பீட்ரூட் ஜூஸ் ‘அதிசய’ பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?

பீட்ரூட், உடல்நலம், உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள் சிலர் தடகள வீரர்களின் செயல்திறன் அதிகரிப்பிற்கு பீட்ரூட் உதவும் என நம்புகிறார்கள்
  • எழுதியவர், கேக்னி ராபர்ட்ஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்

தடகள வீரர்கள், தங்களது செயல்திறனை அதிகரிப்பதற்கான வெவ்வேறு முறைகள் மற்றும் கூடுதல் ஊட்டச்சத்து மருந்துகளை நீண்ட காலமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் அதிகம் பேசப்படாத, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறியாக பீட்ரூட் உள்ளது. பீட்ரூட் சாறில் நைட்ரேட்டுகள் நிரம்பியுள்ளன.

ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சிலர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு தடகள வீரர்களுக்கு இது உதவும் என்று நம்புகிறார்கள்.

ஒருவரின் செயல்திறனை இயற்கையாக மேம்படுத்தும் பானமாக பீட்ரூட் சாறை கருத முடியுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரையன் மேகன்ஸ், நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு செமி-ப்ரோ சைக்கிளிஸ்ட். இவர்கள், சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொள்பவர்கள் ஆனால், முழுநேர தொழில்முறை போட்டியாளர்கள் அல்ல. பீட்ரூட் சாறு, சைக்கிள் பந்தயங்களில் தனது செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது என்று அவர் நம்புகிறார்.

மேலும், தனது மனைவியுடன் இணைந்து நடத்தும் காபி ஷாப்பில், பீட்ரூட் சாறை விற்பனை செய்கிறார்.

பீட்ரூட் சாறு அதிசய பானமா?

“பீட்ரூட் சாறு நிச்சயமாக அதிசய பானம் அல்ல. இருப்பினும், விளையாட்டு செயல்திறனில் இது ஓரளவு உதவுகிறது என்று நான் நம்புகிறேன். விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே தங்களால் முடிந்தவரை பயிற்சி எடுக்கிறார்கள், வெற்றிபெற அனைத்தையும் செய்கிறார்கள் என நினைக்கிறேன். அப்படியிருக்கையில், இந்த பீட்ருட் சாறை கூடுதல் ஊட்டச்சத்துக்காக குடிப்பதில் தவறில்லை.” என்கிறார் பிரையன் மேகன்ஸ்.

அதனால்தான் நிறைய விளையாட்டு வீரர்கள் பீட்ருட் சாறை பயன்படுத்துகிறார்கள் என்று தான் கருதுவதாக பிரையன் கூறுகிறார்.

நிபுணர்கள் கிறிஸ்டின் ஜோன்விக் மற்றும் டாக்டர் சமேஃப்கோ லுடிடி ஆகியோர், பீட்ரூட்டின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி குறித்து விளக்குகிறார்கள்.

வெறுமனே ஒரு குவளை பீட்ரூட் சாறைக் குடிப்பதன், நமது உடலின் செயல்திறன் அதிகரிக்கும் என்று சொல்ல முடியுமா?

“ஊட்டச்சத்துக் காரணங்களுக்காக பீட்ரூட் சாறை குடிப்பது என்பது உண்மையில் பழைய முறை ஒன்றும் அல்ல.” என்கிறார் நார்வேஜியன் ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட் சயின்சஸில் பணியாற்றும் கிறிஸ்டின் ஜோன்விக்.

“கடந்த 2012 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில், ஓட்டப் பந்தய வீரர் மோ ஃபரா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றபோது இதுதொடர்பான விவாதம் தொடங்கியது. அந்த காலக்கட்டத்தில் தான் பீட்ரூட் ஜூஸ் பயன்படுத்தியதாக மோ ஃபரா கூறினார். பீட்ரூட் சாறு உண்மையில் செயல்திறனை மேம்படுத்துமா என்பதை அறிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமாக இருந்தனர்.” என்கிறார் கிறிஸ்டின்.

