இறைச்சிப் பொதியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது ! on Sunday, December 22, 2024
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை இளைஞர்கள், கடற்படையினரின் உதவியுடன் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் நேற்று சனிக்கிழமை (21) ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் வளர்த்து வந்த ஆடொன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில் நேற்று (21) விடுமுறையில் வீடு செல்வதற்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு படகில் சென்றுள்ளார்.
இதன்போது அவரது கையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ரெஜிபோம் பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் படகில் வந்த இளைஞர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கி குறித்த பெட்டியை சோதனை செய்தபோது, அதற்குள் ஒரு தொகை இறைச்சி காணப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் காணாமல்போன ஆட்டினை இறைச்சியாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் எடுத்துச் செல்வதாக இளைஞர்கள் அவ்வேளை குற்றம் சாட்டினார்கள்.
அதனால், மீட்கப்பட்ட இறைச்சியையும் பொலிஸ் உத்தியோகத்தரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட இறைச்சி, ஆட்டிறைச்சியா என்பதை கண்டறிந்த பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.