404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் – கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
கேரள மாநிலம் முனம்பத்தில் வக்ஃப் வாரிய நிலம் தொடர்பாக மூன்றாவது மாதமாகத் தொடரும் போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக நடக்கும் முயற்சி இது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதை போராட்டக் குழுவினரும், பாரதிய ஜனதா மாநிலத் தலைவரும் மறுத்துள்ளனர். கேரள அரசு அமைத்துள்ள ஆணையம் தரும் அறிக்கைப்படி, இதற்குத் தீர்வு காணப்படும் என்று கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிபிசி தமிழிடம் உறுதியளித்துள்ளார்.
முனம்பம் கிராமத்திலுள்ள 404 ஏக்கர் நிலத்தின் மீதான உரிமை யாருக்கு? இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அழகான கடற்கரை கிராமம் முனம்பம். கொச்சி நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில், பிரபலமான செராய் கடற்கரை அருகில் இருக்கிறது இந்தக் கிராமம். பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் வாழும் இந்த கிராமத்தில் மீன்பிடித் தொழில், இறால் வளர்ப்பு ஆகியவையே பிரதான வாழ்வாதாரம்.
இவர்களின் வாழ்க்கை, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோஷங்கள், உண்ணாவிரதம், ஊர்வலங்கள் என்று போராட்டமயமாக மாறியுள்ளது. அவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சொந்த வீடுகளும், நிலங்களும் அவர்களுக்குச் சொந்தமானதில்லை என்று வந்திருக்கும் அறிவிப்பே இதற்குக் காரணம்.
பள்ளிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட முனம்பம், சேரை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 404 ஏக்கர் நிலத்துக்கு கேரள மாநில வக்ஃப் வாரியம் உரிமை கோரியதுதான், இந்தப் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி. தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தின் பின்னணியை, தற்போதைய நிலையை அறிய, கேரளாவுக்கு நேரில் சென்று பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது.
போராட்டக்களமாக மாறியுள்ள தேவாலய வளாகம்
முனம்பம் கடற்கரை கிராமத்தில் இருக்கும் வேளாங்கண்ணி தேவாலய வளாகம்தான் போராட்ட களம். அங்குதான் பந்தல் அமைத்து, ‘நிலம்’ பாதுகாப்புக் குழுவால் (பூ சமரக்சன சமிதி) 60 நாட்களுக்கும் மேலாக, காலை முதல் மாலை வரை போராட்டம் நடக்கிறது.
தினமும் அங்கு ஏராளமான மக்கள் கூடுகின்றனர். காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை, பலரும் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
லத்தீன் கத்தோலிக்க தேவாலய பாதிரியார்கள் பாடல் பாடி உற்சாகப்படுத்துகின்றனர். பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வந்து ஆதரவு தெரிவித்துப் பேசுகின்றனர். தேவாலயம் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் போராட்டம் தொடர்பான சுவரொட்டிகளாலும், பேனர்களாலும், கட்சிகளின் கொடிகளாலும் நிறைந்துள்ளன.
போராட்டத்தின் 63வது நாளில் பிபிசி தமிழ் அங்கு சென்றது. அப்போது, 50 பேர் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் முன்களத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜிம்ஸி என்ற பெண். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கரில் எங்கள் வீடுகள் இருப்பது 114 ஏக்கர் நிலத்தில்தான். 400க்கும் மேல் கிறிஸ்தவ குடும்பங்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் என மொத்தம் 610 குடும்பங்கள் இருக்கின்றன. உயிரைப் பணயம் வைத்துச் சேமித்து, கடன் வாங்கிக் கட்டிய வீட்டை திடீரென எங்கள் நிலமென்று யாரோ கூறுவதை எப்படி ஏற்பது?” என்றார்.
இப்போது தங்கள் வீடுகளுக்கு நிலவரியை ஏற்க மறுப்பதால், வங்கியில் வீட்டை அடமானம் வைத்து, பிள்ளைகளின் திருமணம், கல்விக்குக்கூட கடன் வாங்க முடியவில்லை என்கிறார் ஜிம்ஸி. “எங்கள் வீடுதான் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தும், அதை வைத்து கடன் வாங்க முடியாததால் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குஞ்சுமோன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ”முனம்பம் கிராமமே தங்களுடையது என்று வக்ஃப் வாரியம் உரிமை கோருகிறது. 2022இல் இந்த இடம் தங்களுடையது என்று வக்ஃப் வாரியம் சொன்ன பிறகு வங்கிக் கடன், கட்டட அனுமதி எதுவும் பெற முடியவில்லை” என்றார்.
