‘அவரை மன்னித்து விடுங்கள்’ – ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவருடைய ஓய்வு குறித்து அவரின் தந்தை அளித்த பேட்டியும் அதற்கு அஸ்வின் கொடுத்த விளக்கமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

“அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டிருக்கலாம், அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். எவ்வளவு காலத்துக்குதான் அவரும் பொறுத்துக்கொண்டிருப்பார்.” என அவருடைய தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதற்கு,தன்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது’ என விளக்கம் அளித்திருக்கிறார் அஸ்வின்.

அஸ்வினின் ஓய்வு விவாதமாவது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதேபோன்றுதான் ஆஸ்திரேலியத் தொடரின் நடுவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோன்ற முடிவே அஸ்வினும் எடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென டிச. 18 அன்று அறிவித்தார்.

குழப்பம், சந்தேகம்

அடுத்ததாக சிட்னி மற்றும் மெல்போர்னில் நடக்கவிருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது தெரிந்த நிலையில், அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளையும், குழப்பங்களையும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நிலையில், திடீரென இந்த முடிவை அவர் எடுத்தது ஏன் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை சென்னை வந்தார். வழக்கமாக, இந்திய அணியில் ஒரு வீரர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டால், வீரர்கள் அனைவருடன் நடக்கும் தேநீர் விருந்து, பிரியாவிடை கூட்டம் ஆகியவைகூட நடக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டதை பார்க்க முடிந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு நேற்று சென்னை வந்தார்

தந்தை வருத்தமும் அஸ்வினின் விளக்கமும்

அஸ்வின் டிசம்பர் 19ம் தேதி அன்று காலை சென்னை வந்தபின் அவரின் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேசமயம், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரின் தந்தை ரவிச்சந்திரன் தன்னுடைய சில வருத்தங்களை எழுப்பியுள்ளார்.

அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப் பேட்டியில் “என் மகன் தொடர்ந்து சீனியர் அணியில் விளையாட விருப்பமாக இருந்தார். ஆனால், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு எனக்குக் கடைசி நிமிடத்தில்தான் தெரிந்தது” என்றார்.

“ஓய்வு பெறுவது அவரின் விருப்பம் அவரின் முடிவில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.

அஸ்வினின் திடீர் மாற்றம், ஓய்வு அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“என்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது. அனைவரும் அவரை மன்னித்து, தனியே விடுங்கள்,” என்று அஸ்வின் எக்ஸ் தளத்தில் அவருடைய தந்தையின் கருத்து குறித்து அறிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது

பிளேயிங் லெவனில் இடம் மறுப்பு

வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் அணியில் பெஞ்சில் அமரவைப்பது பல காலமாக நடந்துள்ளது.

இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியத் தொடரின் முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அஸ்வின் அமரவைக்கப்பட்டார். அடிலெய்ட் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, பிரிஸ்பேன் டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு இடம் அளிக்கப்பட்டது.

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், “அஸ்வின் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், வாஷிங்டன் சுந்தருக்கு அளிக்கப்படும் வாய்ப்பும் கூட அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்குக் காரணமாக இருக்கலாம்” என விமர்சித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.