மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை செலுத்தப்படும் !

by wamdiness

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று காலை (20) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், நெக்டா, நாரா நிறுவனப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமரும் கலந்துகொண்டார்.

ஆரம்ப உரையாற்றிய ஆளுநர்,

வடக்கு மாகாணத்தின் பிரதான பொருளாதார வளமாக விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இருக்கின்ற எனவும் அந்தத் தொழிலை முன்னெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். மீனவ சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது தனக்குத் தெரியும் எனவும், அவை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, கடற்றொழில் அமைச்சருக்குப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவர் ஊடாக எதிர்காலத்தில் இங்கு அடையாளம் காணப்படும் விடயங்களை தீர்த்து வைக்க முடியும என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மீனவ சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. அதனால் ஏற்படும் கடல்வளப் பாதிப்பு மற்றும் ஏனைய தொழிலை முன்னெடுக்கும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இதேவேளை இதுவரை வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளை மீளாய்வு செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

மேலும் வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பினர் பாஸ் நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் மீனவ சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மீனவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எதிர்கொள்ளும் இழப்புக்கள் மற்றும் அவற்றுக்கு இழப்பீடுகள் வழங்கப்படாமை தொடர்பிலும் மீனவ சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். சட்டத்தால் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை முன்னெடுக்கும் மீனவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுதில்லை எனவும் இதனால் கடல்வளம் அழிந்து செல்வதாகவும் மீனவ சமூகப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் சில பிரதேசங்களில் வான்தோண்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் மீனவ சமூகப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

மயிலிட்டித்துறைமுகத்தில் 137 இந்தியப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் அந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடி தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

கிராமிய சங்கம் மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரு அமைப்புக்கள் மீனவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதால் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாகவும் மீனவ சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

கலந்துரையாடலின் இறுதியில் கருத்து வெளியிட்ட ஆளுநர், கடந்த காலங்களில் இங்கு எவ்வாறான விடயங்கள் நடைபெற்றன என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்காலத்தில் இங்கு ஆராயப்பட்ட விடயங்களின் தொடர்நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்