முனம்பம் நிலம் யாருக்குச் சொந்தமானது?
வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம் குறித்து, இரு தரப்பிலும் பல தகவல்கள் தரப்படுகின்றன. பல்வேறு ஆவணங்களும் காண்பிக்கப்படுகின்றன. முனம்பம் நிலம் பாதுகாப்புக் குழுவின் சார்பில் பேசியவர்கள் பலரும் இதுகுறித்து ஆலுவா செயின்ட் ஜோசப் குருத்துவக் கல்லுாரியின் பேராசிரியரும், பாதிரியாருமான ஜோஷி மெய்யாட்டிலிடம் பேசுமாறு தெரிவித்தனர்.
நிலம் பாதுகாப்புக்குழு சார்பில், மலையாள ஊடகங்களில் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் அவரை, ஆலுவாவில் பிபிசி தமிழ் நேரில் சந்தித்தது. அப்போது அவர், முனம்பம் கிராமத்திலுள்ள 404 ஏக்கர் நிலத்துக்கு வக்ஃபு வாரியம் உரிமை கோர எந்த முகாந்திரமும் இல்லை என்று பல்வேறு ஆவணங்களைக் காண்பித்து, விரிவாக விளக்கினார்.
அவரது கூற்றுப்படி, போராட்டக் குழுவினரின் கூற்றுப்படி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக முனம்பம் பகுதியில், மீனவ மக்கள், புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். 1902ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னர், இந்த நிலங்களை அப்போதிருந்த முக்கிய வர்த்தகரான மூசா சயிட்டுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.
“அவருடைய மருமகன் சித்திக் சயிட், 1950ஆம் ஆண்டில் கோழிக்கோட்டில் உள்ள ஃபரூக் கல்லூரிக்கு இந்த நிலங்களை கல்வி மற்றும் சமூகப் பணிக்காக தானப் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். 1960களில் அங்கிருந்த மக்களை வெளியேற்ற முயன்று முடியாததால், இந்த நிலங்களை அதே மக்களுக்கு கல்லுாரி நிர்வாகம் விற்றுவிட்டது” என்கிறார் ஜோஷ் மெய்யாட்டில்.
கடந்த 2009ஆம் ஆண்டில் கேரள அரசால் நியமிக்கப்பட்ட நிசார் ஆணையம், முனம்பம் நிலம் வக்ஃப் வாரிய சொத்து என்று அறிவித்து, அந்த நிலத்தை மீட்டெடுக்கப் பரிந்துரைத்தது.
கடந்த 2019ஆம் ஆண்டில், ஆணையப் பரிந்துரையின்படி, வக்ஃப் சட்டம் 1995 பிரிவு 40 மற்றும் 41இன் கீழ் அந்த நிலத்தை வக்ஃப் சொத்தாக கேரள வக்ஃப் வாரியம் அறிவித்தது. ஆனால், வக்ஃப் வாரிய நடவடிக்கையை கேரள அரசு நிராகரித்தது. அந்த நடவடிக்கைக்கு வக்ஃப் வாரியம் தடை பெற்றது. அதற்குப் பின்பே, போராட்டம் வெடித்துள்ளது.
”அப்போது 225 ரூபாய்க்கு விற்ற ஒரு சென்ட் நிலத்தின் இப்போதைய விலை 10 லட்ச ரூபாய். கடற்கரை சுற்றுலாவில் பெரும் வருவாய் வருவதால் இங்கிருந்து மக்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது.
அந்த இடம் கல்லுாரி நிர்வாகத்துடையதுதான். நிலம் பரிமாறப்பட்ட ஒப்பந்தத்தின் தலைப்பு, வக்ஃப் பெயரில் இருந்தாலும் அந்த இடம் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானதில்லை” என்றார் ஜோஷி மெய்யாட்டில்.
வக்ஃப் வாரியம் 404 ஏக்கருக்கு உரிமை கோரி வரும் நிலையில், அரபிக் கடலில் ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக இப்போது பாதி நிலம் கடலுக்குள் சென்றுவிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு கேரள வருவாய்த் துறை கணக்கெடுப்பின்படி, 404 ஏக்கரில் 225 ஏக்கர் நிலம் மட்டுமே மீதம் இருப்பதாக இவர்கள் தரப்பு வாதிடுகிறது.
போராட்டக் குழுவினரின் வாதங்களை, கேரள மாநில வக்ஃப் வாரியத்திடம் பிபிசி தமிழ் முன் வைத்து விளக்கங்களைக் கோரியது. கொச்சி கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள வக்ஃப் வாரிய அலுவலகத்தில் இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கிய வாரியத்தின் சட்ட அலுவலர் மஞ்சு, ”அந்த நிலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் உள்பட வெவ்வேறு நீதிமன்றங்களில் 9 வழக்குகள் நடந்து வருகின்றன. கடைசியாக வந்த பரவூர் சார்பு நீதிமன்ற உத்தரவிலும் அது வக்ஃப் வாரிய நிலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிலம் தொடர்பாக, கடந்த 1900ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை நடந்துள்ள பல்வேறு சட்டப்பூர்வ நகர்வுகள் குறித்த பட்டியல், பரவூர் சார்பு நீதிமன்ற உத்தரவு, வக்ஃப் தீர்ப்பாயம் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மனுக்கள் குறித்த விவரங்களையும் வஃக்ப் வாரிய சட்ட அலுவலர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
கேரள அரசின் நீதி ஆணையம்
இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த கேரள மாநில வக்ஃப் வாரிய தலைவர் எம்.கே.ஷக்கீர், ”தாய்ப் பத்திரங்களின்படி, அது வக்ஃப் வாரிய நிலம்தான். சார்பு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளும் அதை உறுதி செய்துள்ளன.
வக்ஃப் வாரிய சட்டப்படி, வாரிய நிலத்தை யாராவது பத்திரப்பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது வாரியத்தின் கடமை. இது ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை” என்றார்.
முனம்பம் மக்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இதுபற்றி இரு தரப்பிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் தலைமையில் நீதி ஆணையத்தைக் கடந்த நவம்பர் 22 அன்று கேரள அரசு நியமித்து, 3 மாத அவகாசமும் வழங்கியுள்ளது.
ஆணைய அறிக்கை வரும் வரை யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வக்ஃப் வாரிய நடவடிக்கைகளுக்குத் தடை கோரி, ‘நிலம்’ பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் பென்னி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய ஜோசப் பென்னி, ”நிரந்தரத் தடை இன்னும் கிடைக்கவில்லை. அடுத்த வாரத்தில் ஒரு முக்கிய உத்தரவை நீதிமன்றம் தருமென்று காத்திருக்கிறோம்” என்றார்.
போராட்டக்களத்துக்கு நேரில் வந்து மத்திய அமைச்சர் ஆதரவு
மத்திய அமைச்சர் ஷோபா, போராட்டக்களத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததோடு, ”2019ஆம் ஆண்டு வரையிலும் முனம்பம் மக்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்துக்கு வக்ஃப் வாரியம் உரிமை கோருகிறது. இந்த விவகாரம் குறித்து வக்ஃப் சட்டத் திருத்த மசோதா பற்றி ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சரான சுரேஷ்கோபி, வக்ஃப் வாரியத்தின் இந்த நடவடிக்கை “மிருகத்தனமானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் உள்பட பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு தலைவர்களும், இந்தப் பிரச்னைக்கு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறுவது மட்டுமே ஒரே தீர்வு என்கின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தை வைத்து கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு முயல்வதாக சில முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவும் முனம்பம் பிரச்னையும்
பிபிசி தமிழிடம் பேசிய ஜமாத் இஸ்லாமி அமைப்பின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர் ஜமால், ”அங்கிருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றக் கூடாது என்பதுதான் இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளின் நிலைப்பாடு. ஆனால் இந்தப் பிரச்னையை, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுடன் இணைத்து பாரதிய ஜனதா பரப்புரை செய்கிறது. சில கிறித்தவ அமைப்புகளின் நிர்வாகிகளுடைய உதவியுடன், கேரளாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை இரு துருவங்களாகப் பிரிக்க முயல்கிறது” என்றார்.
