட்டின் முன் சுவரில் ஆங்கிலத்தில் தமது பெயரின் முன்னால் டாக்டர் என்று எழுதியதால் அயலிலுள்ள நோயாளிகள் பலர் அவர் வீட்டின் முன்னால் மருத்துவ தேவைக்காகச் சென்றதால் ஏற்பட்ட களேபரத்தை அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று பிரசுரித்து அவரை அவமானப்படுத்தியது. 

அநுர குமார ஆட்கள் ஒவ்வொருவரதும் கல்வித் தகைமைகளை முழுமையாக ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. இதனால் எதிர்க் கட்சியினரில் சிலரும் அகப்பட்டுள்ளனர் போலத் தெரிகிறது. ”விட்டாரையா, பட்டம் விட்டாரையா” என்ற பாடலை இது நினைவூட்டுகிறது. 

அடுத்த சமாசாரம், தமிழரசுக் கட்சிக்காரரின் தொடர் வழக்குகள். கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுமந்திரன், கிளிநொச்சி சிறிதரனிடம் படுதோல்வி கண்டதையடுத்து வழக்குகள் ஆரம்பமாகின. கட்சியின் புதிய தெரிவுகள், முக்கிய கூட்டங்கள் என்று பல இடைநிறுத்தம் காணும் வகையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

சு(ம்)மா ஆரம்பித்து வைத்ததாக பரவலாகப் பேசப்படும் இந்த அரசியல் வழக்குகள் இப்போது தனக்குத்தானே சூனியம் வைத்ததுபோல அந்த ஒருவரின் வட்டத்தையே சுற்றி வளைக்குமளவுக்கு வழக்குகள் அதிகரித்து வருகிறது. தலைவரில்லாத தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால தலைவராக விரும்பும் சிறை மீண்ட செம்மல் மாவை சேனாதிராஜா தள்ளாத வயதில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். சுமந்திரனின்  ஏவலாக இயங்குவதாக பொதுவெளியில் அறியப்படும் ப.சத்தியலிங்கத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு அவரது வன்னியின் இன்னொரு அரசியல்வாதியான சிவமோகன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகளை பூர்த்தி செய்த தமிழரசுக் கட்சியின் பூரிப்பில் மகிழ்வடையும் கட்சியினர் உள்வீட்டுக்குள் இன்னும் எத்தனை வழக்குகளை சந்திக்கப் போகிறார்களோ தெரியாது. மொத்தத்தில் கட்சியை உடைத்தே தீருவோம் என்று கண்ணிவெடியுடன் நிற்கும் இவர்கள்தான் கட்சியின் தலைவர்களும் தளபதிகளுமாம். 

இந்த நாடகங்களைப் பார்க்கும்போது தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் தமது போராளிகளுக்கு பலமுறை தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அது இதுதான்:

‘பாம்பைச் சாகடித்தால் அதை அப்படியே விட்டுச் செல்லக்கூடாது. சற்றுக் காற்றுப் பட்டாலும் அது உயிர்த்துவிடும். பாம்பைக் கொலை செய்தால் அதனை எரித்து அதன் சாம்பரை நிலத்தில் புதைக்க வேண்டும்” என்பதே அவரது ஆலோசனை. 

தமிழரசுக் கட்சிக்குள் இருந்து கொண்டே நச்சுவிதைகளைப் பரப்பி கட்சியை அழித்தொழிக்க முனைவோர் யாராக இருந்தாலும் – முக்கியமாக தேர்தலில் வீழ்த்தப்பட்டவர்களை பாம்பின் கதை ஊடாக பார்க்க வேண்டிய காலம் இது. அவர்கள் மீள எழும்ப முடியாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதே தேசியத் தலைவரின் கருத்தினூடாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 

இப்பத்தியின் மூன்றாவது அம்சம், அநுர குமாரவின் இந்திய விஜயம். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இது. இந்தியா அயல்நாடு என்ற வகையில் அயலுறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் இலங்கையின் முன்னைய அரசத் தலைவர்களிலிருந்து பேணப்பட்டு வரும் நல்லெண்ண முறைமை. 

அநுர குமார மாக்சிஸ ஜனாதிபதி என்று அடையாளம் காணப்பட்டாலும், சோசலிஸ – கம்யூனிஸ நாடுகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேண வேண்டிய தேவையுள்ளவர். இது கட்டாயமும்கூட. விரைவில் இவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதை இதனூடாகக் காணலாம். எனினும், இலங்கைத் தலைவர்கள் தங்களது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்வது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இலங்கையின் புதிய அரசுத் தலைவருக்கான வருகை அழைப்பு விடுப்பதை இந்தியா பாரம்பரிய நiமுறையாக மேற்கொண்டு வருகிறது. 

இந்திய ஜனாதிபதியும் அந்நாட்டின் பிரதமரும் அநுர குமாரவை வரவேற்ற பாங்கு, அவரது அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் கைகூப்பியும், கைலாகு கொடுத்தும் மதிப்பளித்த முறைமைகள் சர்வதேச ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. 

