‘வ.உ.சிக்காக நடந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் இப்போது இல்லை’ சாகித்ய அகாடமி விருது வென்ற வேங்கடாசலபதி

சாகித்ய அகாடமி விருது, ஆ.ரா. வேங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908 நூல்

பட மூலாதாரம், A.r. Venkatachalapathy/ facebook

படக்குறிப்பு, “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908” என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

“திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908” என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒன்றின் ஆய்வு நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வ. உ. சிதம்பரனாரை ஆங்கிலேய அரசு கைது செய்ததை அடுத்து, 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து இந்நூல் பேசுகிறது.

அப்போது நடந்த போராட்டத்தில், காவல்துறையின் அடக்குமுறை காரணமாக, நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றக்கணக்கானோர் தண்டிக்கப்பட்டனர்.

”ஆனால், இந்த மாபெரும் எழுச்சி மறக்கப்பட்டுவிட்டது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வேங்கடாசலபதி, இந்த எழுச்சிக்கான நினைவு சின்னத்தை அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘கப்பலோட்டிய தமிழன்’ என்றழைக்கப்படும், வழக்கறிஞருமான, சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார், கடல்சார் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியிருந்த காலத்தில், இந்தியாவின் முதல் நீராவி கப்பல் நிறுவனத்தை 1906-ஆம் ஆண்டு உருவாக்கி வெற்றி கண்டவர்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக உள்ள வேங்கடாசலபதி, கடந்த 40 ஆண்டுகளாக வ. உ. சி. குறித்து ஆய்வு செய்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

‘ஆஷ் அடிச்சுவட்டில்’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ , ‘வ.உ.சி : வாராது வந்த மாமணி’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ள அவர், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக SwadeshiSteam என்ற நூலை அவர் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’ எனப் பதிவுசெய்தவருக்கு என் வாழ்த்துகள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சாகித்ய அகாடமி விருது, ஆ.ரா. வேங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908 நூல்

பட மூலாதாரம், X/@mkstalin

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியும் தனது வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது டெல்லியில் மார்ச் 8-ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருது தனக்கு கிடைத்தது எதிர்பாராதது என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்த வேங்கடாசலபதி, “சாகித்ய அகாடமி விருது கடந்த 40 ஆண்டுகளில் ஆய்வு நூல்களுக்கு வழங்கப்பட்டதில்லை. எந்தவொரு எழுத்தாளருக்கும் சாகித்ய அகாடமி விருது பெறுவது மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் ஆராச்சியாளர்களுக்கு அந்த வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் எதிர்பாராதது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது , இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்” என்றார்.

தமிழர்கள் அனைவருக்கும், வ.உ.சி.க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் உண்டு, அதனால் இந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாகித்ய அகாடமி விருது, ஆ.ரா. வேங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908 நூல்

பட மூலாதாரம், X/@ARV_Chalapathy

படக்குறிப்பு, இந்த விருது தனக்கு கிடைத்தது எதிர்பாராதது என்று கூறி வேங்கடாசலபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

1908ம் ஆண்டு என்ன நடந்தது?

1908-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வ.உ.சிதம்பரனாரை கைது செய்ததை அடுத்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சுதேசி இயக்கங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த காலம் அது.

சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் விடுதலை அடைந்ததை ‘ஸ்வராஜ்ய தினம்’ என்று அறிவித்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வ.உ.சி. பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தார்.

அரசின் தடையையும் மீறி அந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து அவர் மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள் மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

“காலை 10.30 மணியளவில், திருநெல்வேலிப் பாலம் என்றழைக்கப்பட்ட வீரராகவபுரம் என்ற ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் கடைகள் மூடப்பட்டன. மக்களின் நடமாட்டமும் வண்டிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டன. இதற்குள்ளாக மூவாயிரம் நாலாயிரம் பேர் கும்பலாகத் திரண்டு, இந்து கல்லூரிக்குள் நுழைந்தனர்.

பின்னர் பட்டணத்துக்குள் கூட்டம் நுழைந்தது. நகர்மன்ற அலுவலகக் கட்டடத்துக்குள் அலுவலக ஆவணங்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொளுத்தப்பட்டன. கட்டடம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. அடுத்து அஞ்சலகத்துக்கு தீயிட்டனர், தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, நகர் மன்றத்துக்கு சொந்தமான மண்ணெண்ணெய் கிடங்கு தீக்கிரையானது. தொடர்ந்து இரண்டு மூன்று நாளுக்கு அது எரிந்துகொண்டே இருந்தது.” என்று வேங்கடாசலபதி திருநெல்வேலியில் நடந்தவற்றை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தூத்துக்குடியில் நடந்தவற்றை குறிப்பிடும் போது, “சந்தையிலிருந்த கடைகள் மூடப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர்களும் பெஸ்டு அண்டு கம்பெனியின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். நகர்மன்றத் தோட்டி தொழிலாளர்களும், பிற தோட்டி தொழிலாளர்களும் வேலைக்கு போகாமல் நின்றனர். கசாப்புக் கடைக்காரரும் குதிரை வண்டிக்காரர்களும் கூட வேலை நிறுத்தம் செய்தனர். தெருக்களில் கூடிய மக்கள் தெருவிளக்குகளையும் உடைத்தனர்” என்று எழுதியுள்ளார்.