பீட்ரூட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் போது நமது தசைகள் மற்றும் ரத்தத்தின் செயல்திறனில் முன்னேற்றம் உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன

செயல்திறனை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள்

இதுகுறித்துப் பேசிய ஊட்டச்சத்து நிபுணர் லுடிடி, “இந்தக் கதைக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபுறம், தனிப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இது எப்படி வேலை செய்கிறது? மறுபுறம், அறிவியல் பார்வையில் இருந்து இது எப்படி வேலை செய்கிறது என்ற கேள்வி?” என்கிறார்.

“பீட்ரூட் சாறு பற்றிய எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இது ஒருவரின் செயல்திறனை இயற்கை முறையில் மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் கொண்ட ஒரு பானம் என்பது தான்.” என்றும் கூறுகிறார் லுடிடி.

“அதனால்தான் நான் அதைப் பயன்படுத்துகிறேன்.” என்கிறார் பிரையன்.

மேலும், “நான் பீட்ரூட் சாறு பயன்படுத்தும் விதத்தையும் கவனிக்க வேண்டும். முக்கியமான பந்தயங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன், ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் எடுத்துக்கொள்கிறேன். பின்னர், பந்தய நாளின் காலை வேளையில் ஒரு கிளாஸ் சாறு எடுத்துக்கொள்கிறேன். பிறகு பந்தயத்திற்கு இரண்டு மணிநேரங்கள் முன் ஒரு கிளாஸ் சாறு. இந்த வகையில் அது எனக்கு சிறப்பாக வேலை செய்கிறது” என்று கூறுகிறார் பிரையன்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு அணிகளுக்கான பயிற்சி திட்டங்களை தயாரிக்கும் போது, ஊட்டச்சத்து நிபுணர்கள் இப்போது பெரும்பாலும் நைட்ரேட் அளவைக் கருத்தில் கொள்கின்றனர்.

பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது நமது தசைகள் மற்றும் ரத்தத்தின் செயல்திறனில் முன்னேற்றம் உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன.

பிரையன் மேகன்ஸ்

படக்குறிப்பு, பீட்ரூட் சாறு, சைக்கிள் பந்தயங்களில் தனது செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது என்று பிரையன் மேகன்ஸ் நம்புகிறார்

விளையாட்டு வகையைப் பொறுத்து நன்மைகள் மாறுபடுமா?

ஆனால், எந்த வகையான விளையாட்டு என்பதைப் பொறுத்து பீட்ரூட் சாறின் இந்த நன்மைகள் மாறுபடுமா?

“பல்வேறு வகையான விளையாட்டு வீரர்களை கண்காணித்து, நாங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டோம். இந்த பீட்ரூட் சாறு மூலம் அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதா என்பதை அறிய ஆய்வு செய்தோம்.” என்கிறார் கிறிஸ்டின்.

ஒலிம்பிக் ஸ்பிரிண்ட் டிராக் சைக்கிள் போட்டியின் தேர்வுக்காக அவர்கள் இதைச் செய்தார்கள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் சைக்கிள் வீரர்களை இதில் ஈடுபடுத்தினார்கள்.

அதேசமயம், எப்போதாவது சைக்கிள் ஓட்டுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்த ஒரு குழுவையும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தினார்கள்.

அவர்கள் அனைவரும், குறுகிய நேர சைக்கிள் ஓட்டும் சோதனைகளில் (Sprint tests) மீண்டும் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டனர்.

விளையாட்டு வீரர்கள் 30 விநாடிகள் ஆல்-அவுட் ஸ்பிரிண்ட் செய்தனர், பின்னர் நான்கு நிமிடங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மீண்டும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டியிருந்தது.

“இது மிகுந்த சோர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயல்பாடு. இதனால் அவர்களுக்கு மூச்சு வாங்கியது மற்றும் ஆக்சிஜன் அதிகமாக தேவைப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஆய்வில் சிறிய விளைவுகளை நாங்கள் கண்டோம். அவர்கள் சைக்கிள் ஓட்டும் வேகம் அதிகரித்திருப்பதை நாங்கள் கண்டோம்.” என்கிறார் கிறிஸ்டின்.

தங்களது அதிகபட்ச திறனை மூன்று பிரிவினரும் வெளிப்படுத்தினர் என்றும் அவர் கூறுகிறார்.

கிறிஸ்டின் ஜோன்விக்

படக்குறிப்பு, ஊட்டச்சத்து காரணங்களுக்காக பீட்ரூட் சாறு குடிப்பது என்பது பழைய முறை ஒன்றும் அல்ல என்கிறார் கிறிஸ்டின் ஜோன்விக்

பீட்ரூட் சாறின் உடனடி விளைவுகள், அதிக தீவிரம் கொண்ட விளையாட்டுகளைப் (கால்பந்து, கூடைப்பந்தாட்டம், ஹாக்கி, டென்னிஸ்) பொறுத்தவரை தெளிவாக உள்ளன.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் அதிக உடலுழைப்பு தேவைப்படும் சில விளையாட்டுகளில் (டிரையத்லான் போட்டிகள், நீண்டதூர சைக்கிள் அல்லது நீச்சல் போட்டிகள்) பீட்ரூட் சாறு அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று கூறுகின்றனர்.

“இப்போது இந்த விவாதம் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறுகிறது. அதாவது, பீட்ரூட் சாறு ஏன் சில சந்தர்ப்பங்களில் வேலை செய்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் வேலை செய்யவில்லை என்பதை விளக்க முடியும்.” என்கிறார் லுடிடி.

சர்வதேச அளவிலான திறன்வாய்ந்த வீரர்களை (Elite players – ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள்), இதுபோன்ற ஆய்வுக்காக உட்படுத்துவது எப்போதும் சவாலாக இருக்கும் என்கிறார் கிறிஸ்டின்.

ஏனென்றால், இந்த ஆய்வுகளில் பங்கேற்பதற்கு போதுமான ‘எலீட்’ வீரர்கள் கிடைப்பது எளிதல்ல.

“எனவே, பீட்ரூட் சாறு ஒரு இயற்கையான ஊட்டச்சத்து பானம் தானா என்ற விவாதத்தில், அத்தகைய எலீட் விளையாட்டு வீரர்கள் குறித்து பல ஆய்வுகள் இல்லை” என்று கூறுகிறார் கிறிஸ்டின்.

மேலும், “ஆனால் ஒரு ஆய்வு, உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளுக்காக பயிற்சி பெற்ற சர்வதேச அளவில் திறன் வாய்ந்த சில வீரர்களுக்கு பீட்ருட் சாறு பெரியளவில் உதவியாக இல்லை எனக் காட்டுகிறது. எனவே, எலீட் விளையாட்டு வீரர்கள் நைட்ரேட்டுகள் நிறைந்த ஊட்டச்சத்தால் பயனடைய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் குறுகிய, அதிக தீவிரம் கொண்ட விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை அதன் எலீட் வீரர்கள் பயனடைய முடியுமா என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தோம்.” என்கிறார்.

லுடிடி

படக்குறிப்பு, பலரும் இங்கு அதிசய பானங்களை அல்லது மருந்துகளை தேடி அலைகிறார்கள், ஆனால் அப்படி ஏதும் இங்கு இல்லை என்கிறார் லுடிடி

பீட்ருட் சாறின் பங்கு

“அதிலும் இந்த ஆய்வில், விளையாட்டின் தீவிரம் அதிகமானால், ஆக்சிஜன் ஒரு தடையாக இருக்கும் எனும்போது, பீட்ருட் சாறுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதைப் பார்த்தோம். பொழுதுபோக்காக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சீக்கிரமாக மூச்சு வாங்கும். இந்த விஷயத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.” என்கிறார் அவர்.

அதற்காக, எலீட் விளையாட்டு வீரர்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனக் கூறிவிட முடியாது என்றும், அதன் விளைவுகளைக் காண, சூழ்நிலைகள் தீவிரமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் கிறிஸ்டின்.

“குறிப்பாக சைக்கிள் ஓட்டுதலில், பெரும்பாலும் மிகச் சிறிய வேறுபாடுகள் தான் முக்கியமானவை. அதாவது, இது விநாடிகள் அல்லது மில்லி விநாடிகளின் விஷயமாகக் கூட இருக்கலாம்.” என்று லுடிடி கூறுகிறார்.