‘நீ கேட்பதெல்லாம் நான் தருவேன். நீ கேட்காததும் தருவேன்” என்று கதாநாயகி பாடும் பாடல் ஒன்று தமிழ்ச் சினிமாவில் பிரபலமானது. அந்தப் பாணியில் இலங்கை ஜனாதிபதி கேட்காதவைகளையும் இந்தியா வழங்க முன்வந்தது, இலங்கையின் தேவையை ஒட்டியல்ல. அது இந்தியாவின் தேவைக்கானது. பத்தோடு பதினொன்றாக இலங்கை – இந்திய 1987ம் ஆண்டு ஒப்பந்தம், அதனூடான மாகாண சபை தேர்தலையும் பிரதமர் மோடி அநுர குமாரவுக்கு நினைவூட்டியுள்ளார். ஆம்! இதனை நினைவூட்டியுள்ளார் என்றுதான் குறிப்பிட வேண்டும். 

ஏனெனில், 1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அதனை ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்து வன்முறைகளை அவிழ்த்துவிட்டு அதில் சன்னதம் கொண்டு ஆடியது. சேகுவேரா என அழைக்கப்பட்ட ஜே.வி.பி.யின் செல்லக்குழந்தையான என்.பி.பி. எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுர குமாரவுக்கு அன்றைய நினைவுகளை மீட்கச் செய்வதற்கு ஒரே வழி 13ம் திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என்பவற்றைச் சுட்டுவதே பொருத்தமானது என்று மோடி கருதியிருக்கலாம் போலும். 

கடந்த 37 ஆண்டுகளாக இலங்கைத் தலைவர்களைச் சந்திக்கும் ஒவ்வொரு இந்தியத் தலைவரும் அந்நாட்டின் தூதுவர்களும் இதனையே சொல்லி வருகின்றனர். ஆனால், இலங்கைத் தலைவர்கள் இதனையிட்டு எதுவும் அலட்டிக் கொள்வதில்லை. சம்பிரதாயபூர்வமான ஒரு வேண்டுகோள் என்று மட்டும் கருதி எந்த உறுதியையும் கொடுப்பதுமில்லை. இதனை ஒரு அரசியல் சுத்துமாத்தாகவே இரு தரப்பும் மேற்கொண்டு வந்துள்ளன. 

இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகளும் 13ம் திருத்தத்தை மறந்துவிட்டன. பேச்சுக்காக மாகாண சபைத் தேர்தல்களை கேட்டுக் கொள்வார்கள். 75 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேரித்த சமஷ்டி கோரிக்கையையே கடந்த மாத பொதுத்தேர்தலிலும் இவர்கள் முன்வைத்திருந்தனர். கிடைக்க முடியாத கோரிக்கையை முன்வைத்தால் மட்டுமே தொடர்ந்து ஆதாய அரசியலை மேற்கொள்ள முடியுமென்பது தமிழ்த் தேசிய தரப்பினருக்கு நன்கு தெரியும். இந்தியா 13ம் திருத்தத்தையும் மாகாண சபைத் தேர்தலையும் ஆத்மசுத்தியவாகவன்றி அரசியலுக்காகவே கேட்பது இலங்கைக்குத் தெரியாததல்ல. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு தடவை தமிழர் தரப்பினரை சந்தித்தபோது, இருப்பதை வைத்துக் கொண்டு செயற்படப் பாருங்கள். இல்லாதவற்றைக் கேட்பதில் நேரத்தைச் செலவிட வேண்டாமென்று கூறியதை இங்கு நினைவுபடுத்த வேண்டும். 

இந்திய விஜயத்தின்போது 13ம் திருத்தம் பற்றியும் மாகாண சபைத் தேர்தல் பற்றியும் அநுர குமாரவிடம் மோடி விடுத்த வேண்டுகோளை அநுர குமார தரப்பு எவ்வாறு பார்த்துள்ளது என்பதை இவரது அரசின் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:

13வது திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. (13வது திருத்தம் அரசியலமைப்பில் இருப்பதால் இந்தியா பேசக்கூடாது என்பது இதன் அர்த்தம்).

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய சிக்கல் இருப்பதால் புதிய எல்லைகள் நிர்ணயித்துச் செல்வது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். (எல்லாமே தீர்மானமாக இருக்க  வேண்டுமென்றால் மாகாண சபைக்கான தேர்தல் நடத்துவதற்கு முன்னர் அடுத்த பொதுத்தேர்தல் வந்துவிடும். எனவே மாகாண சபைத் தேர்தலுக்கு உத்தரவாதம் இல்லை).

அநுர குமாரவின் இந்திய விஜயத்தின் பலாபலன் – பிரதமர் மோடி சொன்னாராம், ஜனாதிபதி அநுர குமார அதனைக் கேட்டாராம் என்பதுவே. உனக்கும் பெப்பே, உனது அப்பனுக்கும் பெப்பே.

தொடர்புடைய செய்திகள்