தங்களின் ஊதிய உயர்வு, குறைந்தபட்ச கூலி என்று பொருளாதார கோரிக்கைகள் இல்லாமல், கோரல் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தமே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் என்று பேராசிரியர் ஆ. சிவ சுப்ரமணியன் நிறுவியுள்ளதாக, இந்நூலில் வேங்கடாசலபதி சுட்டிக்காட்டுகிறார்.

சாகித்ய அகாடமி விருது, ஆ.ரா. வேங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908 நூல்

பட மூலாதாரம், X/@ARV_Chalapathy

படக்குறிப்பு, இந்த நூல் ஆங்கிலத்தில் ‘Swadeshi Steam’ என்ற பெயரில் வெளியானது

இதை ஆங்கிலேய அரசு கலகம் என்று கூறுவது தவறு என்கிறார் வேங்கடாசலபதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கலகம் என்பது கண்மூடித்தனமாக நடைபெறுவது, இலக்கு என்னவென்று தெரியாமல் தாக்குவது, ஆனால் 1908-ஆம் ஆண்டு நடைபெற்றது தன்னெழுச்சியான, தேர்ந்த இலக்குகள் கொண்ட, மக்களின் கொந்தளிப்பாகும். ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், முனிசிபல் அலுவலகம், பதிவாளர் அலுவலகங்களை தாக்கி, தீ வைத்தனர். ஆங்கிலேயர்களை சீண்டினார்கள். ஒரு ஆங்கிலேயர் எதிரில் வரும் போது ஜட்கா (குதிரை வண்டி) ஓட்டுநர் வழி கொடுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை வெறும் சீண்டல்கள் தானே தவிர, அவர்கள் ஆங்கிலேயர்களை தாக்கவில்லை. ஒரு தலைவருக்காக இரண்டு ஊர்கள் ஸ்தம்பித்துபோனது, வரலாற்றில் சாதாரண நிகழ்வல்ல. வ. உ. சி. ஒரு அசாதாரண தலைவராக இருந்தார்” என்று குறிப்பிடுகிறார்.

ஜட்கா (குதிரை வண்டி) ஒட்டுநர்கள், சவரம் செய்பவர்கள், கூலி தொழிலாளர்கள், இறைச்சி விற்பவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

இதனை ஆங்கிலேய அரசு கடுமையாக ஒடுக்கியது. போராட்டத்தில் பங்கேற்ற நான்கு பேர் திருநெல்வேலியில் சுட்டுக்கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டனர்.

மேலும், மக்களுக்கான ‘ஒட்டுமொத்த தண்டனை’ என்று திருநெல்வேலியில் ஆறு மாத காலம் காவல்படையினர் முகாமிட்டு இருந்தனர். மக்களிடமிருந்து தண்டனை வரி வசூலிக்கப்பட்டது.

“அதாவது, இனி ஒரு முறை இது போன்ற எழுச்சி உருவாகக் கூடாது என்று மக்களுக்கு பாடம் புகட்டுவது அதன் நோக்கமாகும்” என்கிறார் வேங்கடாசலபதி.

“நெல்லை எழுச்சி குறித்து அதிகபட்சமாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது குறித்து நூல் எழுதும் அளவு ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் வேங்கடாசலபதி. திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரி ஆஷ் உடைய வாரிசுகளை நேரில் சென்று பார்த்து வந்திருந்தார். ஒரு பிராந்திய மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்ற வரலாற்றாசிரியர்களை காண்பது மிக மிக அரிது. அது அவருக்கான முக்கியமான பலமாகும்.” என்கிறார் வேங்கடாசலபதியுடன் ஐந்து ஆண்டுகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணியாற்றிய பேராசிரியரும், வேலூர் புரட்சி மற்றும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த வரலாற்று நூல்களை எழுதியுள்ளவருமான, கே. ஏ. மணிக்குமார்

“இந்த எழுச்சி ஆங்கிலேய அரசால் மிக கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு, காந்திய சகாப்தம் தொடங்கியது, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த எழுச்சி அனைவருக்கும் மறந்துவிட்டது” என்று கூறும் வேங்கடாசலபதி, ”இந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் தற்போது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்கிறார்.

“ஒரு தூண் அல்லது கல்வெட்டு அமைக்க வேண்டும் என்று 2002-ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இப்போதும் அதே கோரிக்கை வைக்கிறேன். எழுச்சி தொடங்கிய இடங்களான நெல்லையில் இந்துக் கல்லூரி அருகிலும், தூத்துக்குடியில் மசூதிப்பேட்டை அல்லது வண்டிப்பேட்டை என்ற இடத்திலும் இந்த நினைவு சின்னங்களை அமைக்கலாம்” என்று தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.