இதை ஒப்புக்கொள்ளும் பிரையன், “அதனால் தான் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொள்பவர்கள், ஒரு சிறு மாற்றம் கூட மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நம்பி, பயிற்சியில், ஊட்டச்சத்து விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.” என்கிறார்.

விளையாட்டுச் சமூகம், பீட்ரூட் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இது நம்மை வலுவாகவும் வேகமாகவும் மாற்றுவதற்கான திறவுகோலாக இருக்க முடியுமா?

“பலரும் இங்கு அதிசய பானங்களை அல்லது மருந்துகளை தேடி அலைகிறார்கள். ஆனால் அப்படி ஏதும் இங்கு இல்லை. ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் குறித்துப் பார்த்தால், இங்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. அதன் அடிப்படை என்பது ஓய்வு, உணவு, உடற்பயிற்சி. அதன் பிறகு தான், செயல்திறனை அதிகரிப்பதற்கான விஷயங்கள் வரும். இந்த கட்டமைப்பின் அடிப்படையில் தவறு உள்ளது என்றால் எந்தப் பயனும் இருக்காது.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லுடிடி.

“சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள், பயிற்சி எடுங்கள், போதுமான ஓய்வும் முக்கியம். அதன் பிறகு, செயல்திறனை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும், அது விரத முறையோ, பீட்ரூட் சாறோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி.” என்றும் லுடிடி கூறுகிறார்.

மோ ஃபரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012 லண்டன் ஒலிம்பிக்கில், மோ ஃபரா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றபோது, பீட்ரூட் சாறு தொடர்பான விவாதம் தொடங்கியது

பிரபலமடையும் பீட்ரூட் சாறு

பீட்ருட் சாறின் பயன்கள் குறித்துப் பேசும் கிறிஸ்டின், “பொதுவாக, பீட்ரூட் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கூறுவேன். நீங்கள் குறைவாக பயிற்சி பெற்றுள்ளீர்கள் என்றால், உங்கள் ஆக்ஸிஜனேற்றம் அல்லது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்களுக்கு அதிக சாத்தியம் உள்ளது. அதாவது இதற்கு முன்பு அதிகம் உங்கள் தசைகளுக்கு நீங்கள் அதிக பயிற்சி அளித்ததில்லை எனும்போது.” என்கிறார்.

அதிக உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில், எலீட் வீரர்கள் நைட்ரேட் ஊட்டச்சத்துக்களில் இருந்து பயனடையாமல் போகலாம், ஏனென்றால் அவர்கள் போதுமான வளர்ச்சியை அடைந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், “அதுவே அதிக தீவிரம் கொண்ட விளையாட்டுகள் என்று வரும்போது, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்தாலோ அல்லது தண்ணீரில் இருந்தாலோ, எந்த வகையான உடல் திறனை கொண்டிருந்தாலும் கூட, குறுகிய நேர சோதனைகளில் (Sprint) அல்லது மூச்சிரைக்கும்போது, இந்த பீட்ரூட் சாறு அல்லது நைட்ரேட்டுகள் உதவியாக இருக்கும்.” என்கிறார் கிறிஸ்டின்.

இது உயர்திறன் கொண்ட வீரர்களுக்கும் பொருந்தும் என்பதையும் கிறிஸ்டின் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு புதிய ஆய்வுக்குப் பிறகும், பீட்ரூட் சாறு பிரபலமடைந்து வருகிறது. செயல்திறனை அதிகரிக்கும் என்ற விளம்பரத்துடன் வரும் எத்தனையோ காப்ஸ்யூல்கள், பவுடர்கள், மற்றும் பலவற்றைக் காண முடிகிறது.

அப்படியிருக்க, ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உடற்பயிற்சி அல்லது விளையாட்டுப் போட்டிக்கு முன் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறை குடிப்பது செயல்திறனில் நமக்கு தேவையான ஒரு மாற்றத்தை அளிக்கக்கூடும் தான்.

“பீட்ரூட் சாறு நமக்கு ஓரளவு உதவுகிறது என்றாலும் கூட, அதை ஏன் மறுக்க வேண்டும்?” என்கிறார் பிரையன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு