பியர் உற்பத்திக்காக வடக்கில் இருந்து பெருமளவான நெல்லை கொள்வனவு செய்து செல்வதாக வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
அதன் போதே அரிசி ஆலை உரிமையாளர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாதமைக்கு காரணம், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் நிர்ணய விலையில் விற்பனை செய்யாமல், அவற்றின் ‘லேபல்கள்’ மாற்றப்பட்டு அதிகரிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வடக்கு மாகாண விவசாயிகளின் நெல்லை வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பியர் உற்பத்திக்கும் கொள்வனவு செய்கின்றார்கள்.
அத்துடன் இங்கிருந்து அவர்கள் நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு சென்று திருப்பி எங்களுக்கு அதிக விலைக்கு வழங்குகின்றனர்.
எங்களுக்கு வங்கிகள் ஊடாக அதிகளவான கடன் வசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைக்கின்றது. இங்கு போதியளவு களஞ்சிய வசதிகள் இருக்கும் நிலையில், வங்கிகள் கடன் எல்லையை அதிகரித்து வழங்கினால் எம்மால் விவசாயிகளிடமிருந்து அதிகளவு நெல்லைக் கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும்.
மேலும், நெல் அறுவடைக்கு முன்னராகவே நெல்லுக்கான மற்றும் அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்வதன் ஊடாக இவ்வாறான நெருக்கடி நிலைமையைத் தவிர்க்க முடியும்
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் ஏற்கனவே ஆலைகளின் இருப்பிலுள்ள அரிசிகள் தற்போதைய நிலைமைக்குப் போதுமானளவில் இருப்பதாகவும் விலை அதிகரிப்பு இனி இருக்காது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அரிசியின் விலை 200 ரூபாவை விட நிச்சயம் குறைவடையும் என தெரிவித்தனர்.