கிரண் கவுர்: தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்
கிரண் கவுர்: தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்
“மக்கள் சுதந்திரமாக சந்தித்துக்கொள்ளும் வகையில் சாலைகளும் பாதைகளும் திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களைப் பிரிப்பது குற்றம்.” என்கிறார் கிரண் கவுர் குமன்.
பிரிட்டனில் வசிக்கும் கிரண் கவுர் குமன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிந்து கிடக்கும் தனது குடும்பத்தின் வேர்களை இணைக்க முயற்சிக்கிறார்.
கிரண் கவுரின் குடும்பத்தில் பாதி பேர் பஞ்சாபின் பதான்கோட் அருகே வசிக்கின்றனர், மறுபாதியினர் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள கஞ்சியான்வாலி கலன் கிராமத்தில் வசிக்கின்றனர்.
கிரண் கவுர், முதலில் இந்தியாவில் உள்ள தனது முன்னோர்களிடமிருந்து பாகிஸ்தானில் உள்ள கிராமத்தைப் பற்றி அறிந்துகொண்டார், பின்னர் பாகிஸ்தானின் கஞ்சியான்வாலி கலனுக்குச் சென்று பார்வையிட்டார்.
“பாகிஸ்தானில் உள்ள கிராமத்தைப் பற்றி எனது மாமா சந்தோக் சிங்கிடம் கேட்டேன். அவர் கூறிய அத்தனை இடங்களுக்கும் சென்று வருகிறேன். இதோ அந்த அரச மரமும் கிணறும். இந்த கிராமத்தின் மண்ணை என்னுடன் எடுத்துச் செல்வேன்.” என்கிறார் கிரண் கவுர் குமன்.
பிரிவினையின் காரணமாக தனது குடும்பம் அனுபவித்த வலியை கிரண் பகிர்ந்து கொள்கிறார். அவரது தாத்தா பகதூர் சிங் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக கிராமத்திற்கு செல்ல விரும்பினார், ஆனால் 1995இல் காலமானார்.
“பிரிவினை பற்றியும், அது நிரந்தரமானது என்பதையும் மக்கள் அப்போது அறியவில்லை. திரும்பி வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். எனது தாத்தா பகதூர் சிங் மற்றும் அவரது சகோதரர் வாதாவா சிங் இந்தியா வந்தனர், மற்றொரு சகோதரர் உஜாகர் சிங் பாகிஸ்தானில் இருக்க முடிவு செய்தார்.” என்கிறார் கிரண் கவுர் குமான்.
தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், தன் தாத்தா அவரது சகோதரர் பற்றிப் பேசுவதையும், அவருடனான பால்ய கால நினைவுகளையும், சகோதரரைப் சந்திக்க முடியாததன் சோகத்தையும் பகிர்ந்ததைக் கண்டு வளர்ந்ததாக கூறுகிறார் கிரண்.
பாகிஸ்தானில் உள்ள கிராமத்தின் மண்ணை கிரண் இந்தியாவுக்கு எடுத்து வந்தார். இப்போது அதை அவர் பதான்கோட்டில் வசிக்கும் தனது மாமா சந்தோக் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார்.
“இப்போது என் மாமாவின் கடைசி ஆசை, பாகிஸ்தானில் உள்ள அவரது கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்பது. அது எனது விருப்பமும் கூட” என்கிறார் கிரண்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது, பல குடும்பங்கள் கொல்லப்பட்டன மற்றும் லட்சக்கணக்கானவர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
ஆனால், கிரண் கவுரின் குடும்பத்தைப் போலவே, எல்லையைக் கடந்த பல குடும்பங்கள், இன்றும் கூட தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்க ஏங்குகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு