ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது என்ன? பாஜக அஞ்சுவதாக பிரியங்கா காந்தி கூறியது ஏன்?
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடந்த தள்ளுமுள்ளு தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக தலைவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமையன்றும் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே கடும் அமளி ஏற்பட்டது.
அம்பேத்கர் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது குறித்தும், நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும் போராட்டம் நடத்தக்கூடாது என உறுப்பினர்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தியது குறித்தும் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து மக்களவை நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பாஜக எம்.பிக்கள் அனுராக் தாக்கூர், பன்சூரி ஸ்வராஜ், ஹேமாங் ஜோஷி ஆகியோர், ராகுல் காந்திக்கு எதிராக, வியாழக்கிழமை மாலை நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 109, 115, 125, 131, 351 ஆகிய பிரிவுகளின்கீழ், ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூர், “நாங்களும் எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். நாங்களும் போராட்டங்கள் நடத்தியுள்ளோம், ஆனால் நாகரீகமான முறையில் நடத்தியுள்ளோம். காங்கிரஸின் நடவடிக்கைகள் அவர்களின் சிந்தனைகள் மீது கேள்விகளை எழுப்புகிறது. ராகுல் காந்தியின் செயலால் காங்கிரஸும் வெட்கப்படுகிறது. ஆனால், அவர் மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “தன்னுடைய செயல் குறித்து ராகுல் வெட்கப்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் நாங்கள் வழக்குப் பதிந்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினரிடம் கோரியுள்ளோம்,” என்றார்.
இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் அவர், இந்நடவடிக்கையை திசைதிருப்பும் அரசியல் என தெரிவித்தார். “பாபா சாஹேப் பாரம்பரியத்தை காத்ததற்காக, ராகுலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது கௌரவமாக கருதுகிறோம். பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால், ராகுல் காந்தி ஏற்கனவே 26 எஃப்.ஐ.ஆர்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த புதிய எஃப்.ஐ.ஆர்., ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் சாதிய அரசியலுக்கு எதிராக நிற்பதிலிருந்து ராகுலையோ அல்லது காங்கிரஸையோ தடுக்காது” என கூறினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு எம்.பியை இடித்துத் தள்ளியதாக பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதாப் சாரங்கி செய்தியாளர்களிடம், “ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை கடுமையாக இடித்துத் தள்ளினார். அந்த எம்.பி. என் மீது விழ, நான் கீழே விழுந்தேன்” என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், பிரதாப் சாரங்கி காயத்துடன் சக்கர நாற்காலியில் தூக்கிச் செல்லப்படுவது தெரிகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு நடந்த விவகாரத்தில், ராகுல் காந்தி தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளார்.
“நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக நுழைய முயன்றேன். பாஜக எம்.பி. என்னை தடுக்க முயன்று, தள்ளினார். அது எங்களை பாதிக்காது. இது நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி கண்டனம்
இந்த அரசு அச்சம் அடைந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களிடம் பேசிய அவர் “இந்த அரசு அச்சம் அடைந்துள்ளது. இந்த அரசு அதானியின் விவகாரத்தை விவாதிக்க பயப்படுகிறது. அம்பேத்கர் குறித்த அவர்களின் எண்ணம் வெளிப்பட்டுவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.
அதனால் எதிர்க்கட்சியினர் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்புவதைக் கண்டு அஞ்சியுள்ளனர். இந்த விவகாரம் தேசிய நலன் தொடர்பானது. இந்த அரசியலமைப்பு அம்பேத்கரால் வழங்கப்பட்டது. மக்களாலும் நமமுடைய விடுதலைப் போராட்டங்களாலும் நமக்கு வழங்கப்பட்டது. அம்பேத்கர் மீதான அத்தகைய அவமதிப்பை இந்த நாடு ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது,” என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அரசு பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளது, உண்மையில் ராகுல் காந்தி யாரையும் (கீழே) தள்ளிவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“நான் அவருடைய சகோதரி. எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் ஒருபோதும் இத்தகைய செயலில் ஈடுபடமாட்டார். இந்த நாட்டினருக்கும் அது தெரியும். பொய்யான வழக்குகள் பதிவு செய்கின்றனர் என்பதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் பேசியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இன்று என்ன நடந்தது?
நாடாளுமன்றம் இன்று (டிசம்பர் 19) கூடுவதற்கு முன்னதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அவர்களில் பெரும்பாலானோர் நீல நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்த தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து மகர் துவார் வரை பேரணி நடத்தினர்.
மகர் துவார் என்பது, நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலை குறிக்கிறது.
அதன் பின்னர், ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். அங்கு, பாஜக எம்.பிக்கள் சிலர் அங்கு வந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி காயமடைந்தார். அவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி, மருத்துவமனைக்குப் கொண்டு செல்லும் காணொளி ஏஎன்ஐ செய்தி முகமையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பிரதாப் சாரங்கி செய்தியாளர்களிடம், “ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை கடுமையாக இடித்துத் தள்ளினார். அந்த எம்.பி. என் மீது விழ, நான் கீழே விழுந்தேன்” என்று கூறியிருந்தார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அர்ஜுன் ராம் மேக்வால், பியூஷ் கோயல் மற்றும் பிற பாஜக தலைவர்கள் பலரும் பிரதாப் சாரங்கியை ஆர்எம்எல் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.
