தலைமைப் பொறுப்பிலிருந்து மாவை சேனாதிராஜா விலகியிருந்தால் அதில் மாற்றம் இருக்க முடியாது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவியில் மாவை சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கப்படவுள்ளது.
இதன் பொருட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ”மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அதனைக் கட்சியின் செயலாளர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அதன் பின்னர் பதவி விலகலை திரும்பப் பெறுவதாகக் குறிப்பிட்டு மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கின்றார்.
பதவி விலகல் செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. பதவி விலகி இரண்டு மாதங்களின் பின்னர் அதனை திரும்பப் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் எந்தப் பயனுமில்லை“ என சுமந்திரன் தெரிவித்தார்.