இதை மறுத்த கேரள பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன், ”இது, திசை திருப்பும் குற்றச்சாட்டு. அந்த நிலத்துக்கு வக்ஃப் வாரியம் உரிமை கோருவது சட்டவிரோதமானது. இதைத்தான் நாங்கள் அதீத அதிகாரம் என்கிறோம். அதற்காகவே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வருகிறோம்” என்றார்.
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஒரு மனதாக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
“ஆதலால் முனம்பம் மக்களுக்கு உண்மையான பாதுகாப்பை பாரதிய ஜனதாவால் மட்டும்தான் தர முடியும்” என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
முஸ்லிம் அமைப்புகளின் குற்றச்சாட்டை மறுத்த நிலம் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் பென்னி, ”அது தவறான கருத்து. 2022 ஜனவரி 13 அன்று வக்ஃப் வாரியத்திடம் இருந்து, முதன்முதலில் எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது, இந்த சட்டத்திருத்த மசோதாவே வரவில்லை. 2024 தேர்தலில் பாரதிய ஜனதா வென்ற பிறகே வந்துள்ளது” என்றார்.
ஆனால், முனம்பம் நிலப் பிரச்னைக்கும், மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஹிபி ஈடன்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய ஈடன், ”முனம்பம் நிலப் பிரச்னை குறித்து, பல ஆண்டுகளாகப் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன. அது சட்டப்பூர்வமாகத் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம். ஆனால் மத்திய அரசால் கொண்டு வரப்படும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் எதிர்ப்பதற்குக் காரணம், அது முழுக்க முழுக்க சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதுதான்” என்றார்.
அந்த மசோதா நிறைவேற்றப்படுவதால், முனம்பம் மக்களுக்கு எந்த வகையில் சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கேள்வி என்று கூறும் ஈடன், ”சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அதனால் முனம்பம் நிலப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடாது” என்கிறார்.
மாற்று இடம் கொடுப்பது பிரச்னையை தீர்க்குமா?
பிபிசி தமிழிடம் பேசிய கொச்சி மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் சுரேந்திரன், ”கேரள மக்கள் அமைதியை விரும்புபவர்கள். அதனால் மோதல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. நான் காவல் ஆணையராக இருந்தபோதே இந்தப் பிரச்னை கிளம்பிவிட்டது. அப்போது வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருந்தவர், யாருடைய வீட்டையும் காலி செய்ய தங்களுக்கு விருப்பமில்லை என்றார்.
இப்போதும் பிரச்னை எழாது; விரைவில் உள்ளாட்சித் தேர்தலும், ஓர் ஆண்டுக்குப் பின் சட்டமன்றத் தேர்தலும் வருவதால்தான் இந்த விவகாரம் கவனம் பெறுகிறது” என்றார்.
இதை ஒப்புக் கொண்ட வக்ஃப் வாரியத் தலைவர் எம்.கே.ஷக்கீர், ”அங்கே 600 ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், 12 தொழில் நிறுவனங்கள்தான் முக்கிய ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள்தான் வக்ஃப் வாரிய நிலத்தை வைத்துப் பெரிய அளவில் வருவாய் பார்க்கிறார்கள்,” என்றார்.
இந்தப் பிரச்னைக்கு வாரியம் முன்வைக்கும் தீர்வு குறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, ”அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடங்களைத் தர வேண்டும் அல்லது வக்ஃப் வாரியத்துக்கு மாற்று நிலம் தர வேண்டும். அதற்கு ஆணையம் அறிக்கை தரும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்” என்றார்.
முனம்பம் நில விவகாரம் குறித்து கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மானிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”அரசால் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. ஆணையம் இரு தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்து, ஒரு முடிவை அறிவிக்கும்.”
“அதன் பிறகே என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அரசால் முடிவு செய்ய முடியும். அதுவரை வேறெதையும் நான் தெரிவிக்க இயலாது” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.