அம்பேத்கர், காங்கிரஸ் இடையிலான உறவு உண்மையில் எப்படி இருந்தது?

பி.ஆர். அம்பேத்கர், காங்கிரஸ், காந்தி, பாஜக

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அன்ஷுல் சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதற்கு பாஜக தரப்பில் இருந்து பதிலும் கூறப்பட்டு வருகிறது. எந்தவொரு விவகாரத்திலும் பாஜக மீது குற்றம் சுமத்தப்பட்டால், அதற்கு அமைச்சர்கள் தரப்பில் இருந்து பதில் வருவது என்பது, நரேந்திர மோதியின் ஆட்சியில் மிகவும் அரிதாகவே நடக்கின்ற ஒரு நிகழ்வாக உள்ளது.

பி.ஆர்.அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட கருத்து தொடர்பாக டிசம்பர் 18ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பை அமித் ஷா கூட்டியதும் அப்படி ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) அன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசியல் அமைப்பு குறித்து அமித் ஷா தன்னுடைய நீண்ட உரையை நிகழ்த்தினார். இதில் இடம்பெற்ற சில கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தன்னுடைய உரையில் அமித் ஷா, “இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை கூறியிருந்தால் ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்,” என்று கூறினார்.

அமித் ஷாவின் கருத்துக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, இவர்கள் இந்தியாவின் அரசியலமைப்பிற்கு எதிரானவர்கள். அம்பேத்கரின் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் என்று கூறினார்.

அமித் ஷாவுக்கு ஆதரவு தரும் விதமாக பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, தேர்தலில் போட்டியிட்ட அம்பேத்கரை தோற்கடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் காங்கிரஸ் செய்ததாகவும், அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியது.

அம்பேத்கர் மீதான நேருவின் வெறுப்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் அமித் ஷா கூறினார். ஆனால் உண்மையில், நேரு மற்றும் காங்கிரஸுடனான அம்பேத்கரின் உறவு எத்தகையது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மஹத் சத்தியாகிரகம் மூலம் கிடைத்த அங்கீகாரம்

கடந்த 1924ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு தலித்துகளின் நலனுக்காக அம்பேத்கர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதற்காக அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் பஹிஷ்க்ரித் ஹிதாகரினி சபா.

இதன் தலைவராக சர் சிமன்லால் சேடல்வாத் இருந்தார். அம்பேத்கர் நிறுவனராகப் பதவி வகித்தார்.

கல்வியைப் பரப்புவது, தலித்துகளின் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவது போன்றவைதான் இந்த சங்கத்தின் நோக்கமாக இருந்தது.

கடந்த 1927ஆம் ஆண்டு அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தை தலைமை தாங்கி வழி நடத்தினார். அதன் பிறகு தலித்துகளின் குரலாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

தலித் மக்களுக்குப் பொதுக் குளத்தில் தண்ணீர் குடிக்கவும், அதைப் பயன்படுத்தவும் உரிமைகள் வேண்டும் என்று இந்த சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. மஹத் என்பது மேற்கு மகராஷ்டிராவில் அமைந்துள்ள கொங்கன் பகுதியில் இருக்கும் ஒரு நகரம். இந்த சத்தியாகிரகம் அம்பேத்கரின் அரசியல் பயணத்தின் முதல் புள்ளி என்று அறியப்பட்டது.

எழுத்தாளர் கேஷவ் வாக்மரே, “மஹத் சத்தியாகிரகத்தின் மேடையில் வைக்கப்பட்டு இருந்த புகைப்படம் மகாத்மா காந்தியுடையது. அம்பேத்கர் இந்துத்துவத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். இதற்காக இந்து மதத்தில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களின் பங்களிப்பை அவர் விரும்பினார். அவர்கள் முன்னோக்கி வந்து இந்த சமூகத்தின் தீய சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தார்,” என்று கூறுகிறார்.

மேற்கொண்டு பேசிய வாக்மரே, “அம்பேத்கர், காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே நட்பு, வெறுப்பு இரண்டும் கலந்த உறவு இருந்ததாக” என்று சுட்டிக் காட்டுகிறார்.

காந்தியுடன் முதல் சந்திப்பு

பி.ஆர். அம்பேத்கர், காங்கிரஸ், காந்தி, பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இருக்க வேண்டுமென்று காந்தி விரும்பினார்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் பணியாற்றி வந்தார். அந்த நேரம் காந்தியும் இந்த மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தார். அவர்கள் தத்தமது பாணியில் பணியாற்றினார்கள்.

அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். ஏற்கெனவே காந்தி தலித் மக்களுக்காகப் பல காலம் உழைத்து வந்தார். அப்போது அம்பேத்கர் விவாதத்தின் மையப் பொருளாக மாறியிருந்தார்.

இருவரும் முதல்முறையாக ஆகஸ்ட் 14, 1931 அன்று மும்பையில் உள்ள மணிபவனில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

காங்கிரஸ் தலைவர் சசி தாரூர் தன்னுடைய அம்பேத்கர் – ஏ லைஃப் என்ற புத்தகத்தில் அந்த உரையாடலைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தலித்துகள் மீதான காங்கிரஸின் அனுதாபம் என்பது வெறும் சம்பிரதாயம்தான் என்று அம்பேத்கர் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தினார்.

அம்பேத்கரை சமாதானம் செய்ய முயன்ற காந்தி, தாய்நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் அம்பேத்கர் ஒரு சிறந்த தேச பக்தர் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அம்பேத்கர், “எனக்கு தாய்நாடு என்ற ஒன்று இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை நாயையும் பூனையையும்விட மோசமாக நடத்தும் இந்த மண்ணை நினைத்து எந்தவொரு சுயமரியாதை மிக்க ஒடுக்கப்பட்ட நபரும் பெருமை அடையமாட்டார்,” என்று கூறியுள்ளார்.

காந்தி-அம்பேத்கர் மற்றும் பூனா ஒப்பந்தம்

பி.ஆர். அம்பேத்கர், காங்கிரஸ், காந்தி, பாஜக

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, கடந்த 1954ஆம் ஆண்டு பாந்திரா தொகுதியில் நின்று மக்களவைத் தேர்தலைச் சந்தித்த அம்பேத்கர் இரண்டாவது முறையாக காங்கிரஸ் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்

கடந்த 1932ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்குப் பிறகு, தலித்துகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள் மற்றும் பிறருக்கு தனித் தொகுதிகள் பிரிட்டிஷ் அரசால் அறிவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பின்படி, மத்திய சட்டப் பேரவையில் தலித்துகளுக்கு 71 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தலித் மக்களுக்கு மட்டுமே உரிமைகள் வழங்கப்பட்டன. இதை காந்தி விரும்பவில்லை.

இதை எதிர்த்து, 1932 செப்டம்பரில், புனே எர்வாடா சிறையில் காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இது நாடு முழுவதும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

“நான் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறேன், ஆனால் காந்திஜி ஒரு புதிய திட்டத்தோடு வர வேண்டும்” என்று அம்பேத்கர் கூறினார்.

செப்டம்பர் 22 அன்று, காந்தியை ஏர்வாடா சிறையில் சந்தித்த அம்பேத்கர், “நீங்கள் எங்களுக்கு அநீதி இழைக்கிறீர்கள்” என்று கூறினார்.

அதற்கு காந்தி, “நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அதன் பிறகு பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்பதற்குப் பதிலாக தொகுதிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற முன்மொழிவுக்கு இருவரும் ப்புக் கொண்டனர். அம்பேத்கர் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி அன்று தலித்துகளுக்காக 147க்கும் மேற்பட்ட தனித்தொகுதிகளுடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பூனா ஒப்பந்தம் அம்பேத்கருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருந்த ஆழமான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியது. காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தலித்துகளின் உரிமைகள் தொடர்பான விஷயத்தில் சமரசம் செய்துகொண்டதாக அம்பேத்கர் நம்பினார்.

கடந்த 1955ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அம்பேத்கர், “மேற்கத்திய நாடுகள் ஏன் காந்தி மீது இவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளன என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில், அவர் இந்த நாட்டின் வரலாற்றுடைய ஒரு பகுதியே அன்றி அவர் ஒரு சகாப்தத்தை உருவாக்குபவர் இல்லை,” என்று கூறினார்.

அம்பேத்கர் மற்றும் காங்கிரஸின் அரசியல்

பி.ஆர். அம்பேத்கர், காங்கிரஸ், காந்தி, பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தலித்துகளின் உரிமைகளை சமரசம் செய்து கொண்டதாக அம்பேத்கர் நம்பினார்

இன்றும்கூட இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அம்பேத்கரின் பங்கு குறித்துப் பலவிதமான கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. 1942 முதல் 46 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் விடுதலைக்கான போராட்டம் உச்சத்தில் இருந்தது. அம்பேத்கர் வைசிராயின் அவையில் தொழிலாளர் துறை அமைச்சராகச் செயல்பட்டார்.

அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டபோது, அம்பேத்கர் மும்பை தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். இதில் காங்கிரஸின் வலதுசாரி தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர். சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் நிர்ணய சபையில் இருந்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினர்கள் ஆனார்கள்.

அதன் பிறகு ஜூலை 1946இல் அம்பேத்கர் வங்கத்தின் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் ஆனார். வங்கத்தின் முக்கிய தலித் தலைவரான ஜோகேந்திரநாத் மண்டல், முஸ்லிம் லீக்கின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹுசைன் ஷஹீத் சுஷ்ரவார்டி ஆகியோரின் உதவியுடன் குல்னா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியல் நிர்ணய சபைக்குச் சென்றார்.

அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்புவதற்காக, முஸ்லிம் லீக் அதன் வெற்றி வேட்பாளரை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்தது. பிறகு இடைத்தேர்தலில், முஸ்லிம் லீக் ஆதரவுடன் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இன்றைய வங்கதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அம்பேத்கரின் தொகுதி, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் வசம் சென்றது. அதன் பிறகு அரசியல் நிர்ணய அவையை அணுகுவது அவருக்கு சவால் மிக்கதாக இருந்தது.

மூத்த எழுத்தாளர் ராவ்சாஹெப் கஸ்பே, அம்பேத்கர் காந்தியுடைய விருப்பத்தின் பேரில் மீண்டும் அவைக்குச் சென்றதாகக் கூறுகிறார். “காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கருக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் நன்கு அறியப்பட்டவை. ஆனால் காந்திதான் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இருக்க வேண்டுமென்று விரும்பினார்.

ராஜேந்திர பிரசாத்தையும் வல்லபாய் படேலையும் அழைத்து, என்ன ஆனாலும் சரி அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற வேண்டும் என்று காந்தி கூறினார். அவர்கள் இருவரும் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார்கள். பிறகு மும்பை மாகாணத்தில் இருந்து அரசியல் நிர்ணய அவைக்கு அம்பேத்கர் அனுப்பப்பட்டார்,” என்கிறார் கஸ்பே.

அதன் பிறகு, அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகப் பல முக்கியமான பங்களிப்புகளை அம்பேத்கர் வழங்கினார்.

இந்து குறியீடு மசோதாவும் அம்பேத்கரின் ராஜினாமாவும்

காங்கிரஸ் அம்பேத்கர் உறவு எத்தகையது? வேண்டுமென்றே அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டரா?

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இந்து பெரும்பான்மை சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்கவில்லை.

ஒருபுறம், ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் கணவரை இழந்த பெண் மறுமணம் செய்ய முடியாது என்ற நிலை நீடித்தது. கணவரை இழந்த பெண்களுக்கு சொத்துகள் கிடைப்பதில் சவால்கள் இருந்தன. பெண்களால் விவாகரத்து செய்ய இயலாது.

அம்பேத்கருக்கும் இந்தப் பிரச்னைகள் நன்கு தெரியும் என்பதால் இந்து குறியீடு மசோதாவை அரசியல் நிர்ணய சபையில் 1947ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கான சொத்துரிமை, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

சமூக மறுமலர்ச்சிக்காகக் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக அந்த மசோதாவை தான் கருதுவதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் அந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த மசோதாவுக்கு ஆதரவான அம்பேத்கரின் விவாதங்களும், நேருவின் ஆதரவுகளும் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று அது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த 1951ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஜன சங்கமும், காங்கிரஸின் இந்து பிரிவும் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.

காங்கிரஸ் அம்பேத்கர் உறவு எத்தகையது? வேண்டுமென்றே அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டரா?

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதாவுக்கு எதிராக இரண்டுவிதமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாததால் அவர்களுக்கு இப்படி ஒரு மசோதாவை தாக்கல் செய்ய உரிமை இல்லை. இரண்டாவது இந்த சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றானதாக இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது பொது சிவில் சட்டம் தேவை என்ற கருத்தை முன்வைத்தனர்.

“கடந்த காலத்தில் இயற்றப்பட்ட, இந்திய நாடாளுமன்றத்தால் வருங்காலத்தில் நிறைவேற்றப்படுகிற எந்தவொரு சட்டத்தையும் இந்து குறியீடு மசோதாவின் முக்கியத்துவத்தோடு ஒப்பிட இயலாது. சமூகங்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருக்கும் சமமற்ற தன்மையே இந்து மதத்தின் ஆத்மா. அதைத் தொடாமல் விட்டுவிட்டு பொருளாதார பிரச்னைகள் தொடர்பான சட்டங்களை இயற்றுவது இந்திய அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் செயல், சாணக்குவியலின் மீது அரண்மனை கட்டுவது போன்றது,” என்று அம்பேத்கர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தும் அவரால் இந்த மசோதாவை சட்டமாக்க இயலவில்லை என்பதால் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

முதல் பொதுத்தேர்தலும் அம்பேத்கரின் தோல்வியும்

பி.ஆர். அம்பேத்கர், காங்கிரஸ், காந்தி, பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று நம்பிக்கை அளித்த மசோதாவை சட்ட அமைச்சராக இருந்தும் நிறைவேற்ற இயலவில்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி துவங்கி, 1952ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை இந்தத் தேர்தல் செயல்பாடுகள் நடைபெற்றன. முதல் தேர்தலில் 1500 நபர்கள் போட்டியிட்டனர். 50க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த அவர்கள் நாடாளுமன்ற மக்களவையின் 489 இடங்களுக்காகப் போட்டியிட்டனர்.

அவற்றில் 100 தொகுதிகள் இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதிகள். அதாவது ஒரே தொகுதியில் பொது மற்றும் தனிப் பிரிவில் இருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அம்பேத்கர் தன்னுடைய கட்சியான பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் இருந்து, பம்பாய் மாகாணத்தில் போட்டியிட்டார். அவரது தொகுதி வடக்கு மும்பை. அது இரட்டை உறுப்பினர்கள் தொகுதி.

காங்கிரஸ் அவருக்கு எதிராக நாராயண் கஜ்ரோல்கரை களமிறக்கியது. அதன் முடிவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

கஜ்ரோல்கர் 1,38,137 வாக்குகளைப் பெற்றிருந்தார். அம்பேத்கர் 1,23,576 வாக்குகளைப் பெற்றிருந்தார். அம்பேத்கர் 14,561 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அப்போதிருந்து காங்கிரஸ் வேண்டுமென்றே அபேத்கரை தோல்வி அடைய வைத்தது என்ற தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் இதை வேண்டுமென்றே செய்ததா? இதைப் புரிந்துகொள்ள, அப்போது நடந்த நிகழ்வுகளைக் காண்போம்.

எஸ்.கே.பாட்டீல் அப்போதைய மும்பை காங்கிரஸின் தலைவராக இருந்தார். அவருக்கும் மும்பையில் செல்வாக்கு இருந்தது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அம்பேத்கர் தனித்தொகுதியில் போட்டியிட்டால் காங்கிரஸ் அவருக்கு எதிராக யாரையும் களமிறக்காது என்று கூறினார்.

அப்படிக் கூறிய பிறகு ஏன் கஜ்ரோல்கரை களமிறக்கினார்கள்? ஆச்சாரியா ஆத்ரே அவருடைய மராத்தி புத்தகமான கன்ஹெச்சன் பானி புத்தகத்தில், “அம்பேத்கரின் கட்சி பொதுவுடமையாளர்களுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது பாட்டீலுக்கு பிடிக்கவில்லை. கோபமடைந்த அவர் கஜ்ரோல்கரை களம் இறக்கினார்” என்று குறிப்பிடுகிறார்.

பொதுவுடமைவாதிகளை தீவிரமாக எதிர்த்தவர் பாட்டீல். பொதுவுடமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் மீதான அவருடைய கோபம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இடதுசாரிகளால்தான் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார் என்ற பேச்சும் உள்ளது. இடதுசாரிகள், அம்பேத்கருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை கஜ்ரோல்கருக்கு சாதகமாக அமைந்தது.

ஏற்கெனவே உடல்நலக் குறைப்பாட்டால் அவதியுற்று வந்த அம்பேத்கருக்கு இந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்தது. பாம்பாய் மாகாணத்தில் இருந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்றார். ஆனால் அவருக்கு மக்களவைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து பாந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அம்பேத்கர் அங்கே போட்டியிட்டார். இருப்பினும் காங்கிரஸ் வேட்பாளரால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார்.

அதுவே அவர் போட்டியிட்ட இறுதித் தேர்தல். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1956ஆம் ஆண்டில் அம்பேத்கர் மரணமடைந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.