ராகுல் காந்தியின் விளக்கம்
“நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக நுழைய முயன்றேன். பாஜக எம்.பி. என்னைத் தடுக்க முயன்று, தள்ளினார். எங்களுக்கும் தள்ளுமுள்ளு நடந்தது. ஆனால் அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. எங்களை அது பாதிக்கவில்லை. இது நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், எங்களுக்கு உரிமை இல்லை என்பது போல், பாஜகவினர் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.” என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.
அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, “இது தான் முக்கிய பிரச்னை. அவர்கள் அரசியல் சாசனத்தை தாக்குகின்றனர். அம்பேத்கர் பற்றிய கருத்துக்களை அவமதிக்கிறார்கள்” என்று ராகுல் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மாலையிலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
ராகுல் காந்தி கூறுகையில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், அமெரிக்காவில் அதானி மீதான வழக்கு விவகாரம் வந்தது. அதன் மீதான விவாதத்தை நிறுத்த பாஜக முயன்றது. அதானி விவகாரத்தில் விவாதம் நடக்கக் கூடாது, என்பதே பாஜகவின் அடிப்படை உத்தியாக இருந்தது.” என்றார்.
இப்போது அமித்ஷாவின் கருத்துகள் பிரச்னையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை பாஜக திசைத்திருப்ப முயற்சி செய்கிறது என்றும் விமர்சித்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தனைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அம்பேத்கருக்கு எதிரானது என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
“அவர்கள் அம்பேத்கரின் நினைவுகளையும் பங்களிப்புகளையும் அழிக்க விரும்புகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினோம். இன்று மீண்டும் ஒரு புதிய பிரச்னையை ஆரம்பித்துள்ளனர். நாங்கள் அமைதியாக அம்பேத்கர் சிலையிலிருந்து பேரணி நடத்தி, நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்று கொண்டிருந்தோம். பாஜக எம்.பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடவில்லை. அவர்கள் தொடர்ந்து அம்பேத்கரை அவமதிக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.” என்றும் கூறினார்.
மல்லிகார்ஜுன கார்கே மக்களவை சபாநாயகருக்கு கடிதம்
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், தன்னை பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டதாகக் குறிப்பிட்டு மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே இருந்தபோது பாஜக எம்.பி.க்கள் தன்னை தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவராஜ் சிங் செளஹான் கூறியது என்ன?
ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
“மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில், அவர்கள் செய்ததற்கு மன்னிப்பு கேட்பார்கள் என்று நினைத்தோம்.
ஆனால் அவர்கள் செய்யவில்லை. ஏன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள் என்று புரியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
“இன்று மகர் துவாரில் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தியபோது, ராகுல் காந்தி அங்கு வந்தார். பாதுகாப்புப் பணியாளர்கள் அருகில் இருக்கும் மற்றொரு வாயிலைப் பயன்படுத்தி உள்ளே நுழையச் சொன்னார்கள். ஆனால். அவர் வேண்டுமென்றே பாஜக எம்.பிக்கள் இருக்கும் பக்கம் வந்தார்,” என்று சிவராஜ் சிங் செளகான் கூறினார்.
அமித் ஷா பேசியது என்ன?
செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அமித் ஷா தனது உரையின்போது, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்று கூறினார்.
“இது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தி இருந்தால், ஏழு பிறவிகளுக்கும் சொர்க்கம் கிடைத்திருக்கும்” என்று அமித் ஷா தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்த உரைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அமித் ஷாவின் வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்படுவதாக பாஜக தரப்பு கூறுகிறது.
புதன்கிழமை பிற்பகலில், பிரதமர் நரேந்திர மோதியும் அமித் ஷாவின் பேச்சு குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார். “நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்த இருண்ட அத்தியாயத்தை அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார். அம்பேத்கருக்கு எதிராக இழைக்கப்பட்ட பாவங்களின் நீண்ட பட்டியலை காங்கிரஸ் கொண்டுள்ளது. அதில், அவரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்ததும் அடங்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
அமித் ஷா கொடுத்த விளக்கம்
அமித் ஷா, அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையான நிலையில், புதன்கிழமை மாலை இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
“காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து, கருத்துகளை முன்வைத்து வருகிறது, இது கண்டிக்கத்தக்கது” என்று அமித் ஷா கூறினார்.
“நாடாளுமன்றம் போன்ற நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக மன்றத்தில் விவாதம் நடைபெறும் போது, அது உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்துப் பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நான் வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன்” என்றார் அவர்.
“இதற்கு முன்பு அவர்கள் நரேந்திர மோதியின் கருத்துகளை திரித்து கூறினர். தேர்தலின் போது, எனது அறிக்கைகளை செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் திரித்தனர். அம்பேத்கரை ஒருபோதும் அவமதிக்க முடியாத கட்சியைச் சேர்ந்தவன் நான். அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம்” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு